'நிதானம்' வெல்லும் !
கழகக் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், சிறு வயதில் இருந்தே, ஸ்டாலின் அவர்களை கட்சித் தளத்தில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு. பள்ளியில் படிக்கும் போதே, கட்சிப் பணியை துவங்கி விட்டவர். மிசாவில் கைதியாக அடைக்கப்பட்டதிலேயே அவரது அரசியல் பயணம் வலுவாக துவங்கி விட்டது. மாநில இளைஞரணி அமைப்பாளராக, மாநில அளவிலான தனது கழகப் பயணத்தை துவக்கினார்.
அப்படித் துவங்கியவர் சட்டமன்ற உறுப்பினர், மேயர், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று மிக நிதானமாக அடியெடுத்து வைத்து உயர்ந்திருக்கிறார். இப்போது தலைவர் கலைஞர் அவர்கள் மறைவிற்கு பிறகு, ஸ்டாலின் தான் கழகத் தலைவராக வருவார் என்பது ஓர் இயற்கையான நடைமுறையாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த நிலைக்கு ஸ்டாலின் அவர்கள் வருவதற்கு ஆன காலம் என்பது, இன்றைய இந்திய அரசியலில் ஓர் நீண்ட காலகட்டம் ஆகும்.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக எடுத்துக் கொண்ட காலம், காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்வராக எடுத்துக் கொண்ட காலம், பிகாரில் தேஜஸ்வி துணை முதல்வராக எடுத்துக் கொண்ட காலம், பா.ஜ.கவின் வருண் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆக எடுத்துக் கொண்ட காலம், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக எடுத்துக் கொண்ட காலம் எல்லாவற்றையும் ஒப்பிட்டால் ஸ்டாலினின் 50 ஆண்டு கால பயணம் எவ்வளவு நீண்டது என்பது புரியும். அவரது நிதானம் புரியும்.
பத்தாண்டுகள் சட்டமன்றத்தில் ஸ்டாலின் அவர்களை அருகில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு. அவர் தமிழக துணை முதல்வராக, சட்டமன்ற கட்சித் தலைவராக பணியாற்றிய காலக்கட்டம் அது. எந்த நெருக்கடியிலும், ஒரு போதும் பதற்றம் அடைய மாட்டார். ஒரு போதும் நிதானம் தவற மாட்டார். வார்த்தைகளை இறைக்க மாட்டார்.
குறிப்பாக எதிர்கட்சியாக செயல்பட்ட காலத்தில், அவரை கோபப்படுத்த அ.தி.மு.கவின் அத்தனை உறுப்பினர்களும் முயற்சி எடுப்பார்கள். அதிலும் அவர்களின் தலைவர், முதல்வர் ஜெயலலிதாவே அந்த முயற்சியில் இறங்குவார். தலைவர் கலைஞரை 'சக்கர நாற்காலி' என்று கிண்டல் செய்ததற்காகவே விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கொடுத்து தி.மு.கவை சீண்டிப் பார்த்தார் ஜெயலலிதா. அதற்கெல்லாம் ஒரு நொடியும் நிதானம் தவறாதவர் கலைஞர்.
ஒரு முறை கவர்னர் உரையின் போது, அதற்கு எதிராக ஸ்டாலின் எழுந்து உரையாற்றினார். அ.தி.மு.கவினர் கூச்சல் இட்டனர். அதை கண்டு கொள்ளாமல், ஸ்டாலின் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தவறான வார்த்தைகளை பிரயோகம் செய்தனர், அவரை பெயர் சொல்லி அழைத்தனர். ஆனால் ஸ்டாலின் கோபப்படவில்லை. உரையை நிறைவு செய்து, வெளிநடப்பு செய்தார்.
விஜயகாந்த் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, அவரைக் கோபப்படுத்திய உடன் நாக்கைத் துறுத்தி குரல் எழுப்பியது நாடறிந்த செய்தி. சமீபத்தில் டி.டி.வி.தினகரனை இதே போல் அ.தி.மு.கவினர் நக்கல், நையாண்டி செய்த போது, அவர்களை முறைத்துப் பார்த்து தன் கோபத்தைக் காட்டினார். ஆனால் ஸ்டாலின் அவர்கள் ஒரு நாளும் அப்படி நடந்துக் கொண்டவர் அல்ல.
இதை வைத்து ஸ்டாலின் அவர்கள் அதிரடியாக செயல்படுவதில்லை, வீராவேசம் காட்டுவதில்லை என்று சில ஊடகங்களும், எதிர்கட்சிகளும் பேசுகின்றார்கள்.
ஆனால் அவர் தேவை இல்லாத வார்த்தைகளை பேசாமல், நிதானமாக அடியெடுத்து வைத்து பெற்றிருக்கிற வெற்றியை கடந்த வாரத்தில் நாடே பார்த்திருக்கிறது.
தலைவர் கலைஞர் உடல்நலம் குன்றி காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்ட போது, ஓர் மகனாக அவர் கலங்கிப் போய் நின்றதை தொலைக்காட்சி வாயிலாக கண்டோம். ஆனால் மருத்துவமனைக்கு சென்று, தலைவர் கலைஞருக்கான மருத்துவ சிகிச்சையை துவங்கிய உடனேயே அதை வெளிப்படையாக அறிவிக்க வைத்தார்.
அத்தோடு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வந்த போது, தலைவர் கலைஞரை நேரில் பார்க்க வைத்தார். அந்தப் புகைப்படத்தை பத்திரிக்கைகளில் வர ஏற்பாடு செய்தார். அதுவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலம் எப்படி மர்மமாக கழிந்தது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோதும் தலைவரை சந்திக்க வைத்தார் ஸ்டாலின்.
இதற்கிடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் தந்தை மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், தா.பாண்டியன் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
விருகம்பாக்கத்தில் ஒரு பிரியாணிக் கடையில் தி.மு.கவினர் சிலர் கலாட்டா செய்ததை ஊடகங்கள் பெரிது படுத்தின. உடனே அவர்களை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். அத்தோடு நிறுத்தவில்லை, நேரே விருகம்பாக்கம் சென்றார். தாக்கப்பட்ட கடை ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுவும் தந்தை கலைஞர் மருத்துவமனையில் இருக்கும் போது தான்.
தலைவர் கலைஞர் உடல்நிலை கடந்த 7ம் தேதி மாலை மிகவும் பின்னடைந்தது. தலைவர் மறைந்தால், அவரை எங்கே அடக்கம் செய்வார்கள் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது. தமிழ்நாடு முழுதும் இதுவே பேச்சாகிப் போனது.
திடீரென செய்தி, ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விரைகிறார்.
மெரினா கடற்கரையில் தலைவர் கலைஞருக்கு இடம் கோரி எடப்பாடியை சந்தித்தார் ஸ்டாலின். குடும்பத்தினரும் உடன் சென்றனர்.
மெரினா என்ற கடற்கரைக்கு அடையாளம் கொடுத்தவரே தலைவர் கலைஞர் தான். தம் அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு சதுக்கம், தலைவர்களுக்கு சிலைகள் என அதற்கு ஓர் வடிவம் கொடுத்தவர்.
அந்த தலைவருக்கு நினைவகம் அமைக்க, தமிழக அரசு தாமே முன் வந்து இடம் அளித்திருக்க வேண்டும்.
அய்ந்து முறை முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என அரசு பொறுப்புகளை வகித்து, எண்ணற்ற துறைகளில் தன் முத்திரையை பதித்து, தமிழை செம்மொழி அந்தஸ்திற்கு உயர்த்தி பல்வேறு சாதனைகளை படைத்தவருக்கு கேட்காமலே கொடுத்திருக்க வேண்டும்.
கேட்க வைத்ததும் அல்லாமல், ஸ்டாலின் அவர்களை தன்னை சந்தித்து கோரிக்கை வைக்கும் நிலையை உருவக்கியது எடப்பாடி பழனிசாமியின் தரமற்ற பண்பு. அதிலும் தலைமை செயலகத்தில் சந்திக்காமல், தன் இல்லத்திற்கு வரவழைத்தது கேடு கெட்ட குணம்.
ஸ்டாலின் அவர்கள் தகுதிக்கு, எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டிருக்கவே வேண்டாம். ஆனால் பின்னொரு காலத்தில், தலைவருக்காக கோரிக்கை வைத்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுந்து விடக் கூடாது என்று எண்ணித் தான் ஸ்டாலின் அவர்கள் தயங்கவில்லை.
தம் கட்சியின் தலைவருக்காக, கழகத்தின் செயல்தலைவராகக் கூட அல்ல, ஒரு தொண்டனாக எண்ணிக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.
சந்தித்த பிறகும் இடத்தை மறுத்தது தான், எடப்பாடி பழனிசாமியின் வஞ்சகக் குணத்தை வெளிப்படுத்தியது.
இதில் எடப்பாடியை தாண்டி யார் கை இருக்கிறது என்பதை நாடறியும். அப்படிப்பட்ட சூழலில், "என்னால் இயலாது, என்னை சந்திக்க வேண்டாம்" என்று மறுத்திருந்தால் கூட எடப்பாடியின் தரம் உயர்ந்திருக்கும்.
எடப்பாடி சார்பாக மறுத்து தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் அறிக்கை வெளியிட்ட பிறகும், அது குறித்து ஸ்டாலின் கோபப்படவில்லை. மீண்டும் ஒரு முறை கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பினார். அங்கு தான் உயர்ந்து நிற்கிறார் ஸ்டாலின்.
இதே நேரத்தில், தமிழகம் முழுதும் இருக்கிற தி.மு.க தொண்டர்கள் கொதித்தெழுந்து விட்டனர். பொதுமக்களும் மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
தலைவரின் பூவுடல் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளி வரு முன்னரே "வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்" என்ற கோஷம் மாத்திரமே தொண்டர்களிடமிருந்து வந்தது. பிறகு கோபாலபுரம் பயணத்திலும், சி.அய்.டி நகர் பயணத்திலும், ராஜாஜி ஹால் நோக்கிய தலைவரின் பயணத்திலும் அதே முழக்கம் தான். தலைவரைக் காண, ராஜாஜி ஹாலில் வரிசையில் நின்ற போதும் அதே முழக்கம் தான். அந்த அளவிற்கு மெரினாவை தலைவர் கலைஞரின் உரிமையாகவே பார்த்தார்கள்.
ஸ்டாலின் மாத்திரம் தன் அதிருப்தியை ஒரு வார்த்தையில் வெளிப்படுத்தியிருந்தால் கூட, தமிழகம் போர் களம் ஆகியிருக்கும். அதைத் தான் எடப்பாடி அரசு எதிர்பார்த்தது, அவர்களை பின்னிருந்து இயக்கியவர்களும் எதிர்பார்த்தனர். தி.மு.கவை ரவுடிக் கட்சியாக சித்தரிக்கலாம் என ஆவலோடு இருந்தனர். ஆனால் ஸ்டாலின் நிதானம் காத்தார்.
தி.மு.க சட்டத்துறையை அழைத்து, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வழிகாட்டினார். இரவே உயர்நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. நீதியரசர்கள் ஹுலுவாடி ரமேஷ் அவர்களும், சுந்தர் அவர்களும் விசாரணையை மேற்கொண்டனர். அரசு இடம் தர மறுத்து சொன்ன காரணம், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்பதைத் தான். அந்த வழக்கை தொடுத்த வழக்கறிஞர்கள் பா.ம.க பாலு, துரைசாமி ஆகியோர் அந்த வழக்குகளை திரும்பப் பெற்றனர். இதை அரசு எதிர்பார்க்கவில்லை. அரசு வழக்கறிஞர் பிதற்றினார். வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தார். ஆனால் நீதியரசர்கள் விடவில்லை. வழக்கை காலைக்கு ஒத்தி வைத்தார்கள். இரவு, இடப் பிரச்சினையால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று அரசு எதிர்பார்த்திருந்தது. ஆனால் சிறு சம்பவம் கூட அவர்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
இன்னொருபுறம் மெரினா கிடைக்கா விட்டால் எந்த இடம் என்ற விவாதம் சூடு பிடித்தது. ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் முக்கியமாக கருத்து சொல்ல வேண்டிய செயல்தலைவர் ஸ்டாலின் அமைதி காத்தார். அதற்கும் விமர்சனம் எழுந்தது.
மீண்டும் மறுநாள் காலை கூடியது நீதிமன்றம். விவாதத்தின் போது, அரசு தரப்பின் அறிவு கெட்டத் தனமான வாதங்களை நீதியரசர்களே இடைமறித்தார்கள். இறுதியில் தீர்ப்பு தலைவர் கலைஞருக்கான உரிமையை நிலை நாட்டியது. பேசாமல் வென்றுக் காட்டினார் ஸ்டாலின்.
செய்தி அறிவிக்கப்பட்ட நேரத்தில், ராஜாஜி ஹாலில், தலைவர் அவர்களின் பூவுடலுக்கு அருகே இருக்கிறார் ஸ்டாலின். அது வரை வருத்தத்திலும், புழுக்கத்திலும், அழுத்தத்திலும் கெட்டிப்பாறையாக நின்றவர், இடம் கிடைத்த செய்தி கேட்டு, குழந்தையானார்.
கைக் கூப்பி தொண்டர்களை வணங்கியவர், உடைந்து போனார். கண்களில் ஆழிப் பேரலையாய் நீர் பொங்கி வந்தது. சரிந்து போனார். அது மகிழ்ச்சியா, வருத்தமா, துக்கமா, கோபமா என்று சொல்ல முடியாத உணர்வு. ஒட்டு மொத்த கூட்டமும் தளபதியைப் பார்த்துக் கலங்கிப் போனது, தொலைக்காட்சியில் பார்த்த தமிழகமும்.
அதுவரை "வேண்டும் வேண்டும், மெரினா வேண்டும்" என்று கோஷம் எழுப்பிய தொண்டர்கள், "வாழ்க வாழ்க வாழ்கவே, தலைவர் கலைஞர் வாழ்கவே" என்று உணர்ச்சிப் பொங்க முழக்கமிட ஆரம்பித்தனர்.
அந்த சட்டரீதியிலான வெற்றியில் தான், ஸ்டாலின் அவர்களின் நிதானமும், உறுதியும், கலங்காத் தன்மையும், உணர்ச்சி வயப்படா தன்மையும், வார்த்தைகளை இறைக்காதப் பாங்கும், மொத்தத்தில் தலைமைப் பண்பும் வெளிப்பட்டது.
அது வரை அவரை இந்தியா பார்த்த பார்வை வேறு, அந்த நிமிடத்திற்கு பிறகு பார்க்கின்ற பார்வை வேறு.
இத்தோடு முடிந்து விடவில்லை.
பிரதமர் மோடி வந்து சென்ற பிறகு, காவல்துறையின் பாதுகாப்பு தளர்ந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை. ராகுல் காந்தி கூட்டத்தில் சிக்கி அவதிப்பட்டார். சில தலைவர்கள் கீழே விழுந்த அவலமும் நிகழ்ந்தது.
கூட்ட நெரிசலில் சிக்கி கழகத் தொண்டர்கள் மூவர் இறந்தே போயினர். பலர் காயமுற்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தலைவர் பூவுடல் வைத்திருந்த கண்ணாடிப் பெட்டி அங்கும் இங்கும் கூட்ட நெரிவில் அல்லாடியது. நேரே களத்தில் இறங்கினார் தளபதி. மைக்கை பிடித்தார். "இங்கு கலவரம் நடக்க சதி செய்யப்படுகிறது. அதற்கு இடங் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டுகிறேன்", என்றார். கூட்டம் கட்டுப்பட்டது. தலைவர் தரிசனம் தொடர்ந்தது.
அதே கட்டுப்பாட்டோடு தலைவரின் இறுதி ஊர்வலம் துவங்கியது. ஒரு மணி நேரப் பயணம். சின்ன சலசலப்பில்லை. மெரினாவில் தலைவருக்கு இறுதி மரியாதை, எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்தேறியது.
முதல் நாள் இரவு தலைவர் மறைவுற்ற செய்தி வெளியாகியதில் இருந்து, மறுநாள் முன்னிரவு நல்லடக்கம் முடியும் வரை சிறு சச்சரவும் இல்லை. " விருகம்பாக்கம் பிரியாணி பிரச்சினை" போல் ஏதும் சிக்காதா என்று காத்திருந்தவர்கள் வாயில் மண். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கப்பட்டது.
மறுநாள் காலை, மெரினா தலைவர் நினைவகம் வந்தார் ஸ்டாலின். தலைவருக்கு கண்ணீரஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து கிளம்பிய வாகனம் வீட்டை நோக்கி செல்லும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அவரது வாகனம், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றது. முதல் நாள் நெரிசலில் சிக்கி காயமுற்று, சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தார், ஆறுதல் கூறினார். எல்லோரும் வியந்து போனார்கள்.
முதல் நாள் நல்லடக்கத்தின் போது ஒரு மகனாக உடைந்து அழுதார். மறுநாள் காலையே இயக்கத்தின் தலைவராக, காயமுற்ற தொண்டர்களை காண வந்து விட்டார்.
முதல் நாள் தலைவர் கலைஞருக்கு அவர் எழுதி இருந்த உருக்கமான கடிதம் எழுதி இருந்தார்.
"அப்பா அப்பா" என்பதைவிட "தலைவரே தலைவரே" என நான் உச்சரித்தது தான் என் வாழ் நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை இப்போது 'அப்பா' என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?. இப்படியாக அழ வைத்தது தளபதி அவர்களது கடிதம்.
மகனாக துக்கத்தில் துவண்டு போனாலும், இயக்கத்தின் செயல் தலைவராக நிதானம் தவறாமல் தன் பணியை செய்தார்.
இந்த இரண்டு நாட்களில் , அவரது அரசியல் உயரம் உயர்ந்து கொண்டே போனது.
இனி அவர் சந்திக்கப் போகிற சவால்களையும் நிதானமாக, உறுதியாக எதிர் கொள்வார், வெற்றி கொள்வார், அது உள்ளிருந்து வந்தாலும் புறமிருந்து வந்தாலும்.
தளபதி, தலைவர் ஆக உருவெடுத்து விட்டார், "நிதானமாக" !