மனித சமூகத்தில் பெண்ணாய் பிறந்து விட்டாலே பெரும் போராட்டம் தான், அதுவும் மாற்றுத்திறனாளியாக, உடல் வளர்ச்சி குன்றியவராக பிறந்து விட்டால் அவரது நிலமை என்ன என்பதும், அவர் சந்திக்கும் இன்னல்கள், துயரங்கள் எவ்வளவு என்பதை நேரடியாக அனுபவித்தால் மட்டுமே அதன்வலிகள் தெரியும். அப்படி இரண்டரை அடி உயரமுள்ள பெண்ணை 18 ஆண்டுகளாக, இடுப்பிலும், தோலிலும் தூக்கி பள்ளிக்கூடம் முதல் கல்லூரிவரை கொண்டு சென்று வழக்கறிஞராக்கியே தீருவேன் என்று சபதம் எடுத்து போராடி வருகிறார் ஒரு தாய்.அந்தத் தாய்தான் மனித குலத்தின் போராளி என்பதை மறுத்துவிடமுடியாது.
அந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கரூரை சேர்ந்த இணைந்த கைகள் உயிர் காக்கும் சேவை அமைப்பு இருசக்கர வாகனம் வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறது.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள விவசாயக்கிராமம் மேக்கிரிமங்கலம். அங்கு விவசாயத்தினக்கூலிகள், பழனிச்சாமி தேவகி தம்பதிகள். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இறுதியாக பிறந்தவர் பாரதி. இரண்டரை வயது இருக்கும் போது சாதாரண காய்ச்சலில் உடல் வளர்ச்சி குன்றி, இன்று இரண்டரை அடி உயரமே இருக்கிறார். 18 வயது நிரம்பிய பாரதி மயிலாடுதுறை உள்ள ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஏ பொருளாதாரம் படித்துவருகிறார்.
ஏழைக்குடிசையில், அழகாக பிறந்த பாரதி,மாற்றுத்திறனாளியாக மாறுவார் என யாரும் எதிர்ப்பார்த்திடவில்லை. ஆனாலும் அவரது தாய் தேவகி சலித்துக்கொள்ளாமல், பல இன்னல்களுக்கு மத்தியில் பாரதியின் வாழ்வாதாரத்துக்கான அத்தனை முயற்சிகளிலும் செய்து வருகின்றார்.
பாரதியை நன்கு படிக்க வைக்க வேண்டும், அரசு வேலைவாங்கிக்கொடுக்க வேண்டும் என்கிற உறுதியோடு பதினெட்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி, பேருந்து, பாரதியின் புத்தகமூட்டை, உணவுப்பையோடு, தனது சந்தோசங்களை அனைத்தையும் துறந்து காலை ஐந்து மணிக்கே எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து வைத்து விட்டு, எட்டு மணிக்கு பாரதியை இடுப்பில் தூக்கிக் கொண்டு ஆரம்பகாலத்தில் பள்ளிக்கு போனார், தற்போது 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறை ஞானாம்பிகை கல்லூரிக்கு செல்கிறார்.
காலையில் போகிறவர், பாரதியை கல்லூரியில் விட்டுவிட்டு, அங்கேயே மரத்து நிழலில் மாலை வரை காத்திருந்து, கல்லூரி விட்டதும் மகளை இடுப்பில் தூக்கிக் கொண்டு, மற்றொரு கையில் சாப்பாட்டு பையோடும், முதுகில் புத்தக பையோடும் வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்கு வந்து வீட்டு வேலைகளை செய்துகொடுக்கிறார், தினசரி உடல் உழைப்போடு மட்டுமின்றி, இருவருக்கும் செலவுகளும், நேரமும் அதிக விரையமாகிறது, யாராவது எங்களுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக்கொடுத்து உதவி செய்தால் புண்ணியமாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தார் தேவகி.இந்த உதவிக்காக ஏறாதபடிகளில்லை என்றே கூறலாம்.
இந்தநிலையில் மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி மற்றும் பாதுகாப்பு நல சங்கம் கூட்டம்நடந்தது. அந்தகூட்டத்தில் தேவகி இரண்டுசக்கர வாகனம் கேட்டிருந்தார். இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இதை அறிந்துகொண்டு மனம் கலங்கிய கரூரில் உள்ள "இணைந்த கைகள்" உயிர்காக்கும் சேவை அமைப்பினர் உதவமுன்வந்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவி பாரதிக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்க உள்ளோம் என நக்கீரனிடமும் கூறியிருந்தனர். நாமும் அவர்களின் சேவையை பாராட்டி சென்றோம், இணைந்தகைகள் அமைப்பின் தலைவர் சாதிக் அலியும், செயலாளர் சலீமும், புதிய இருசக்கர வாகனத்தை பாரதி குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மேக்கிரிமங்கலம் வந்திருந்தனர்.
இணைந்தகைகள் அமைப்பின் உதவியை பெருமைப்படுத்தும்விதமாக கிராமமக்களும், குழந்தைகளும்,கூடியிருந்தனர். வந்திருந்த இணைந்தகைகள் அமைப்பினருக்கும், மற்றவர்களுக்கும் பாரதியின் கீற்று இல்லாத கூரையையும், புடவையால் மறைக்கப்பட்ட கதவுகளையும் கண்டு கலங்கிவிட்டனர். இவ்வளவு நிலமையிலும் படிக்கவைக்க நினைப்பது தான் லட்சியம் என பலரும்
நெகிழ்ந்தனர்.
பாரதிக்கு இரு சக்கர வாகனத்தை வழங்கி நெகிழ்ந்து நின்ற இணைந்தகைகள் அமைப்பின் சலிம்,சாதிக் கூறுகையில், " இந்த சமூகத்தில் பெண்கள் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அதுவும் ஊனமாக பிறந்த பெண்ணை பாதுகாத்து வளர்த்து படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்கிற முயற்சிகளில் தொடர்ந்து போராடி கொண்டிருக்கும் தேவகி அம்மாவை முதலில் வணங்குகிறோம்.பாரதி வழக்கறிஞர் ஆகவேண்டும், பிறகு நீதிபதியாக வேண்டும், என்று லட்சியம் கொண்டிருக்கிறார். அவருக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம். நாங்கள் எத்தனையோ உதவிகளை செய்து வருகிறோம். அதுபோல் பாரதிக்கு செய்துள்ளோம், அவருக்கு மென்மேலும் உதவிகள் செய்ய காத்திருக்கிறோம்." என்று நெகிழச்சியடைந்தனர்.
பாரதி கூறுகையில்," எங்க அம்மா சின்ன குழந்தையில இடுப்புல தூக்கினவங்க, இப்பவரைக்கும் தூக்கிட்டு போய் தான் படிக்க வைக்கிறாங்க. அவங்களுக்கு நிறைய செய்ய கடமை பட்டுடிருக்கேன்,அவங்களுக்காக நான் படிப்பேன், அரசு வேலைக்கு போவேன், காலத்துக்கும் அவங்களுக்கு சம்பாதிச்சு கொடுப்பேன்." என்கிறார்.
இன்னும் குழந்தையாகவே 18 வயது பாரதியை இடுப்பில் தூக்கிக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டு செல்லும் தேவகி அம்மாவிடம், " எத்தனையோ பேரு ஊனம் ஆயிடுச்சு, கை கழுவிட சொன்னாங்க, ஆனா நான் அந்த பொண்ணை படிக்க வைத்து பெரிய ஆளாக்கிகாட்டுவேன்னு சபதம் எடுத்தேன். 18 வருஷம் போராடிட்டேன். இன்னும் மூணு வருஷம் கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டா எப்படியாவது அரசாங்கம் காலில் விழுந்து வேலை வாங்கி கொடுத்துடுவேன். என் குடும்ப கஷ்டமும் நீங்கிடும். இப்ப ஊர்ல வேலையும் இல்ல, வருமானமும் இல்ல. ஆனா என் பிள்ளையை படிக்க வைக்க தினசரி 100 ரூபாய் தேவைப்படுது, நேரமும் போயிடுது, இருசக்கர வாகனம் இருந்தால் சவுரியமா இருக்கும் கேட்டோம் இணைந்த கைகள் அமைப்பு எங்களுக்கு உதவி இருக்கு அவர் பாதம் தொட்டு நன்றியை தெரிவிக்கிறோம்."என்றார்.
"ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுவரும் பெண்களின் நிலை இன்றளவும் குறைந்தபாடில்லை. பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை காப்பு, போன்றவற்றை முன்னெடுத்த தந்தை பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகநீதி பேசும் அமைப்புகளும்கூட பெண்களுக்கான நிலையில் அக்கறை காட்டவில்லை.தேர்தல் அரசியலுக்காக பெண்களை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆளும் வர்க்கமாக இருக்கும் போதும் கூட சுய உதவி குழு என்கிற பெயரில் அவர்களுக்கு பணத்தின் மீதான ஆசையை ஏற்படுத்தி, அதனை சுற்றியே இருக்கவைத்துவிட்டனர். தன்னிச்சையாக எழுந்துவர அவர்களை தயார் படுத்தவில்லை இந்தசமூகம் பெண்களுக்கான சமூகமாக எப்போது வருகிறதோ அப்போதுதான் பெண்ணினம் வெற்றிபெரும். அதுவரை தேவகி போன்ற பெண்கள் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்."என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.