Skip to main content

"தோனிக்கா ஓட்டுப் போட்டீங்க?" - கிரிக்கெட் ரசிகர் கேள்வி!

Published on 10/04/2018 | Edited on 10/04/2018

சென்னை சிதம்பரம் ஸ்டேடியம் உள்ள சேப்பாக்கம் பகுதியிலும் அதை சுற்றி அண்ணா சாலை, வாலாஜா சாலை பகுதிகள் போர்க்களமாக மாறியிருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையேயான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டு நெருப்பாகப் பரவி போராட்டம் நடந்து வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். நான்காயிரம் காவலர்கள் என்று போலீஸ் சொன்னாலும் அதை விட அதிக எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது. கடும் சோதனைக்குப் பிறகு ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
 

chepauk 001



இப்படி தமிழகம் கொதித்திருக்கும்பொழுது, கிரிக்கெட் பார்ப்பது நியாயமா என்று மைதானத்துக்குள்ளே சென்ற சில ரசிகர்களைக் கேட்டோம்.

சுரேஷ் என்னும் கல்லூரி மாணவர், "நான் ஒன்னு கேக்குறேன். நீங்க எல்லாம் தோனிக்கா ஓட்டு போட்டீங்க? ஜெயலலிதாவுக்கு தான போட்டீங்க? எடப்பாடி பழனிச்சாமி தான சி.எம்? அவரு வீட்டு முன்னாடிதான போராடணும்? காவிரி நீர் தேவைதான். நாங்களும் தமிழர்கள் தான். ஆனா, எம்.எல்.ஏ, எம்.பி வீட்டு முன்னாடி போய் போராடாம கிரிக்கெட் ஸ்டேடியத்துல எதுக்கு போராடுறீங்க? சில அரசியல்வாதிகள் விளம்பரத்துக்காக செய்ற வேலை இது" என்றார்.
 

dhoni fan



விவேக் என்ற ஐ.டி ஊழியர், "நான் இன்னைக்கு கிரிக்கெட் பாத்துட்டு நாளைக்கு காவிரிக்காக போராடுவேன். இது மூணு மணி நேர விளையாட்டு. இதை பாக்குறனால தான் காவிரி வரலையா? எத்தனையோ வருஷமா இந்தப் பிரச்சனை இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் கிரிக்கெட்டை நிறுத்தி இதை சரி செய்ய முடியுமா?" என்று கேட்டார்.

ராமநாதன் என்ற முதியவரும் மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்து குதூகலமாக உள்ளே சென்று கொண்டிருந்த போது நிறுத்திக் கேட்டோம். "இவ்வளவு பிரச்சனை நடக்கிறது. காவிரிக்காக கிரிக்கெட்டை தவிர்க்க முடியாதா?" என்றோம். "தம்பீ, நான் 1974ல இருந்து கிரிக்கெட் பாக்குறேன். இந்தியா வேர்ல்டு கப் வாங்குனப்பவெல்லாம் கொண்டாடினேன். இந்த அரசியல்வாதிங்க உருவாக்குன பிரச்சனை காவிரி பிரச்சனை. அவுங்களுக்காக என் விருப்பத்தை நான் விட முடியாது. நான் இன்னைக்கு கிரிக்கெட் பாக்காட்டி இவுங்க காவிரி பிரச்சனையை தீர்த்துருவங்களா? வேலைக்காகாத அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துட்டு கிரிக்கெட்டை எதிர்த்து என்ன பயன்?" என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஐ.பி.எல்லை எதிர்த்து போராடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரை ஆவேசமாக சூழ்ந்தனர். "உனக்கும் சேர்த்துதானய்யா நாங்க போராடுறோம்? தண்ணீ இல்லைனா எதைக் குடிப்ப?" என்று கேட்டுக்கொண்டே அவரை சூழ்ந்தனர்.

 

chepauk 003


போராடியவர்கள் கேட்பது நியாயம் தான். போராட்ட மனநிலையை நீர்த்துப் போகவும் திசை திருப்பவும், சினிமாவும் கிரிக்கெட்டும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவது உண்டு. கையாலாகாத அரசுகளை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை. வாழ்வாதாரப் பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும்பொழுது கேளிக்கையை தள்ளி வைக்கலாம் தான். உலகம் கவனிக்கும் ஒரு போட்டியை புறக்கணிப்பதன் மூலம் நம் எதிர்ப்பை ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். இன்னும் சற்று நேரத்தில் விடை தெரியும். 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.