Skip to main content

"கரோனா...'' 100 டாக்டர்கள் மரணம்!!! -அலட்சியத்தில் அரசுகள்! மருத்துவ சங்கம் வேதனை!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
Corona

 

கண்ணுக்குத் தெரியாத நுண் கிரிமியான கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டே இருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் ஊடுருவி, நமது தமிழகத்திலும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

 

இந்த வைரஸ் தொற்றுக்கு இந்தியா முழுவதும் முன் கள பணியாளர்களாக பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார் ஆகியோரும் அதிகமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பல பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

இது சம்பந்தமாக இந்திய மருத்துவர் சங்க இளம் மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் ஈரோடு அப்துல் ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நமது இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தேசிய அளவில் இதற்கு சிகிச்சை பலனளிக்காமல் இரண்டரை சதவீத மக்கள் உயிரிழந்துள்ளனர்.

 

இதில் குறிப்பாக நாடு தழுவிய அளவில் 1,350 டாக்டர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதித்துள்ளனர். அதேபோல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை நூறு பேர் வரை மருத்துவர்கள் மட்டும் இறந்துள்ளார்கள். இறந்த டாக்டர்களில் சிலர் சர்க்கரை நோய், இதய நோய், ரத்த கொதிப்பு பிரச்சனைகளால் அவர்கள் உடல்நிலை பாதித்திருந்த போதும், சேவை மனப்பான்மையுடன் அவர்கள் கரோனா பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என தெரியவந்திருக்கிறது. 

 

இவர்கள் அனைவரும் நல்ல அனுபவம் மிக்க திறமையாக மருத்துவ பணி செய்பவர்கள். அதேபோல் அனுபவம் வாய்ந்த நூற்றுக்கணக்கான செவிலியர்களும் இந்த வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர். அவர்கள் இழப்பை இந்த அரசு முழுமையாக கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கான முழு பாதுகாப்பு நடவடிக்கையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 

அது போலவே இளம் டாக்டர்கள் பலரும் பாதித்து வருகின்றனர். இவர்களுக்கு முழு கவச உடையை தரமானதாக அரசுதான் வழங்க வேண்டும். அதேபோல் தொடர்ந்து அதிக நேரம் டாக்டர்கள் பணியாற்றுவதை தவிர்க்கும் வகையில், கூடுதல் டாக்டர்களை இந்த பணியில் பயன்படுத்த வேண்டும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் மருத்துவ பணியாளர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். உயிர் காக்கும் உன்னத பணியில் உள்ளவர்களின் உயிரும் மிக முக்கியம். ஆகவே அவர்களை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வேதனையுடன் தெரிவித்தார்.