உலகக் கோப்பையை வென்ற டிராவிட் அணி!
U19ல் சாதித்தவர்களின் இன்றைய நிலை என்ன?

2018
2018 ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் உலக கோப்பை நேற்றுடன் (03 பிப்ரவரி) முடிந்தது. இந்தியா நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த அணிக்கு டிராவிட் பயிற்சியாளராக இருந்து உத்வேகம் அளித்து இந்த அணியை சிறப்பாக வழிநடத்தி, அவர் சொன்னது போலவே கோப்பையை வென்று காட்டியிருக்கிறார். 2007 ஆம் ஆண்டில் அணியில் இருந்தபோது இவர் தலைமையிலான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. ஆனால், தற்போது இவர் வழிகாட்டுதலுடன் இந்திய புலிக்குட்டிகள் உலகக் கோப்பையை வென்று, தங்கள் பயிற்சியாளரான டிராவிடிற்கு பெருமையை தேடித் தந்துள்ளனர். இந்த அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் சர்வதேச இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கப்படும் என நம்புவோம். அணியின் கேப்டன் பிரித்வி ஷா, சப்மன் கில், மன்சோத், கமலேஷ் நாகர்கொடி போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களிடம் பெயர் பெற்றுள்ளனர். இவர்களின் திறமை ஐபிஎல் ஏலத்திலேயே தெரிந்தது. இந்த வீரர்கள் ஏலத்தில் போட்டி போட்டு எடுக்கப்பட்டனர். இவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசமாக இருக்குமா என்றால் அதை நம்மால் தற்போது யூகிக்க இயலாது. ஆனால் இதுவரை வென்ற மூன்று 19 வயதுக்கு உடபட்டோர் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிப் பிரகாசித்த வீரர்களையும், வாய்ப்பு கிடைத்தும் பிரகாசிக்காத வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

2000
2000 ஆம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் மொஹமத் கைஃப் தலைமையில் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. இந்த 2000 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தான் இந்திய U19 அணி முதல் முறையாக உலக கோப்பையை பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்களான ரிதீந்தர் சிங் சோதி, வேணுகோபால் ராவ், அஜய் ரத்ரா, யுவராஜ் சிங் மற்றும் மொஹமத் கைஃப் இருந்தனர். 19 வயதுக்கு உட்பட்டோர் உலக கோப்பையை வென்ற இவர்களுக்கு அப்போதைய வலிமை வாய்ந்த கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம் காத்திருந்தது. அந்த ஐந்து வீரர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடி தங்களது வாய்ப்பை பெரிதாக தக்க வைத்தது யுவராஜும் கைஃப்பும் தான். கைப் சிறப்பான பேட்ஸ்மேனாக இல்லை, நல்ல ஒரு பீல்டராக இருந்தார். யுவராஜ் சிங் அப்போதைய அதிரடி ஆட்டக்காரர், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வளர்த்துக் கொண்டார். இதில் அஜய் ரத்ரா, டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிராக சதம் அடித்து, குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கடைசியில் காயம் காரணமாக வெளியே சென்றார். இவருக்கு பதில் அந்த இடம் பார்த்திவ்க்கு கிடைத்தது. அவரும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. அதன் பின் தான் தோனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர், உலகமே கொண்டாடும் வகையில் கிடைத்த வாய்ப்பையும் திறமையும் தக்க வைத்துக்கொண்டார். மற்ற இருவருக்கும் வாய்ப்புகள் கிடைத்தது, ஆனால் அதனை சரிவர தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

2008
2008ஆம் ஆண்டு 19வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டியில் இரண்டாவது முறையாக விராத் கோலி தலைமையில் கோப்பையை வென்றது இந்தியா. இந்த ஆண்டுக்கு முன்னர் தான் 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையில் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது இந்திய அணி. ஆனால், அதே ஆண்டில் இளைஞர்களைக் கொண்ட அணியோடு தோனி தலைமையில் களத்தை சந்தித்த இந்திய அணி முதலாம் டி 20 உலகக் கோப்பையை வென்று ரசிகர்களின் முந்தைய ஏமாற்றத்தை சரி செய்தது. 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பையின் மீது அவ்வளவு ஆர்வம் இல்லாதவர்களாக இருந்த கிரிக்கெட் வெகுஜன ரசிகர்களை, இந்த 2008 ஆம் ஆண்டு முதல் தான் அதிகம் பார்க்க வைத்தது. தற்போதைய இந்திய கேப்டன், கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை படைத்து வரும் விராத் கோலி, முதன் முதலில் இந்த U19 இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர். இதன் மூலம் தன் திறமையை கிரிக்கெட் உலகிற்கு வெளிக்காட்டியவர். இதே அணியில் துணை கேப்டனாக இருந்து தற்போதைய அணியில் இருப்பவர் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா. இவர் தோனியின் செல்லப்பிள்ளை, சிஎஸ்கே அணியின் நட்சத்திரம், இந்திய அணியின் முக்கியமான ஒரு அங்கம் உலகத் தரவரிசையில் முதலாம் இடத்தில் இருக்கின்றார். மனிஷ் பாண்டே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முக்கிய நபராக இல்லை என்றாலும் ஐபிஎல் போன்ற இந்திய அளவிலான கிரிக்கெட்டில் சிறந்த வீரராகவும் பீல்டராகவும் திகழ்கிறார். இவர்களுக்கு அடுத்து அபினவ் முகுந்த் மற்றும் சவுரப் திவாரி போன்ற U19 வீரர்களுக்கும் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் பிரகாசிக்க முடியவில்லை.

2012
2012 ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பையை உன்முக்த் சந்த் தலைமையிலான அணி வென்றது. இந்த அணியிலும் சிறப்பான பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஆல் ரவுண்டர்கள் இருந்த போதிலும் யாருக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் என்னும் இந்திய பொழுதுபோக்கு டி20 போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. உன்முக்த் சந்த், ஹர்மீத் சிங், சந்தீப் ஷர்மா, விஜய் ஜோல் ஆகிய வீரர்கள் சிறப்பாக தன் திறமைகளை இன்றும் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், பெரிதாகப் பிரகாசிக்க தான் முடியவில்லை. அணி வீரர்களோடு அரசியலும் ஆதிக்கமும் சேர்ந்து விளையாடும் இந்திய கிரிக்கெட்டில் இது சாதாரணம் தானே.
சந்தோஷ் குமார்