Skip to main content

பா.இரஞ்சித்துக்கும் எனக்குமுள்ள வித்தியாசம்... - இயக்குனர் சுசீந்திரன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி   

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு போன்ற படங்களினால் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் இயக்குனர் சுசீந்திரன். இவரின் 'ஜீனியஸ்' வெளியாகியுள்ளது. இவரது படங்கள், சினிமா உலகம், திரையில் சாதி... இப்படி பல விஷயங்களைப் பேசினோம்.
 

suseenthiran



வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, சாம்பியன்... உங்கள் படங்களில் விளையாட்டு அதிகம் இடம்பெறுகிறது. என்ன காரணம்?

நான் அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரன். செய்தித்தாள் எடுத்தாலும்கூட நேரடியா கடைசி பக்கத்தைத்தான் பார்ப்பேன். அதற்கடுத்து சினிமா செய்திகளை பார்ப்பேன். அதனால் சினிமாவிற்குள் வந்துவிட்டேன். சினிமாவிற்குள் வந்ததால் விளையாட்டு சார்ந்த படங்களை எடுக்கிறேன். என் குடும்பத்தில் எல்லாரும் கபடி விளையாடுபவர்கள்.

உங்கள் படங்களான வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, மாவீரன் கிட்டு போன்றவற்றில் சாதி ஏற்ற தாழ்வுக்கு சவுக்கடி கொடுக்கும் இடங்கள் உண்டு. ஆனால், காலா, பரியேறும் பெருமாள் படங்கள் எதிர்கொள்ளப்படும் விதமும் உங்கள் படங்கள் எதிர்கொள்ளப்பட்ட விதமும் வெவ்வேறாக இருப்பதை கவனிச்சீங்களா? காரணம் என்னவென்று நினைக்கிறீங்க?

வெண்ணிலா கபடிக்குழு சாதியை வைத்து விளையாட்டைப் பற்றி பேசும் படம். அழகர்சாமியின் குதிரை சாதிப்படம் என்பதைத்தாண்டி அது மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து எடுத்த படம். என் படத்தில் முழுதாக சாதியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்றால், 'மாவீரன் கிட்டு'தான். 'பரியேறும் பெருமாள்' ஏன் இவ்வளவு சர்ச்சைக்கு உள்ளாகிறது என்றால், எனக்குத் தெரிந்து ரஞ்சித் அந்தப் படத்தை தயாரித்தது காரணமாக இருக்கலாம். நிறைய பேர் வெளிப்படையாக பேச மாட்டார்கள். ஆனால், ரஞ்சித் 'இது தவறு, நான் இதற்காக குரல் கொடுப்பேன்' என்று வெளிப்படையாக பேசுகிறார். அதனால், ரஞ்சித் என்றால் இந்த சாதியை சேர்ந்தவர் என்று ஒரு கட்டம் கட்டப்படுகிறார். அதனால் மக்களும் அதை ஒரு சாதியினர் படமாகவே பார்க்கிறார்கள்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை 'பரியேறும் பெருமாள்' படத்தில் எதுவாக இருந்தாலும் இருவரும் அமர்ந்து பேசிக்கொள்ளலாம் என்பது போன்ற முடிவைத்தான் கொடுத்திருந்தார்கள். ஒருவேளை ரஞ்சித் இந்தப் படத்தினுள் வரவில்லை என்றால் இவ்வளவு சர்ச்சைகள் வந்திருக்காது. அதே நேரம் இவ்வளவு கவனமும் வரவேற்பும் கூட இருந்திருக்காது. ஸ்டாலின் சார் பார்க்கிறார், நல்லகண்ணு ஐயா வந்து படம் பார்க்கிறார், காரணம் இரஞ்சித் தான்.

 

pa.ranjith



இன்னொரு புறம், ரஞ்சித்தின் படங்களுக்குக் கிடைக்கும் கவனமும் விவாதமும், இத்தனை நாட்களாக சுசீந்திரன் சாதியை எதிர்த்து எடுத்த படங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேசப்படுகிறதே?

பல பேர் என்னை 'ஏன் நீங்கள் பொது மேடைகளில் சாதியைப் பற்றி பேச மாட்டுகிறீர்கள்' என்று கேட்டு இருக்கிறார்கள். ஆனால், ஒரு சாதி படம் என்று எடுத்தால், அந்த சாதி சம்மந்தப்பட்ட மக்கள் மட்டும்தான் வருவார்கள். அவர்கள் மட்டும் படம் பார்ப்பதற்கு ஏன் படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. அவர்களுக்கு ஏற்கனவே அவர்களின் வாழ்வியலை பற்றித்தெரியும். இங்கு எல்லோருக்கும் போய் சேர்வதுபோல் படங்களை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவன் என்ன தவறு செயகிறான், இவன் என்ன தவறு செயகிறான் என்பது தெரியும். நான் எடுத்ததில் சாதி எதிர்ப்புப் படம் என்றால் மாவீரன் கிட்டுதான். அந்தப் படத்திற்கு வெகுஜன மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இலக்கியவாதிகள் இன்னமும் அந்தப் படத்தை பாராட்டுகிறார்கள். சில படங்கள் ரிலீசாகக்கூடிய நேரம், சூழல் போன்றவையும் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். சரியாக மாவீரன் கிட்டு ரிலீசாகும் நேரத்தில் முன்னாள் முதல்வர் அப்போலோவில் இறந்து விட்டார் என்று செய்தி பரவ ஆரம்பித்தது. அது மறுநாள் உறுதி செய்யப்பட்டது. அதனால் திரையரங்கெல்லாம் மூடப்பட்டுவிட்டது. அந்த வாரம் முழுக்க அந்தப் படம் துளி அளவிற்குக்கூட மக்களிடம் போய் சேரவில்லை. எனவே நான் அப்படி நினைக்கவில்லை.

 

maaveeran kittu



'ஜீவா' படத்தில் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம் குறித்து சென்சிட்டிவாக படமாக்கினீர்கள். அதற்கு ஏதேனும் எதிர்ப்பை சந்தித்தீர்களா? 

அண்ணன் திருமுருகன் காந்தி சொன்னதுபோல்தான் இது... நீங்கள் எப்போது பொதுநலன், பொதுவாழ்வு என்று வருகிறீர்களோ அப்போது சிக்கல்களும் பிரச்சனைகளும் வருவது இயல்பு. அப்படி வரவில்லை என்றால் நாம் பொதுவாழ்விலோ பொதுநலனிலோ இல்லை என்று அர்த்தம். அந்தப் படத்தில் நான் சொன்ன சமூகம் உண்மையாக அப்படி இருந்ததுதான். அதனால் அவர்களுக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம். அதேபோல் அந்த சமூகம் நேரடியாகத் தாக்காமல் மறைமுகமாகத் தாக்கலாம். ஆனால், அதை பற்றி எனக்குக் கவலை கிடையாது. சினிமாவிற்கு வந்துவிட்டோம். நாம் கேள்விப்படுகின்ற, உண்மையான விஷயத்தை பதிவு பண்ண நினைக்கிறோம், அவ்வளவுதான்.