பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் கரோனா தொடர்பாகவும், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இதுதொடர்பாக எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு, "ஊரடங்கு தொடர்பாக பிரதமர் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருக்கிறார். மக்கள் பாதுகாப்பாக இருங்கள், சத்தான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவினைச் சாப்பிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
என்றைக்கு கரோனா தொற்று உலகில் ஆரம்பித்ததோ அன்றில் இருந்து அனைவரும் சொல்லும் முறையைத்தான் தற்போது பிரதமர் கூறியுள்ளார். ஆலோசனை சொல்ல ஒரு பிரதமர் எதற்கு? ஒரு பக்கம் இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் இந்தியாவின் பொருளாதாரம் பின்நோக்கி செல்கிறது. ஏழை எளிய மக்களின் பிரச்சனைகள் அதிகம் இருக்கிறது. குடும்ப வன்முறை அதிகரித்து உள்ளது. தற்கொலைகள் அதிகரித்து இருக்கின்றது. பசி, பட்டினி உச்சத்தில் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு சொல்லுவார் என்று பிரதமரின் அறிவிப்பை அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அது எதற்கும் தற்போது பிரதமர் தீர்வு சொல்லவில்லை. ஏப்ரல் 14-ம் தேதியில் இருந்து தற்போது மே 3-ம் தேதிக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளார்கள். இதற்கு மக்களிடம் உரையாட வேண்டிய அவசியம் இல்லையே. நீங்கள் மே 3-ம் தேதி வரைக்கும் இல்லை, அடுத்த ஆண்டு வரைக்கும் வேண்டுமானாலும் ஊரடங்கைப் போடுங்கள். ஆனால் மக்களின் சாப்பாட்டுக்கு வழியைச் சொல்லிவிட்டு ஊரடங்கை நீட்டிக் கொள்ளுங்கள். அவர்களின் வாவ்வாதாரத்துக்கு என்ன செய்திருக்கிறீர்கள். தற்போது இதன் காரணமாகத் தற்கொலைகள் அதிகரித்து உள்ளது. அதனைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். நான் மறுபடியும் எச்சரிக்கிறேன்.
கரோனா மரணங்களை விட நாட்டில் பட்டினி மரணங்கள் அதிகரித்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் பெரிய அளவில் வரப் போகிறது. இந்தக் கரோனாவுக்குப் பிறகு பெரிய கம்பெனிகள் எல்லாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகப் போவதாகக் கூறுகிறார்கள். பெரிய அளவில் பொருளாதார நெருக்கடிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள். அதை எல்லாம் தீர்க்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம் என்பதைப் பற்றி மக்களிடம் கூற வேண்டும். வெறும் வாய் பேச்சு எதற்கும் உதவாது" என்றார்.