1991 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தான் அதுவரை கண்டிராத அதிகாரத் திமிரால் தமிழக அரசின் அனைத்து துறைகளின் மூலமாகவும் எந்த அளவுக்கு ஊழல் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு துணிந்து ஊழலில் ஈடுபட்டார். இதன் மூலம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே தன் பெயரிலும் தனக்கு வேண்டப்பட்ட குடும்பத்தினர்கள் பெயரிலும் கணக்கற்ற சொத்துக்களை வாங்கிக் குவித்தார். இப்படி உலகம் வியக்கும் ஊழல் ராணியாக திகழ்ந்த ஜெயலலிதா ஒருவேளை தான் அடுத்து வரும் தேர்தலில் ஆட்சியை இழக்க நேரிட்டால், தான் செய்த ஊழல்கள் தனக்கு எதிராக மாறும் என்பது அவருக்குத் தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை. ஆனால், அதற்குப் பிறகு வந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து தமிழக மக்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
அந்த வரிசையில் ஜெயலலிதா தேர்தலில் கூட நிற்க முடியாத அளவுக்கு அவருக்கு எதிராக அமைந்த ஓர் ஊழல் தான் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் ஊழல். 1991 ஆம் ஆண்டு மிட்டல் என்பவர் கொடைக்கானலில் இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட பிளசண்ட் ஸ்டே என்ற ஓட்டல் கட்டிக்கொள்ள அனுமதி வாங்கி இருந்தார். பிறகு 1992 ஆம் ஆண்டு அதை ஏழு மாடிகளாக உயர்த்திக்கொள்ள அனுமதிக்கக் கோரி கொடைக்கானல் நகராட்சியிடம் விண்ணப்பம் செய்தார். ஆனால், கொடைக்கானல் நகராட்சி அனுமதி அளிக்கும் முன்பே பிளசண்ட் ஸ்டே ஓட்டலின் கட்டடப் பணிகள் நடக்க தொடங்கின. இந்த நிலையில், 1994 ஆம் ஆண்டு மே மாதம் அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு ஏழு மாடிகள் வரை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கி அனுமதி வழங்கியது.
அப்போதுதான் பிளசண்ட் ஸ்டே ஓட்டலின் உண்மையான உரிமையாளர்கள் யார் என்பது வெட்ட வெளிச்சமானது. அதற்குப் பிறகு 1996 ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் அனுமதி விஷயத்தில் ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் எச்.எம்.பாண்டே ஆகியோர் மீதும் ஓட்டல் நிர்வாகியான மிட்டல் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தது.
1997 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கானது சென்னை தனி நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்ற சிறப்பு நீதிபதி முன்னிலையில் நடந்து வந்தது. சிறப்பு நீதிபதி ராதாகிருஷ்ணன் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் அனுமதி விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த ஊழலில் ஜெயலலிதா, செல்வகணபதி, எச்.எம்.பாண்டே ஆகியோருக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா முதலான அனைவருக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2000வது ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் தீர்ப்பளித்தார். மேலும் அந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி வரை அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொள்ளலாம், அதுவரை தீர்ப்பை அமல்படுத்தத் தேவை இல்லை என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த தீர்ப்பால் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் கடும் கோபமடைந்தனர். மாநிலம் முழுவதும் போராட்டங்களும் வன்முறை வெறியாட்டங்களும் நடந்தன. அதிமுக கட்சிக்காரர்களால் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இரண்டு அதிமுகவினர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். நடந்த அந்த வன்முறை வெறியாட்டத்தில் ஐந்து பேருந்துகள் எரிக்கப்பட்டன. ஐம்பது பேருந்துகள் சேதமடைந்து 40 பேர் காயமடைந்தனர். தலைநகர் சென்னையில் பெரும் வன்முறைகள் நடந்தன. அரசின் 22 மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சேதமடைந்தன. இதனால் 27 பேர் காயமடைந்தனர். மாநில பேருந்து போக்குவரத்து 24 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 400 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 317 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெரும் வன்முறைக் காடாக மாறி இருந்தாலும் அதெல்லாம் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு ஓர் உச்சபட்சக் கொடுமை ஒன்று தர்மபுரி அருகே அரங்கேறியது. கல்வி சுற்றுலாவிற்குச் சென்றிருந்த கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் சிலர் தங்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டும் கோவை திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக கடும் கலவரம் ஏற்பட்டது. சாலை முழுவதும் கல்வீச்சும் கடையடைப்புமாக இருந்ததால் மாணவ மாணவிகள் வந்த பஸ் அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் ஓரமாக நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த மூன்று அதிமுக தொண்டர்கள் நின்று கொண்டிருந்த அந்த பேருந்து மீது பெட்ரோலை ஊற்றி விட்டனர். உடனே அங்கிருந்த பேருந்தின் டிரைவர் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பஸ்ஸின் உள்ளே மாணவியர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து எதுவும் செய்ய வேண்டாம், விட்டு விடுங்கள் என்று கெஞ்சியும் அதைப்பற்றி கவலைப்படாத அந்த அதிமுக தொண்டர்கள் பேருந்திற்கு தீ வைத்தனர்.
இதனை எதிர்பாராத மாணவ மாணவிகள் வேக வேகமாக பேருந்தை விட்டு இறங்க முயன்றாலும் அதற்குள் திகு திகுவென பற்றிக்கொண்ட தீ பேருந்து முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது. பேருந்தின் உட்பக்கம் எரிந்த தீயால் பேருந்து முழுவதும் கரும்புகை பரவியதால் உள்ளே இருந்த மாணவிகள் வெளியில் வர முடியாமல் மாட்டிக்கொண்டனர். இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி அணைக்க முயன்றார்கள். அதையும் மீறி எரிந்த தீயில் ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி என்ற மூன்று மாணவிகள் பேருந்தின் உள்ளேயே எரிந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும் மடிந்து போன மாணவிகளுக்காக அப்போது கண்ணீர் விட்டுக் கதறினார்கள். ஆனால் நடந்த அந்த சம்பவத்திற்கு காரணமான ஜெயலலிதாவோ மாணவிகளின் இறப்பிற்கு கடைசி வரை வருத்தமோ இரங்கலோ தெரிவிக்கவில்லை.
சம்பவத்தன்று உயிரிழந்த வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் கந்தசாமியை அப்போது நக்கீரன் நேர்காணல் செய்து வெளியிட்டது. அந்த நேர்காணலில் நக்கீரனிடம் பேசிய ஓட்டுநர் கந்தசாமி, "அன்று கல்வி சுற்றுலாவை முடித்துக்கொண்டு கோவையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது தருமபுரி அருகே வரும் போது சாலை எங்கும் கலவரம் நடந்து கொண்டிருந்தது. சிலர் வாகனங்களை நோக்கி கற்களை வீசினார்கள். அதனால் பேருந்து ஜன்னல்களை அடைத்து வைத்திருந்தோம். வாகனங்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு காவலரிடம் பேருந்தை பாதுகாப்பாக எங்கே நிறுத்தலாம் என்று கேட்டோம். அவர், ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் எஸ்.பி ஆபிஸ் இருக்கிறது. அங்கே கொண்டு போய் நிறுத்துங்கள் என்று சொன்னார். எனவே, நானும் பேருந்தை மெதுவாக அங்கே ஓட்டிச் செல்ல முயன்றேன். ஆனால், சாலையில் கலவரம் நடந்து கொண்டிருந்ததால் எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே, அங்கேயே ஒரு இடத்தில் பேருந்தை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தோம். அப்போது திடீரென ஸ்கூட்டரில் வந்த மூன்று பேர் பேருந்தின் உள்ளே பெட்ரோலை ஊற்றினார்கள். நாங்கள் அவர்களிடம், உள்ளே மாணவிகள் இருக்கிறார்கள். தயவு செய்து எதுவும் செய்துவிடாதீர்கள் என்று கெஞ்சினோம். ஆனால், அவர்கள் எங்கள் பேச்சை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காமல் பேருந்தை பற்ற வைத்தார்கள்" என்று கூறினார்.
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய அதிமுகவினர் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தாங்கள் செய்த அந்த பெரும் கொடூரத்திற்கான குற்ற உணர்ச்சி ஏதும் இல்லாமல் தங்களுக்குள் பேசி சிரித்தபடி இருந்ததாகவும், மேலும் அதிமுக சார்பில் அவர்களுக்கு மதிய உணவிற்கு பிரியாணி வாங்கித் தரப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்த பஸ் எரிப்பு வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். எனவே, வேறு நீதிமன்றத்திற்கு அந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று பஸ் எரிப்பு சம்பவத்தில் இறந்த மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் அப்பா வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்த்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் 2003 ஆம் ஆண்டு தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை சேலம் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் சேலம் நீதிமன்றத்தில் நடந்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனையும், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 25 பேருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
சேலம் நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குற்றவாளிகள் தரப்பு. ஆனால், அந்த மேல்முறையீட்டில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது குற்றவாளிகள் தரப்பு. உச்சநீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற சமூகத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனங்களை மன்னிக்க முடியாது என்று கூறி 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தார்கள். இதனால் குற்றவாளிகள் மூவரும் தங்களுக்கான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். ஆனால், குடியரசு தலைவர் அந்த கோரிக்கை மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தார்கள். அந்த மனு 2011 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் அடங்கிய அமர்வு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இப்படி நீதிமன்றத்தில் பல திருப்பங்களைச் சந்தித்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறை குற்றவாளிகளின் மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளான முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்கள். பஸ் எரிப்பு சம்பவம் கொலை செய்யும் நோக்கத்தோடு செய்யப்படவில்லை என்றும், உணர்ச்சிவசப்பட்டதால் நடந்த ஓர் அசம்பாவிதம் என்பதால் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் அந்த தீர்ப்பில் விளக்கம் தரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு மற்றும் அவருடைய பிறந்தநாளை ஒட்டி சிறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கழித்திருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் 1600 பேர் வரை விடுவிக்கப்பட்டனர். இதில் தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளான முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்றைய அதிமுக அரசு அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பரிந்துரை செய்தது. ஆனால், அதிமுக அரசின் பரிந்துரையை நிராகரித்து திருப்பி அனுப்பினார் ஆளுநர் பன்வாரிலால். ஆனால், மீண்டும் அன்றைய அதிமுக அரசு குற்றவாளிகளை விடுவிக்க அழுத்தம் கொடுக்க அரசின் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்தார் ஆளுநர். இதனால் சுமார் பதினெட்டு ஆண்டுகள் சிறையில் இருந்த தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளிகளான முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் மற்றும் நெடுஞ்செழியன் ஆகிய மூன்று பெரும் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள் விடுதலை அடைந்தார்கள்.