ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே அரசுப் பள்ளி மாணவர்களின் வரலாற்றுத் தேடலில் சிந்துவெளி எழுத்து போன்ற குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமியின் வழிகாட்டலில், தற்போது இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மு.விஷால், த.அருள்தாஸ் ஆகியோர் ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஏற்கனவே கீழக்கரை அருகில் குலபதத்தில் சீனநாட்டுப் பானை ஓடுகள், மேலமடையில் சேதுபதி கால சூலக்கல் கல்வெட்டு, நத்தத்தில் சங்ககால ஊர் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் உத்தரகோசமங்கை அருகில் மரியராயபுரம் என்ற ஊர் கண்மாய் பொட்டலில், ஆசிரியர் முனியசாமியுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்தபோது, 20 பானை ஓடுகளில் குறியீடுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் தந்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு செய்த வே.ராஜகுரு கூறியதாவது; “அப்பகுதியில் மீண்டும் கள ஆய்வு செய்தபோது, நுண் கற்காலக் கருவி, ரௌலட்டட் வகை ரோமானிய பானை ஓடு, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக் கழிவுகள், வட்டச் சில்லுகள், சுடுமண் தாங்கிகள், துளையுள்ள பானை ஓடுகள், சிவப்புநிற சிறிய குவளை, சிறிய இரும்புக் கோடரி, சுடுமண் கெண்டியின் மூக்குப்பகுதிகள், மூடிகள், மான் கொம்பின் உடைந்த பகுதிகள், நீர் ஊற்றும் பகுதியுடைய பானையின் விளிம்புப் பகுதிகள், அலங்காரப் பானை ஓடு, சங்கு வளையல், பாசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பொட்டல் பகுதி முழுவதும் பழைமையான பானை ஓடுகள் காணப்படுகின்றன.
*பானை ஓட்டுக் குறியீடுகள்*
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 20 குறியீடுகளில், கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் 15 குறியீடுகளும், சிவப்பு பானை ஓடுகளில் 5 குறியீடுகளும் உள்ளன. இதில் உள்ள 3 குறியீடுகள் சிந்துசமவெளிப் பகுதியில் கிடைத்த குறியீடுகள் எண் 125, 137, 365 போல அமைந்துள்ளன. இதில் எண் 125 குறியீடு ‘த’ எனும் தமிழி எழுத்து போலவும், எண் 137 குறியீடு பெருக்கல் குறியீடு போலவும் அமைந்துள்ளன. எண் 365 குறியீடு மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் சூலம் போல உள்ளது. இக்குறியீடு கீழடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு குறியீட்டில் இரண்டு ஏணிகளை எதிரெதிரே வைத்தது போல உள்ளது.
பொதுவாக தொல்லியல் ஆய்வுகளில் பொருள் புரிய இயலாத வரிவடிவங்கள், கீறல்களைக் குறியீடுகளாகக் கருதுகிறார்கள். இவை தொல் எழுத்துகளாகவும் இருக்கலாம். இங்கு கிடைத்த பெரும்பாலான குறியீடுகள் கிண்ணம், குவளை, தட்டு உள்ளிட்ட மட்கலன்களின் தோள் பகுதிகளில் கீறப்பட்டவையாகவே உள்ளன.
*ரோமானிய பானை ஓடுகள்*
கீழக்கரையிலிருந்து தேரிருவேலி வழியாக மதுரை செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது. தேரிருவேலியில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் ரோமானிய பானை ஓடுகள், நுண்கற்காலக் கருவிகள், தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேர்பாதையில் இங்கிருந்து தேரிருவேலி 4 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது. சமீபத்தில் ரோமானிய பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட கீழ்ச்சீத்தை இவ்வூருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. சங்ககாலத்தில் இவ்வூர் மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்து இப்பகுதியின் தொன்மையை வெளிக்கொணர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.