தை மாதம் முதல் ஆடி மாதம் வரை எங்களுக்கு வருமானத்தை தரக்கூடிய மாதங்கள். இந்த பாழாய்ப்போன கரோனா வந்ததால் எங்கள் வருமானம் பறிபோய்விட்டது. எங்கள் கிராமிய கலைஞர்கள் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. எங்கள் கலை, மக்களை மகிழ்விக்கின்ற நாட்டுப்புறக்கலைகள். எங்க கலைகளில் தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவை உள்ளன. உருமி, தவில் இசை, பம்பை, நாதஸ்வரம் இவைகளும் நாட்டுப்புறக் கலைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது.
இது மட்டுமல்ல பேண்டு வாத்திய கலைஞர்கள், தப்பாட்ட கலைஞர்கள் இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கலைகளை கற்றுத் தேர்ந்த கலைஞர்கள் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை சந்தோஷப்படுத்தி, அதன்மூலம் வரும் வருமானத்தை கொண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றி வந்தனர்.
இப்படிப்பட்டவர்கள் கடலூர், திட்டக்குடி, பண்ருட்டி, விருத்தாசலம், அரியலூர், கீழப்பழுவூர், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், பரங்கிப்பேட்டை என பல்வேறு பகுதிகளில் சுமார் 20,000 நாட்டுப்புற கலைஞர்களுக்கு மேல் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். இவர்களை போன்றே தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களில், பல ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்கிறார்கள்.
ஜனவரி இறுதியில் தொடங்கி ஜூலை வரை கலைஞர்களின் வருமானம் அதிகரிக்கும். இவர்கள் நடத்தும் நிகழ்ச்ச்சிகளும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு அந்த சமயங்களில் ஏகப்பட்ட போட்டிகள் இருக்கும். ஓய்வில்லாமல் கண்விழித்து பல்வேறு ஊர்களுக்கும் சென்று இரவு பகல் பாராமல் நிகழ்ச்சிகளை நடத்துவோம். அப்படிப்பட்ட எங்களின் வாழ்க்கை ஓட்டத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டது இந்த கரோனா.
இந்த ஆண்டு எங்களை போன்ற கலைஞர்களின் வாழ்க்கையை திக்கற்று நிற்க வைத்துவிட்டது. கரோனா தாக்கத்தால், திருமண மண்டபங்களில் ஆடம்பரமாக நடக்க வேண்டிய திருமணங்கள், சுபகாரியங்கள் அனைத்தும் இப்போது 10 உறவினர்களை மட்டும் வைத்து, வீடுகளிலேயே 5 நிமிடம் 10 நிமிடங்களில் முடியும் சுபகாரியங்களாக நடத்தப்படுகின்றன. இதனால் எங்களை போன்ற கலைஞர்களுக்கு அழைப்பும் இல்லை. அதனால் வருமானமும் இல்லை.
தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை மூலம் அறிவித்த 3000 ரூபாய் நிவாரண உதவித்தொகை கூட மாவட்டத்திலுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வழங்கப்படவில்லை. அப்படி வழங்கப்பட்ட தொகையை கொண்டு குடும்பத்தை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டில் இனிமேல் திருவிழாக்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை. பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு திருவிழாக்கள், மகாபாரத கதைகள், கண்ணன் பிறப்பு இது சம்பந்தமான தெருக்கூத்துகள் ஊருக்கு ஊர் களைகட்டி நடத்தப்படும், இந்த ஆண்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூற வேண்டும்.
கரோனா நோய் பரவல் தற்போதைக்கு முற்று பெறுவதற்கான சூழ்நிலை இல்லை. நிறைய மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினாலும்கூட, மக்கள் கூட்டமாக கூடக்கூடாது என்ற நிலை உள்ளது. மேலும் மக்களின் வாழ்க்கை முடங்கிப் போனதால் அவர்களும் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் தங்கள் ஊர் கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நடத்துவதற்கு சாத்தியமில்லை. அதேபோன்று குடும்ப நிகழ்வுகளான திருமணம், காதுகுத்து போன்ற சுப காரியங்களையும் இனிமேல் ஒவ்வொரு குடும்பத்திலும் தள்ளிப் போடுவார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் சாவுக்கு கூட சென்று ஆட கூட முடியாத நிலை உள்ளது.
மக்களின் வாழ்விலும் சாவிலும் மக்களை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்து விட்டது இந்த கரோனா. அடுத்து மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த ஆண்டுக்கான தொழில் முடிவுக்கு வந்துவிடும். இனிமேல் கரோனா நோய்க்கு முற்றுப்புள்ளி விழுந்த பிறகு அடுத்த ஆண்டு ஜனவரிக்கு பிறகுதான் எங்களை போன்றவர்களுக்கு வாழ்க்கைக்கு வழி ஏற்படும். அதுவரை எங்கள் குடும்பம் எப்படி நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே தமிழக அரசு எங்களை போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மழைக்கால நிவாரணமாக கூடுதலாக உதவித்தொகை வழங்க முன்வரவேண்டும் என்கிறார்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள்.