திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், கூலித்தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள். இரண்டு மகள்கள், ஒரு மகனுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு மகள்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் தாய், தந்தையுடன் வசித்து வருகின்றனர். ராஜேந்திரனும் அவரது மனைவியும் தினமும் கூலி வேலைக்குச் சென்று விடுவார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகள் வீட்டிலும், 27 வயதான மற்றொரு மகள் ஆடுகளை மேய்க்க ஏரிக்கரைக்கும் செல்வார். அதே ஊரைச் சேர்ந்த 52 வயதான மாணிக்கம், 70 வயதான கோவிந்தன் இருவரும் அந்தப் பெண்ணை ஏமாற்றி ஏரியில் வைத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்தப் பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மகளிடம் விசாரித்தபோது, மாணிக்கம், கோவிந்தன் ஆகியோர் குறித்துக் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி புகார் தந்தார். ஆய்வாளர் சாந்தி, மாணிக்கத்தையும் கோவிந்தனையும் அழைத்து வந்துள்ளார். காவல்நிலையத்துக்கு வந்த கட்டப்பஞ்சாயத்து பிரமுகர்கள், ஆய்வாளரோடு சேர்ந்துகொண்டு, "பைத்தியக்கார பொண்ணுதானே, புகாரை வாபஸ் வாங்கு. ஊர்ல சொல்ற மாதிரி நடந்துக்க'' என ராஜேந்திரனை மிரட்டி அனுப்பி வைத்தனர்.
ஊர்ப் பஞ்சாயத்தில், மாணிக்கம், கோவிந்தன் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 4 லட்ச ரூபாய் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். மானம் போனதே என கோவை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார் மாணிக்கம்.
இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மாணிக்கம் தற்கொலை செய்துகொண்டதால் கோவிந்தன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பணம் வாங்கிக்கொண்டு பாலியல் வழக்கில் சமாதானம் பேசி அனுப்பி வைத்த வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிட்டனர். வாணியம்பாடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பொறுப்பு நாட்றம்பள்ளி காவல்நிலைய ஆய்வாளர் மலரிடம் தரப்பட்டது.
அந்த மலரையும் அடுத்த இரண்டு நாளில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். ஏன் என விசாரித்தபோது, நாட்றம்பள்ளி வெலக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நபருடன் நட்பு பாராட்டிக்கொண்டு வலம் வந்துள்ளார் மலர். இதுகுறித்து ஆய்வாளரின் ஆண் நண்பரின் மனைவி டி.ஜி.பி. அலுவலகத்துக்கே புகார் அனுப்பியுள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் நடந்த ரகசிய விசாரணையில் உண்மை எனத் தெரியவந்ததும் அக்டோபர் 10 ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
உமராபாத் காவல்நிலைய ஆய்வாளர் யுவராணியின் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்திலிருந்து மைனர் பெண் ஒருவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டது மைனர் பெண் என்பதால் போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு கட்டப்பஞ்சாயத்து கும்பல்களுடன் சேர்ந்து பெண்ணின் பெற்றோரிடம், "ஓடிப் போய்ட்டா, அப்படியே விடுங்க'' என பஞ்சாயத்து பேசியுள்ளார். உடனே பெண்ணின் பெற்றோர், உயரதிகாரிகளுக்கு புகாரனுப்ப, அக்டோபர் 12 ஆம் தேதி இன்ஸ்பெக்டர் யுவராணி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து கருத்தறிய, திருப்பத்தூர் எஸ்.பி. ஆல்பர்ட் ஜானை தொடர்பு கொண்ட போது, நமது லைனை எடுக்கவில்லை.
நேர்மையான அதிகாரிகள் சிலர் நம்மிடம், "காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து எஸ்.பி.க்கு உடனுக்குடன் தகவல் அனுப்ப, எஸ்.பி.சி.ஐ.டி. கான்ஸ்டபிள்கள் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாலியல் பலாத்காரப் புகாரை எஸ்.பி. கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தால், விவகாரத்தை சட்டப்படி அணுகி நடவடிக்கை எடுத்திருக்கலாம். பெண் ஆய்வாளர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் வலம் வருவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, குறிப்பிட்ட வழக்கில் மட்டும் எஃப்.ஐ.ஆர் போடுவது, பணத்துக்காக கட்டப்பஞ்சாயத்து செய்வதை எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவினர் எஸ்.பி.க்கு நோட் போட்டிருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படும் மாமூல் காரணமாக ஸ்டேஷனில் நடைபெறும் சட்டவிரோத சம்பவங்கள் குறித்து எஸ்.பி.க்கு தகவல் சொல்வதில்லை. தங்கள் லிமிட்டில் நடைபெறும் மணல் கொள்ளை, காட்டன் சூதாட்டம், கள்ளச்சாராயம், போலி மதுபான விற்பனை என அனைத்துக்கும் மாதா மாதம் கப்பம் வசூலித்து பங்கு பிரிக்கவா இந்த பிரிவு? ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுத்ததுபோல் அவர்களுடன் கை கோர்த்துக்கொண்டு செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் இப்பிரச்சனைகள் ஏற்படாது'' என்றார்கள். அவர்கள் சொல்வதும் சரிதானே!