Skip to main content

விமர்சனம் வேண்டாம்; விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!’ - வனத்துறையிலிருந்து ஒரு வேதனைக்குரல்!

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
sathurakiri


குரங்கணி தீ விபத்தில் உயிர்கள் பலியானதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் – சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது வனத்துறை. காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை தீவிர சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று, அனுமதி இல்லாத நாட்களில் உறுதியாக கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறது.

கரன்ஸியை நீட்டினால் காட்டுக்குள் செல்ல அனுமதி!

சூழ்நிலைக்கேற்ப எச்சரிப்பது ஒருபுறம் நடந்தாலும், ‘பணம் பெற்றுக்கொண்டுதான் காட்டுக்குள் செல்ல அனுமதித்தார்கள்’ என்றும் ‘அமைச்சர்களில் இருந்து முக்கிய அதிகாரிகள் வரை காட்டுக்குள் பயணிக்க விரும்புபவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்கள். விதிமீறல் என்று தெரிந்தும் வனத்துறையினர் அவர்களை அனுமதிக்கிறார்கள்’ என்றும் வனத்துறையினர் குறித்து விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், ரிட்டயர்ட் பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீசரான வி.கே.எஸ்.சுப்பிரமணியன் என்பவர், ஊடகங்கள் மீதான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காட்டுத் தீயுடன் போராடுவது சுலபமல்ல!

‘தேனி மாவட்டத்தில் மலையேற்றம் சென்று காட்டுத்தீயில் சிக்கிய சம்பவத்தை, நேரடி காட்சிகள், கள நிலவரம் அலசுகிறோம் என்ற பெயரில், தொலைக்காட்சிகள், ஒருவித பதற்றமான சூழலை உருவாக்கி விட்டார்கள்.

இப்போது, அடுத்த கட்டமாக வனத்துறை சரியாக கண்காணிக்கவில்லை. சோதனைச்சாவடிகள் அமைத்து உள்ளே செல்பவர்களை தணிக்கை செய்யவில்லை. அல்லது தெரிந்தே உள்ளே அனுப்புகிறார்களா? என வித விதமாக குற்றம் சாட்டி, செய்திகளைப் போட்டு வருகிறார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்தீ என்றும் செய்திகள் சொல்லப்படுகின்றன. அணைக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும் சொல்கிறார்கள். ஒரு வாரமாக அந்த தீயை அணைக்க அல்லது கட்டுப்படுத்த அங்கிருக்கும் பணியாளர்கள் எவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என யாரும் யோசிப்பதில்லை.

வனத்துறையினரிடம் சரியான சாதனங்கள் உள்ளனவா?

காடுகளுக்குள் இன்னும் நாம் இலை, தழைகளைப் போட்டுத்தானே தீயை அணைக்கிறோம். ஓய்வெடுத்துப் பணியாற்றவோ, இந்த வேலை மட்டும்தான் என்னும் நிலையிலா பணியாற்றுகிறோம்? அய்யா, செய்தி போடுகிறோம் என்ற பெயரில், நீங்கள் உங்கள் மனதிலுள்ள எண்ணங்களை வெளியிடுவதற்கு முன்பாக, உண்மையான கள நிலவரத்தையும் தெரிந்துகொண்டு செய்தி வெளியிடுங்கள்.

 

sathurakiri 2



காடு ஆபத்தானது என்பது தெரியாதா?

காட்டிற்குள் கும்பலாக வருபவர்களிடம் வனத்துறையினர் “யானை உள்ளது, புலி உள்ளது, தீ பிடிக்கும், இப்படி பல்வேறு ஆபத்துகள் உள்ளன” என்று உண்மையைச் சொன்னாலும், இந்தப் படித்த மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

சின்னக் குழந்தைகள் கூட சொல்லும் காடு என்றால் பயம், ஆபத்து உள்ளது என்று. அப்படியிருக்கும்போது, தெரிந்தே எவ்வித அனுமதியும் பெறாமல், தவறு என்று தெரிந்தே உள்ளே செல்லும் இந்தப் படித்த அறிவாளிகளை என்னவென்று சொல்வது?

காட்டைக் காவல் காக்கும் பணியிடங்கள் காலியாக உள்ளன!

ஆயிரணக்கணக்கான ஹெக்டேர் பரப்பிலுள்ள ஒவ்வொரு சுற்று காவல் காட்டினையும் கண்காணிப்பது, காவல் காப்பது, வெறும் இரண்டு களப்பணியாளர்களும், உதவிக்கு ஐந்தாறு பேர் மட்டுமே என்பதையும், அந்தப் பணியிடங்கள் கூட சரிவர நிரப்பப்படாமல், துறையில் சுமார் 40 சதவீதத்துக்கு மேல் பணியிடங்கள் காலியாகவுள்ளதையும் இவர்கள் அறிவார்களா?

இவர்களது செய்திகளால் நாளை பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகப்போவது யார் தெரியுமா? ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்தீயை அணைக்க குடும்பத்தை விட்டு, சரியான உணவு, நீர், தூக்கமின்றி அங்கு கஷ்டப்படும் களப்பணியாளர்கள் தான்.

யார் மீது நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்கும்?

உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், உரிய அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அவர்களை அழைத்துச் சென்றவர்கள் மீதுதான். மேலும், இவர்கள் சார்ந்த கல்லூரிகள் மீது மாணவர்களை கண்காணிக்காமல் விட்டதற்காகவும், அரசு சட்ட திட்டங்களை மதிக்க கற்று கொடுக்காததற்காவும் நடவடிக்கைப் எடுக்கப்பட வேண்டும். இத்தகையோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். அய்யா, ஊடக நண்பர்களே! தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 20 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள வனப்பகுதிகளை காவல் காக்கும் களப் பணியாளர்கள் வெறும் 5500 பேர்தான் என்பதையும், இந்தப் பணியிடங்களிலும் சுமார் 40 சதவீதம் காலியாகவே உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது, வனப்பகுதி எல்லைகள் முழுக்க சோதனைச்சாவடிகள் அமைப்பதோ, உள்ளே செல்லும் அனைவரையும் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோ, எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பதை உங்கள் எண்ணத்திற்கே விட்டு விடுகிறேன்.

ஏற்கனவே இரவில் யானைகள் பிரச்சனை, பகலில் வனப்பாதுகாப்புடன் அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட இதர பணிகளையும் சேர்த்து இரவு பகலாக, நாட்டுக்காகவும், நாட்டின் சொத்துக்களான காடுகளைக் காக்கவும் செயலாற்றிவரும் வனத்துறையினர் மீது விமர்சனங்களை வைப்பதைக் காட்டிலும், மக்களிடையே வனங்களையும், வன விலங்குகள் குறித்த புரிதல்களையும், தக்க விழிப்புணர்வையும் ஏற்படுத்துவீர்களேயானால், அது உண்மையிலேயே நலம் பயக்கும்.’ என்று தன் குமுறலைப் பதிவு செய்திருக்கிறார். வனத்துறையிலும் தவறிழைப்போர் உண்டு. அதே நேரத்தில், அரசுப் பணி என்பதைக் காட்டிலும், வனத்துறையினர் ஆற்றிவருவதை நாட்டுக்கான சேவை என்றே கூற வேண்டும். கஷ்ட, நஷ்டங்களை ஒரு பொருட்டாகக் கருதாமல், கடமை ஆற்றுவதுதான், சேவை என்று போற்றப்படுகிறது. இதை உணர்ந்து வனத்துறையினர் செயல்பட வேண்டும்.!