உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற சம்பவம் சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தகட்டமாக அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரபேல் போர் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் உருவாக்கியதாக அண்ணாமலையால் கூறப்பட்ட அந்த வாட்ச் உலகத்திலேயே மொத்தம் 500 மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாட்ச் விலை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், இந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிடும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் என்னுடைய வருமானம், வருமான வரி விவரம் என அனைத்தையும் ஏப்ரல் மாதம் வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக திமுக பிரமுகர் சித்திக் அவர்களிடம் கேட்டபோது, "அண்ணாமலையிடம் திமுக அமைச்சர் முதலில் என்ன கேட்டார்... நீங்கள் ஏழைத்தாயின் மகன் என்று சொல்லுகிறீர்கள். ஆனால், இத்தனை லட்சத்தில் வாட்ச் அணிந்திருக்கிறீர்கள். ஆடு வளர்த்தே இவ்வளவு வருமானம் வந்தது என்று வைத்துக் கொண்டாலும் அதற்கான பில்லை காட்ட வேண்டாமா? என்ற அடிப்படையில் அது தேர்தலுக்கு முன் வாங்கியதா? இல்லை, அதன் பிறகு வாங்கியதா? அப்படி வாங்கியிருந்தால் பில்லை பொது வெளியில் வெளியிடுங்கள் என்று கேட்டிருந்தார். ஆனால், இந்தக் கேள்வி எதுக்கும் பதில் சொல்லாமல் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிடுவேன் என்று கூறுகிறார்.
அமைச்சர்கள் எல்லாம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்போதே தங்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். இவர் வந்து எந்த அமைச்சருக்கும் சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டிய அவசியமில்லை. வாயில் வருவதைப் பேசுவதே அண்ணாமலையின் வேலையாக இருக்கிறது. தற்போது ஏப்ரலில் வெளியிடுகிறேன், நடைபயணம் செல்லும்போது வெளியிடுகிறேன் என்று கதை சொல்லும் வேலைகளில் அவர் தொடர்ந்து ஈடுபடுகிறார். நீங்கள் முதலில், அண்ணாமலை சொன்ன ஒரு வரியை தவறாமல் குறிப்பிட்டீர்கள், ‘நடக்கிற கார்’ என்று. அதைப்போலத்தான் அண்ணாமலையின் நடைபயணமும் இருக்கப் போகிறது" என்றார்.