கூவத்தூர் முகாமிற்குப் போகும் வழியில் பஸ்ஸிலிருந்து திடீரென குதித்து ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்த கேம்பிற்குள் வந்தவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.சண்முகநாதன். அதன் பின் தர்மயுத்தத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, இ.பி.எஸ்.சுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். இருவரின் இணைப்பிற்குப் பின் தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சண்முகநாதன். ஆனால் அவருக்கு மா.செ. பதவி கொடுத்து அமைதிப்படுத்தினார் எடப்பாடி. ஆனாலும் அடைந்தால் மந்திரி பதவி, இல்லையேல் வேறு முடிவு என்பதில் உறுதியாக இருந்தார் சண்முகநாதன்.
அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நேரடி எதிரியான எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா, இ.பி.எஸ்.சின் ஆதரவாளர் தான். என்ன நினைத்தாரோ, யாரை மனதில் நினைத்தாரோ, கட்சிக்குத் தேவை ஒற்றைத் தலைமை தான் என புயலைக் கிளப்பினார். மாஜி அமைச்சரான தோப்பு வெங்கடாசலமும் ஆரம்பத்தில் தினகரன் டீமுக்குள் ஐக்கியமானவர்தான். இதனால் ஆட்சி மேலிடத்திலிருந்து கடும் நெருக்கடி வந்ததும் "எனது தொகுதிக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை என கண்ணீர் வ(ந)டித்தார். ஒருவழியாக அவரையும் சமாளித்து தனது ஆதரவாளராக மாற்றினார் எடப்பாடி.
இப்படியெல்லாம் அ.தி.மு.க. முகாம் இருக்கும் போது தான் அமைச்சர் மணிகண்டனை அதிரடியாக நீக்கினார் முதல்வர் எடப்பாடி. ஏற்கனவே பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் பதவியும் பறி போயிருந்தது. ரைட்டு இது தான் சரியான சந்தர்ப்பம் என சண்முகநாதன், ராஜன் செல்லப்பா, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மந்திரி நாற்காலியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். வெளிநாடுகளுக்கு இருவார சுற்றுப்பயணம் போன எடப்பாடியை பவ்வியமாக வழி அனுப்பி வைத்தனர் மூவரும். முதல்வர் எடப்பாடி, வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறாரோ இல்லையோ, அவரை நாம் ஈர்த்துவிட வேண்டும் என்ற முடிவுடன் மூவரும் காய் நகர்த்தினார்கள். அதற்கு பலனும் கிடைத்துவிட்டது.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த எடப்பாடியை அதே பவ்வியத்துடன் வரவேற்ற எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் மேற்படி மூவரும் அதிகமாகவே பவ்வியம் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் அன்பினால் எடப்பாடியும் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டாராம். முக்கியமான அரசுப்பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, மூவரையும் தனித் தனியாக தொடர்பு கொண்ட எடப்பாடி, "சென்னையிலேயே தங்கியிருங்கள், விரைவில் நல்ல செய்தி வரும்' என்ற செய்தியைச் சொல்லியுள்ளா ராம். முதல்வர் எடப்பாடி அடுத்ததாக இஸ்ரேல் செல்வதற்குள் சைரன் காரில் ஏறிவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள் சண்முகநாதன், ராஜன் செல்லப்பா, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர். அமைச்சரவை மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.