காந்தி - மறைந்து 73 ஆண்டுகளானாலும் தொடர்ந்து பலவகைகளில் நினைவுகூரப்படுபவர். அவர் மீதான விமர்சனங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால் இந்தியச் சூழலில் தொடர் வாசிப்புக்கும் தொடர் பகுப்பாய்வுக்கும் உள்ளாகும் மூன்று முக்கிய தலைவர்களில் காந்தியும் ஒருவர் (மற்ற இருவர் - அம்பேத்கர், பெரியார்). அந்தவகையில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காந்திய சிந்தனைகள் குறித்து நவீன ஆளுமைகளுடன் சிறிய உரையாடலை மேற்கொண்டோம். நவீன கோட்பாடுகளின் அடிப்படையில் காந்தியை உள்வாங்கிக் கொண்டு இயங்கும் நால்வரிடம் நான்கு கேள்விகளை முன்வைத்தோம். ஒரே கேள்விகளுக்கு நான்கு விதமான பதில்கள் என்ற ஆர்வம்தான் இந்த உரையாடலுக்கான மையப்புள்ளி.
தற்போது நம்முடன் உரையாடுபவர் எழுத்தாளர் கு. ஜெயபிரகாஷ். திருவண்ணாமலையைச் சேர்ந்த எழுத்தாளர். ‘முனைவர்’, ‘சா’ என இரு நாவல்களின் ஆசிரியர். கலை, இலக்கியம், சமூகம், சுற்றுச்சூழல் சார்ந்து கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகிறார்.
சமகாலத்தில் காந்தி எந்த வகையில் தேவைப்படுகிறார் அல்லது சமகாலப் பிரச்சனைகளுக்கு காந்தி எந்த மாதிரியான தீர்வாக இருக்கிறார்?
அவருடைய எளிமை, சமரசமற்ற வன்முறைக்கு எதிரான கொள்கை; மதச்சார்பற்ற கனமான ஒரு நம்பிக்கை; மத நல்லிணக்கத்துடன் தீண்டாமை ஒழிப்பும் மனித நேயத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்ததால் இன்றும் அவர் தேவை. அதேபோல் ஆன்மீகத்தில் வெள்ளை உடை / காவி உடை என்ற இரண்டில் வெள்ளை உடை உணர்த்தும் ஆன்மீகத்தையும் காவியின் அரசியலையும் அறிந்திட அவர் தேவைப்படுகிறார். கரோனா கால நெருக்கடியில் எல்லோரும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட சூழலில் காந்தியின் தற்சார்பு பொருளாதாரம் பெரிதும் அவசியமாகிறது.
காந்தி காலத்திலும் அதற்கு முன்பும் அகிம்சையையும் சகோதரத்துவத்தையும் பலர் பின்பற்றியிருக்கிறார்கள் (புத்தர், குருநானக், பெரியார், அம்பேத்கர் உட்பட). இதில் காந்தியின் அகிம்சை எந்தவகையில் வேறுபட்டது?
புத்தர், ஒரு மார்க்கம் கண்ட, மதம்சார் பார்வை கொண்டவராகப் பார்க்கப்பட்டார். பெரியாரும் அம்பேத்கரும் சமூக விடுதலைக்கான போராளிகள். ஆனால், காந்தி அனைவரையும் அரவணைத்து ஓரணியில் திரட்டுவதற்காக பெரும் முயற்சியில் ஈடுபட்டவர். அந்தவகையில் காந்தி சகிப்புத் தன்மையுடன் தனித்துவம் கொண்டவராக விளங்கினார்.
கு. ஜெயபிரகாஷ்
இறுதி காலத்தில், தன்னுடைய பல செயற்பாடுகள் குறித்து காந்திக்கு குற்றவுணர்வு இருந்ததுபோல் தோன்றுகிறது. இச்சமூகத்தை இதுவரையில் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது போலான கருத்து அவர் மனதில் இருந்ததாக தோன்றுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
எல்லா மனிதர்களுக்கும் உள்ள பிரச்சனை இது. எந்த மனிதரும் துவக்கத்தில் ஆர்வத்தின் காரணமாக செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். பின்னாளில் அதில் தவறுகள் ஏதும் இருந்தால் அவர்கள் மனதைப் புண்படுத்தும். இதை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மனசாட்சியோடு ஒன்றிய அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவது உண்டு. அந்த வகையில் காந்தியடிகளும் அதுபோன்ற நிலையில் இருந்துள்ளார் என்று கருதலாம்.
இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் காந்தி எதிர்மறையான பிம்பமாகவோ, 'பழைய ஆள்' பிம்பமாகவோதான் இருக்கிறார். வன்முறையைக் கொண்டாடுகிற இன்றைய, அடுத்த தலைமுறைக்கு எப்படி காந்தியை கொண்டு சேர்ப்பீர்கள்?
இன்றைய உலகம் சீரழிவு சிந்தனையுடன் சுயநல சக்திகளுடனும் பயங்கரவாதிகளுடனும் பயணித்துக்கொண்டிருக்கிறபோது காந்தி போன்ற தடைகள் எப்போதும் தேவை. அந்த தடை அவர்களை நல்வழிக்குள் இழுக்கும். காந்தியை கொன்றவர்களின் அரசியலை அறிந்திடவும் காந்தி தேவை. இன்றைய தலைமுறையிடம் virtual media வழியாக காந்தி குறித்து வாசிப்பதும் பேசுவதும், அவரை பற்றின எதிர்மறையான பார்வையில் இருந்து நேர்மறையான பார்வைக்கு இட்டுச் செல்லும். ஏனென்றால் எனக்கும் கூட அவரை விமர்சன பார்வையில் இருந்து முரண்பட்ட பின்னரே அவரை அறிந்து தெளிந்திட முடிந்தது.