ஸ்டெர்லைட் போராட்டம் ஏதோ ஜாதிக்காகவோ, மதத்திற்காகவோ நடந்த போராட்டம் இல்லை, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நடந்த போராட்டம். ஒரு சரியான அரசானது மக்களுக்கானதாக இருக்கவேண்டும் ஆனால் இந்த அரசு முற்றிலும் மக்களுக்கு எதிரானதாக உள்ளது. இதை மீண்டும் நிரூபித்துள்ளது. இப்படி ஒரு போராட்டம் நடந்தால் அதை எப்படி கையாளவேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது, அதைக்கூட மதிக்காமல் இந்த அரசு செயல்பட்டுள்ளதென்றால் இந்த அநீதியை என்னவென்று சொல்வது.
ஒரு போராட்டம் நடக்கிறது, அது சட்டத்திற்கு புறம்பானது என முடிவு செய்யப்பட்டால் முதலில் அதை மக்களிடம் கூறி கலைய சொல்லவேண்டும். போராட்டக்காரர்கள் அதை மதிக்கவில்லையென்றால் மாவட்ட ஆட்சியர் காவல்துறையிடம் கட்டாய நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்கவேண்டும். அதைத்தொடர்ந்து காவல்துறை முதல் முயற்சியாக கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்கவேண்டும், பின் மெதுவான தடியடி நடத்தி கலைக்கவேண்டும். அப்படியும் போராட்டக்காரர்கள் கலையவில்லையென்றால் தண்ணீர் பீய்ச்சி கலைக்க வேண்டும். இவையனைத்தையும் தாண்டி போராட்டம் நடந்தால் காவலர்கள் ஒலிபெருக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப் போகிறோம் உயிர் பலிகள் நடக்கலாம் அனைவரும் கலைந்துவிடுங்கள் என அறிவிக்கவேண்டும். முதலில் வானத்தை நோக்கி சுடவேண்டும் அறிவிப்பு வழங்கவேண்டும். அதன்பின்புதான் போராட்டக்காரர்களை நோக்கி சுடவேண்டும் அதுவும் இடுப்புக்கு கீழ்தான் சுட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் இந்த துப்பாக்கிச்சூடு குற்றங்களை தடுத்து நிறுத்துவதாகவே இருக்கவேண்டுமே தவிர, பழிவாங்குவதாக இருக்கக்கூடாது என்பதுதான்.
ஆனால் இவர்கள் இந்த நடைமுறைகள் எதையுமே பின்பற்றவில்லை என்பது மிகத்தெளிவாக தெரிகிறது. இது ஒரு அத்துமீறலாகவே இருக்கிறது. இது பழிவாங்குதல் என்பதையும் தாண்டி இதில் ஒரு குரோதம் வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற துப்பாக்கிசூடுகளின்போது பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரகம் ரைஃபில் 303 (Riffle 303) ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரகம் எஸ்.எல்.ஆர் ஆட்டோமேடிக் ரைஃபில் (SLR authomatic rifle) இந்தத் துப்பாக்கியின் மூலம் ஒரே முறையில் 20 குண்டுகளை சுடலாம். இதற்கு முன்பு இந்தத் துப்பாக்கியை கலவரங்களிலும்கூட பயன்படுத்தியது இல்லை. அடுத்தது இடுப்பு கீழ் சுடவேண்டும் என்பது அதுவும் இந்த இடத்தில் மீறப்பட்டிருக்கிறது. தலையிலும், வாயிலும், சுட்டிருக்கிறார்கள். அதுவும் போரிலும், தீவிரவாதிகளையும் சுடுவதுபோன்று மறைந்துகொண்டு. சீருடை அணியாமல் மஃப்டியில் இருந்ததும் தவறே.
இவ்வளவு பெரிய போராட்டம் இவ்வளவு பெரிய துப்பாக்கிச்சூடு இதற்கு எதனடிப்படையில் யார் அனுமதியளித்தார்கள் என்பதே புரியாத புதிராய் உள்ளது. இவர்கள் கொன்றது போராட்டக்காரர்களை மட்டுமல்ல சட்டத்தையும்தான். காவலர்களின் மனநிலை அவ்வளவு கொடூரமானதாக மாறிவிட்டதா இல்லை அந்தளவிற்கு மனஅழுத்தம் தரப்பட்டதா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.