ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் நீண்ட வருடங்களாகப் பேரணி நடத்த முயன்று வந்த நிலையில், தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாகப் பேரணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் கூடவே பேரணிக்குத் தடை என்ற அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியாகும்.
நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அமைப்புக்கு இதுவரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாகக் கடந்த மாதம் இறுதியில் தமிழகத்தில் குறிப்பிட்ட 50 இடங்களில் பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே தமிழகத்தில் தற்போதைக்கு பேரணி நடத்த அனுமதி வழங்க முடியாது என்று தமிழகக் காவல்துறை உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாட, பேரணியை இந்த மாதம் நடத்த உயர்நீதிமன்றம் மீண்டும் அனுமதி வழங்கியது. இதற்கிடையே கடந்த 6ம் தேதி நடைபெற இருந்த ஊர்வலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பே ஒத்தி வைத்தது. உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கண்டு எதற்காகப் பயப்படுகிறது, நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற தொனியில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேசி வருகிறார்கள். இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பெயர் உங்களுக்குத் தெரியுமா? அல்லது தற்போது கடலூரில் பேரணி நடைபெற்றதாகக் கூறுகிறீர்களே கடலூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் பெயராவது உங்களுக்குத் தெரியுமா?
மோகன் பகவத் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர். மாநில தலைவர் என்று ஒருவர் இருக்க வேண்டும் இல்லையா? அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருமே இல்லை. அதாவது பரவாயில்லை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அடையாள அட்டை இருக்கிறதா? எங்களிடம் அடையாள அட்டை இல்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் கூறினார்கள், அதனால்தான் ஆதார் அட்டை கொடுக்கச் சொன்னார்கள். ஒரு நல்ல இயக்கமாக இருந்தால் உங்களுக்கு ஏன் அடையாள அட்டை இல்லை. திமுகவைச் சேர்ந்த நாங்கள் எல்லாம் எங்கள் தலைவர்கள் புகைப்படம் போட்ட அடையாள அட்டையை வைத்திருக்கிறோமா இல்லையா? நீங்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். நீங்கள் மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்களா? இவர்கள் தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் இவர்கள்தான் ஏமாந்து போகப்போகிறார்கள்" என்றார்.