Skip to main content

ஆட்சிக் கனவு! தி.மு.க ஐ.டி. அணி நனவாக்குமா?

Published on 03/10/2017 | Edited on 03/10/2017


பொதுக்கூட்ட மேடையாக இருந்தாலும், தேர்தல் களமாக இருந்தாலும், கட்சி நிர்வாகமாக இருந்தாலும் பழைய முகங்களே தொடர்ந்து நீடிக்கும் தி.மு.க.வை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்காக அதன் ஐ.டி. தொழில்நுட்ப அணி புது ஐடியாக்களை உருவாக்கியிருக்கிறது.

தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் செய்தித் தாள்களும், பொதுக்கூட்டங்களும் மட்டுமே அன்றைக்கு கட்சிக்காரர்களுக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்களாக இருந்தன. சைக்கிளில் பல கிலோ மீட்டர்கள் பெடல் போட்டு, சொந்தக் காசில் வேர்க்கடலை வாங்கி சாப்பிடும் பெருங்கூட்டமாகப் பொதுக்கூட்டங்கள் இருக்கும். இப்போது குவார்ட்டர்-பிரியாணி காலம். அது கிடைத்தாலும், கூட்டத்திற்கு ஆள் சேர்க்கத் திணறவேண்டியுள்ளது.



தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அவரவர் வீட்டுக்குள் மட்டுமல்ல கைகளிலேயே தவழத் தொடங்கிவிட்டன. ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் அனைவருமே தனித்தனி மீடியாவாக செயல்படத் தொடங்கிவிட்டனர். இப்படி, தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை ஆதரவு வாக்குகளாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து செயல்படுத்தவே தகவல் தொழிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டது.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பப்படி உருவாக்கப்பட்ட இந்த பிரிவுக்கு ஒருங்கிணைப்பாளராக மதுரை மத்திய தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சுதந்திரமான அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டார். மூன்று மாதங்கள் இந்தியாவில்  மட்டுமல்ல, உலக அளவில் ஐ.டி. தொழில்நுட்பத்தை அரசியல் கட்சிகள்  எப்படி பயன்படுத்துகின்றன என்று ஆய்வு நடத்தினார். அதனடிப்படையில், தகவல் தொழில்நுட்பத்தில் தி.மு.க.வின் சாதக -பாதகங்களைப் பட்டியலிட்டு ஒரு அறிக்கையை கட்சி தலைமையிடம் சமர்ப்பித்தார்.



தனது மதுரை மத்திய தொகுதி வாக்காளர்கள் பற்றிய "டேட்டா பேஸ்' உருவாக்கியதோடு,  எப்போது வேண்டுமானாலும் தங்கள் நிறை குறைகளை தனக்கு  தெரிவிக்க வசதி ஏற்படுத்தினார். தொகுதி மக்களுக்காக "கால்சென்டர்' ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். வாக்காளர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க இது வசதியாக இருக்கிறது' என்கிறார் பி.டி.ஆர்.பி.தியாகராஜன்.

இந்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மிக துல்லியமான புள்ளிவிவரங்களுடன் கூடிய ஆதாரம் உள்ளதால் தொகுதி மக்களின் ஒவ்வொரு நகர்வையும் நன்கு உணரக்கூடியதாக இருப்பதாக அவர் கூறுகிறார். தனது தொகுதியில் வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு வந்த இந்த ஐ.டி. தொழில் நுட்பத்தையே அனைத்து தொகுதிகளுக்கும் பரவலாக அமல்படுத்த தி.மு.க.வின் தொழில்நுட்ப பிரிவு திட்டமிட்டிருக்கிறதாம்.

இதற்காகவே, மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் ஆட்கள் தேர்வு செய்வதற்காக ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆள் எடுப்பது போன்ற அந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் தி.மு.க.வுக்காக வேலை செய்யும் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் அதிருப்தி அடையச் செய்தது.

35 வயதுக்குட்பட்ட, கணினி பயன்பாட்டுக்குரிய வேர்ட், எக்ஸெல் தெரிந்த, இணையதளத்தை உபயோகிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. கட்சித் தொடர்பு, அனுபவம் இவற்றுக்கு தகவல் தொழில்நுட்ப அணியில் மதிப்பில்லையா என்று தி.மு.க.வினர் ஆத்திரப்பட்டனர். ஆனால், இது முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பணி அல்ல என்றும், வாக்காளர்கள், தொகுதிப் பிரச்சனைகள் குறித்த விவரங்களை பேரவை உறுப்பினர்கள் துல்லியமாக வைத்திருக்க உதவும் ஒரு அமைப்பு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.



இந்நிலையில், முகநூல் மற்றும் ட்விட்டரில் தி.மு.க.வினரின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வயதுவரம்பைத் தளர்த்தி, அனுபவம் வாய்ந்த தி.மு.க.வினருக்கும் வாய்ப்பு வழங்கும்படி யோசனை கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, தொழில்நுட்பப் பிரிவு சார்பில் விளம்பரத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதேசமயம் இந்த அமைப்புக்கு ஆள்தேர்வு செய்யும்போது அந்தந்த மாவட்டச் செயலாளர்களை கலந்து ஆலோசிக்கும்படியும் கூறப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

இந்த நடைமுறையையும் தி.மு.க.வினர் விமர்சனம் செய்கிறார்கள். தொழில்நுட்பப் பிரிவு கட்சித்தலைமைக்கு மட்டுமே பதில் சொல்லக்கூடியதாக, சுதந்திரமாக இருக்கவேண்டும். தி.மு.க. தொழிற்சங்கம் எப்படி செயல்படுகிறதோ அதேபோன்று இந்த அமைப்பும் இயங்க வகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் இதில் தலையிட்டால், லோக்கல் அரசியலின் அனைத்து குறைபாடுகளும் இதை ஆக்கிரமித்து, மொத்த வாக்காளர்களில் 50%க்கு மேல் இருக்கும்  35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்க முடியாது என்கிறார்கள்.

முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயங்கும் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. ஆதரவாளர்களையும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது. குறுகியகால தேர்தல் வழிமுறைகளை கையாள்வதை விட்டு, நீண்ட காலத்துக்கு தி.மு.க. நிலைத்துச் செயல்பட இந்த புதிய வியூகம் கைகொடுக்க வேண்டும் என்று கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். எதுவாக இருந்தாலும் கொள்கை அடித்தளமும்  புதிய தலைமுறையின் பங்கேற்புமே தி.மு.க.வின் ஆட்சிக் கனவை நனவாக்கும்.

-ஈ.பா.பரமேஷ்வரன், ஆதனூர் சோழன்


 இது வேற மாதிரி..!
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி


புதிய அணியின் முயற்சிகள் குறித்தும், சமூக வலைத்தளங்களில் பரவும் விமர்சனங்கள் குறித்தும் அணியின் ஒருங்கிணைப்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியது…

""முகநூல், ட்விட்டரில் பங்காற்றுவது வேறு, எங்களுடைய முயற்சிகள் வேறு. அரசியல் தந்திரங்களை யாரும் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். 1500 ரூபாய் ஸ்மார்ட் போனும், 3ஜி இண்டர்நெட் கனெக்ஷனும் இருந்தால் சாதாரண குடிமகனுக்கும் பிரதமருக்கும் முகநூலில் சம வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க. ஐ.டி. விங் என்பது வேற மாதிரி என்பதை நான் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

திமுகவின் மற்ற அணிகளைப் போலவே, மாவட்ட அமைப்புகளின் ஆலோசனையைப் பெற்றுத்தான் இந்த அணி செயல்படும். ஆனால், இது எந்த வகையிலும் தேங்கிவிடாது. இந்த அணிக்கு ஒத்துழைப்புக் கொடுப்பவர்களுக்கு பலன் கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம், இந்த அமைப்புக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் இதுவரை தி.மு.க. உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் உடனடியாக உறுப்பினர்களாக இணைந்தே தீரவேண்டும். தி.மு.க.வுக்காக செயல்படுபவர்கள் தி.மு.க.வைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் எப்படி செயல்பட முடியும். எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு முறையான பயிற்சி கொடுப்போம்'' என்றார் விளக்கமாக.

சார்ந்த செய்திகள்