Skip to main content

ஒரு விரல் புரட்சி உண்மையில் சாத்தியமா? - சர்கார் குறித்து திருமுருகன் காந்தி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Published on 10/11/2018 | Edited on 13/11/2018

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து, அதிமுகவினரின் எதிர்ப்பால் பரபரப்பாகியிருக்கிறது சர்கார் திரைப்படம் . அதில் 'இலவசங்களால் மக்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அதனால் அதனை ஒழிப்போம்' என்ற வகையில் காட்சிகளும் இலவச பொருட்களை தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் இங்கு இருக்கும் எந்த அரசியல் தலைவர்களும் ஒழுங்கில்லை. அதனால் சமூக செயற்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து அதிகாரத்தில் அமர வையுங்கள் அப்போதுதான் உங்களுக்கான ஆட்சி கிடைக்கும் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது. அப்படி உண்மையில் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியலுக்கு வருவார்களா, அப்படி வந்தால் அவர்களின் எண்ணம் என்ன, வாக்கு அரசியல் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தியிடம் பேசினோம்... அவர் நமது கேள்விகளுக்கெல்லாம் அவரின் பார்வையில் பதில்களைச் சொன்னார்.

 

 

tt

 

 

சர்கார் படத்தில் 'ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுமே, இங்கு மக்களுக்கான பணிகளை செய்யவில்லை, அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள். அதனால் அதற்கு மாறாக சமூக செயற்பாட்டாளராக இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை அதிகாரத்தில் அமர வைக்கவேண்டும்' என்று கூறப்படுகிறது. அதேபோல் 'அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள், அதனால் இளைஞர்களே நீங்கள் அவர்களை விட்டுவிடாதீர்கள்' என்பதும் ஒரு வசனம்.  நீங்களும் சமூக செயற்பாட்டாளராக இருக்கிறீர்கள், இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

 

அவர்களின் விருப்பத்தையும், அதனுள் இருக்கும் ஆசையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அடிப்படை அப்படி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் ஒருபக்கம், அதேசமயம் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள் மற்றொருபக்கம். இதில்  தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள்தான் நீண்டகாலம் பணி செயகிறான். அந்த அதிகாரிகளை நம்மால் தேர்ந்தெடுக்கவும் முடியாது, தண்டிக்கவும் முடியாது, பதவியைவிட்டு இறக்கவும் முடியாது. நீதிபதி, தாசில்தார், ஆட்சியர் யாராக இருந்தாலும் அவ்வளவுதான். சட்டத்தை இயற்றக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்துறை ஒரு பக்கம், அந்தச் சட்டத்தை நிர்வகிக்கும் நம்மால் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகத்துறை மற்றொருபக்கம், மூன்றாவதாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் கட்டமைப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு கட்சியில் இருக்கும் ஒருவரை குறை கூறினால் ஒட்டுமொத்த கட்சியும் எதிர்க்குரல் கொடுக்கும், இப்போது சர்காருக்கு பேசுவதுபோல். அதேபோல் நீதிபதியை பற்றி பேசினால் நேரடியாக அந்த நீதிபதி குறைகூறுபவரை தண்டித்துவிடுவார், காவல்துறையைப் பற்றி பேசினால் உடனடியாக வழக்கு பதிந்துவிடுவார்கள், ஒரு தாசிலதாரைப் பற்றி பேசினால் அவர்களின் சங்கம் பேசும். இப்படி அவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்கிறார்கள். ஆனால் மக்கள் ஒன்றாக நிற்கிறார்களா என்றால் இல்லை. 

 

இவர்கள் மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்கிறார்கள் ஆனால், உண்மையில் அவர்கள் மக்களைப் பிரதிநிதித்துவம்  செய்வதில்லை. அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. அவரைகளை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பது மக்களுக்கும் தெரியாது. இங்கே அரசியல் படுத்தப்படாத அதிகாரிகளும், அரசியல் படுத்தப்படாத அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? 

 

 

'ஒரு விரல் புரட்சி' என்பதுபோல் நூறு சதவிகிதம் வாக்களித்துவிட்டால் இங்கு மாற்றம் நிகழ்ந்துவிடாதா?

 

உடலில் நோய் இருக்கிறது என்பதை உணர்ந்தால்தான் மருத்துவரை தேடி செல்லுவோம், அதுபோல் சமூகத்தில் இருக்கும் நோயைப்பற்றி தெரிந்தவர்கள்தான் அதைத் தீர்க்கக்கூடிய நபரை தேர்ந்தெடுக்க முடியும். இங்கே சமூகத்தைப்பற்றி தெரிந்துகொள்ள தேவையான கல்வி ஏதாவது கொடுக்கப்படுகிறதா? நீங்கள் கணக்கு, அறிவியல் போன்றவை எல்லாம் படிக்கிறீர்கள். டெலஸ்கோப் வைத்து நிலவை பார்க்கிறீர்கள். ஆனால் என்றாவது உங்கள் சமூகத்தை பார்த்திருக்கிறீர்களா? சமூகத்தின் குறைகள் உங்களுக்கு சொல்லப்படுகிறதா, அதற்கான சட்டவிதிகள் பற்றி சொல்லித் தரப்படுகிறதா? ஒவ்வொருவருக்கும் என்ன அதிகாரங்கள் இருக்கிறது என்பது சொல்லித் தரப்படுகிறதா? அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால், அதை எதிர்த்து கேள்விகேட்க சொல்லித்தரப்படுகிறதா அல்லது சட்டங்களை பற்றியாவது என்றாவது சொல்லி கொடுத்திருக்கிறார்களா?

 

அல்ஜிப்ராவை பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அது நம் வாழ்வில் எப்பொழுதுமே பயன்படுவது கிடையாது. ஆனால் நாம் சட்டத்தின் கட்டமைப்பில்தான் இருக்கிறோம் அதைப் பற்றி என்றாவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? 

மிகப்பெரிய சாஃப்ட்வேர் கம்பனியில் பணிபுரிபவராக இருந்தாலும் அவருக்கு சமூகத்தைப் பற்றிய அறிவை எடுத்துப்பார்த்தால் பூஜ்யமாகத்தான் இருக்கிறது. அவர்கள் இங்கிருக்கும் பத்திரிகைகளையும் திமுக அதிமுக அரசைபற்றியும் தெரிந்துவிட்டால் அரசியல் தெரிந்துவிடும் என்று பேசுகிறார்கள். ஆனால், சமூகவியலைப் பற்றியோ, பொருளாதாரத்தை பற்றியோ, அரசியல் விஞ்ஞானத்தை பற்றியோ படித்திருக்கிறார்களா என்றால் இல்லை. படிக்காத ஏழை எளிய கிராமத்தார் எப்படி ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறாரோ அதுபோலவேதான் சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் பெரிய இடத்தில் இருப்பவரும் தேர்ந்தெடுக்கிறார். காரணம் இரண்டு பேருக்கும் சமூக அறிவே கிடையாது. அப்போ சமூக அறிவே இல்லாத மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்? சமூக அறிவே இல்லாத எம்எல்ஏ-வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த சமூக அறிவு இல்லாத எம்எல்ஏ-க்கள் என்ன செய்வார்கள்? சமூகத்திற்குத் தேவையற்ற திட்டத்தைத்தான் கொண்டுவருவார்கள். அதை யார் நிறைவேற்றுவார்கள்? சமூக அறிவே இல்லாத தாசில்தார், ஆட்சியர் போன்றவர்கள்தான் நிறைவேற்றுவார்கள். இப்படி ஒட்டுமொத்த கும்பலில் நாங்கள் மட்டும் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு இந்த மக்களை பற்றியும், இந்த சமூகத்தை பற்றியும் தெரியாத அதிகாரிகளை வைத்துதான் வேலை பார்க்க வேண்டும். 

 

tt

 

 

அப்படியென்றால் அரசியல் மாற்றத்தை எப்படி நிகழ்த்த முடியும்?

முதலில் மக்களை அரசியல்படுத்துங்கள். இன்று இருக்கும் மக்களுக்கு அவர்களின் தேவை என்னவென்பது தெரிகிறதா? அவர்களின் தேவையென்ன, உரிமையென்ன, அதிகாரமென்ன என்று அவர்களும் மக்களின் முக்கியத்துவத்தை அதிகாரிகளும் அறிய வேண்டும். பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதோடு அரசியல் முடிந்துவிடாது. அதில் அவர்கள் பங்கேற்கவேண்டும். இங்கு கேள்வி கேட்க இடம் இருக்கிறதா? இங்கு எல்லாருக்கும் கோபம் இருக்கிறது. ஆனால், அனைவரும் ஒன்றாக நிற்க தளம் இருக்கிறதா? நாங்கள் யாருக்கும் சார்பான ஆட்கள் கிடையாது, மக்களுக்கு சார்பான ஆட்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிர் கட்சி இயக்கங்கள்தான்.    

 

Next Story

பா.ஜ.கவுக்கு 100 சீட்! அ.தி.மு.க.வுக்கு ஷாக் கொடுத்த அமித்ஷா!

Published on 26/11/2020 | Edited on 28/11/2020

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்பதை அமித்ஷா பங்கேற்ற சென்னை விழாவின் மேடையிலேயே உறுதிபட அறிவித்தது அ.தி.மு.க .சீனியர் களையும் விசுவாசிகளையும் அதிர வைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் எதிர்பார்ப்பு என்னவென்பதை அமித்சாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டணியை இறுதி செய்யலாம் என கடந்த 20-ந்தேதி மூத்த தலைவர்களுடன் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக, 21ந் தேதி இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் இருவரும் அமித்சாவிடம் உறுதி அளித்துவிட்டனர்.

amitsha

கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவை முடித்துக்கொண்டு ஹோட்டல் லீலா பேலஸுக்கு திரும்பிய அமித்ஷாவை எடப்பாடி, பன்னீர், ஜெயக்குமார் மூவரும் சந்தித்தனர். மத்திய அரசிடம் எதிர்பார்க்கும் சில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் குறித்த கோரிக்கைகளை அமித்ஷாவிடம் கொடுத்த ஜெயக்குமார், 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியபோது, ""அவர்களின் விடுதலையை சி.பி.ஐ. எதிர்க்காது; விரைவில் நல்லது நடக்கும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்; ஆனால், இந்த விவகாரத்தில், தமி ழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அர சியல் செய்கின்றன'' என அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

பின்னர் ஜெயக்குமாரை வெளியே அனுப்பி வைத்து விட்டு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சும் சுமார் 50 நிமிடங்கள் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தனர். 234 தொகுதிகளையும் எந்த எண்ணிக்கையில் பகிர்ந்துகொள்வது என்பது பற்றித்தான் விவாதத்தின் பெரும் பகுதி கழிந்துள்ளது. எடப்பாடி கொடுத்த பட்டியலை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் அமித்ஷா. இரு தரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருந்தாலும், பிரதமரிடம் கலந்தாலோசித்து விட்டு மீண்டும் பேசுவோம் என அமித்ஷா சொல்ல, சந்திப்பு நிறைவடைந்தது.

எடப்பாடியிடமும் பன்னீரிடமும் நெருக்கமாக உள்ள அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்த போது, ""அமித்சாவுடன் பேசிய எடப்பாடி, விழாவில் அதி.மு.க. அரசை பாராட்டியும் தி.மு.க.வின் அரசியலை கடுமையாக விமர்சித்தும் நீங்கள் பேசிய பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூப்பராக இருந்தது உங்கள் பேச்சு என பாராட்டிவிட்டு, பா.ஜ.க.வுடனான கூட்டணியை தொடர்வதில்தான் எங்களுக்கும் விருப்பம். பாஜகவுக்கு எதிரான கருத்து வேறுபாடுகள் எங்கள் கட்சியின் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்தாலும் எதார்த்த அரசியலை சுட்டிக்காட்டி அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறோம் என அமித்சாவிடம் விவரித்திருக்கிறார் எடப்பாடி.
ggg
அப்போது பேசிய அமித்சா, தி.மு.க.வின் வாரிசு அரசியலையும் ஊழல்களையும் விமர்சித்திருக்கிறேன். அதே விமர்சனம் உங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, ஊழல் விவகாரங்களில் அதி.மு.க.வை தள்ளிவைத்துவிட முடியாது. இதனையும் மீறி அதி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான காரணங்களை இப்போது விவாதிக்க வேண்டாம். எங்களைப் பொறுத்த வரை, வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருக்கிறோம். தென்னிந்தியாவில் அதே நிலை வர வேண்டும்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி என்ன என்பது எங்களுக்குத் தெரியும்ங்கிற நிலையில், அதி.மு.க.வுடனான கூட்டணியை வலிமைப்படுத்த நினைக்கிறேன். அதனால், பாஜகவுக்கு 100, அதி.மு.க.வுக்கு 134, கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் சீட் ஒதுக்கிக் கொள்ளுங்கள் என பேரத்தை துவக்கியிருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த எடப்பாடி, பீகார் பாணி அரசியல்போல தமிழகத்தில் கூட்டணி பேசுகிறீர்கள். இதை எங்கள் நிர்வாகிகள் யாரும் ஏற்க மாட்டார்கள். அது தி.மு.க. கூட்டணிக்குத்தான் சாதகமாகும் என்றவர், ஓபிஎஸ்சை பார்க்க, தம்மிடமிருந்த ஒரு பட்டியலை அமீத்ஷாவிடம் ஓபிஎஸ் தந்துள்ளார். அதில், தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அதி.மு.க.வுக்கு 190, பாஜகவுக்கு 12, பாமகவுக்கு 17, ரஜினிக்கு 10, தேமுதிகவுக்கு 5 என சீட் ஷேரிங் செய்யப்பட்டிருந்தது.

அந்த பட்டியலைக் கண்டு அதிர்ந்து போன அமித்சா, இது ஆரோக்கியமானதாக இல்லையே என சொல்ல, தமிழகத்தில் அதி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும்தான் எப்போதுமே போட்டி. இதற்கு மாறாக, கூட்டணி கட்சிகளுக்கு யார் அதிகம் சீட்டுகளை தருகிறார்களோ அந்த கட்சி பெரும்பாலும் தோல்வியடைகிறது. அதாவது, தோழமை கட்சிகளை பிரதான கட்சி ஈசியாக ஜெயித்து விடுகிறது. அதனால்தான் இந்த தேர்தலில் 200 இடங்களில் போட்டிபோட தி.மு.க. திட்டமிடுகிறது. அதே அளவுக்கு அதி.மு.க.வும் போட்டியிட்டால்தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்.

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிரியும். ஆனால், கொரோனா நெருக்கடியால் அரசிய லுக்கு வர ரஜினி தயங்குகிறார். அவரை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியுடன் கூட்டணி வைப்பதற்கான சம்மதத்தைப்பெற உங்களால்தான் முடியும். 5 முக்கிய இடங்களிலும், 3 முறை ஊடகங்கள் மூலமாகவும் அவர் பிரச்சாரம் செய்தால் போதும். மேலும், பா.ஜ.க.- ரஜினியின் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டிய அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம். பா.ஜ.க.வின் 12 பேர் சட்டமன்றத்துக்குள் நுழைய நாங்கள் கேரண்டி. அதனால், இந்த சீட் ஷேரிங்கிற்கு சம்மதியுங்கள் என இயல்பாக சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், ஒருவேளை ரஜினியை சம்மதிக்க வைக்க முடியாமல் போனால், அவருக்கான 10 சீட்டுகளை பா.ஜ. க.வுக்கு ஒதுக்கு கிறோம் என்றிருக்கிறார். எடப் பாடியும் பன்னீரும் பேசியதன் பொருளை அமித்ஷா உணர்ந்திருந்தாலும், குறைந்த பட்சம் பா.ஜ.க. 54 சீட்டுகளில் போட்டியிட வேண்டுமென தொகுதிகளை அடையாளப் படுத்தியிருக்கிறோம். அதனால், பிரதமரிடமும் பேசிவிட்டுச் சொல்கிறேன் என பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டார்''‘’ என்று சந்திப்பில் நடந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள் மேலிட தொடர்பாளர்கள்.

அ.தி.மு.க. தலைமையிடம் பேசியதைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள், அணித் தலைவர்களுடன் ஆலோசித்த அமித்ஷா, ""கூட்டணி பற்றி யாரும் பேச வேண்டாம். கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். ஜனவரியில் வேட் பாளர்களை அறிவித்து விடலாம். பாஜக இடம் பெறும் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும்'' என்று நம்பிக்கைத் தெரிவித்தார். மாநில தலைவர் முருகன் பேசும் போது, சட்டமன்றத்தில் வலிமையான கட்சியாக பாஜக இருக்கும் வகையில் பாஜகவின் தேர்தல் வியூகம் இருப்பதாக குறிப்பிட்டார்.

அதன்பிறகு இரவு 11 மணிக்கு அமித்சாவை சந்தித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆலோசித்துவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார். அ.தி.மு.க. தலைமை முன்வைத்த சீட் சேரிங் விசயத்தையும் ரஜினியை பற்றியும் அமித்ஷா சொல்ல, பாஜகவுக்கு 100சீட்! இதில் ரஜினிக்கு 50 சீட்டுகளை நாம் ஒதுக்கலாம்; அ.தி.மு.க.வுக்கு 134 சீட்! அதில் பா.ம.க.-தே.மு.தி.க.வுக்கு அ.தி. மு.க. ஒதுக்கினாலும் சரி, அல்லது அக்கட்சிகளை கழட்டி விட்டா லும் சரி என்கிற யோசனையை தெரிவித்துள்ளார் குருமூர்த்தி என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள். இந்த நிலையில், 22-ந்தேதி டெல்லிக்கு அமித்சா புறப்படுவதற்கு முன்பு ரஜினியை சந்திக்க திட்டமிட்டார். ஆனால், அஷ்டமி என்பதால் சந்திப்பு தவிர்க்கப்பட்டது என்கிறது பா.ஜ.க தரப்பு.

அமித்சாவுடனான சந்திப்பு விபரங்களை கட்சியின் சீனியர்களிடம் எடப்பாடியும் பன்னீரும் பகிர்ந்துகொள்ள, இந்த சீட் ஷேரிங் பட்டியல்தான் சரியானது. இதற்கு பாஜக ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு லாபம்தான் என்றிருக்கிறார்கள். சென்னை பயண விபரங்களை மோடியிடம் அமித்ஷா விவாதித்த பிறகே, அமித்சாவின் சென்னை வருகை அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை தருமா அல்லது மகிழ்ச்சியைத் தருமா என்பதை எடப்பாடிக்கு உணர்த்தும் என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

-இரா.இளையசெல்வன்

___________
Go back! பதாகை வீச்சு!

goo

விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்து ரோட்டில் நடந்தபடி தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற அமித்ஷாவை நோக்கி வந்த பழவந்தாங்கலைச் சேர்ந்த 67 வயது துரைராஜ், "அக்கவுண்ட்டில் போடுறதா சொன்ன 15 லட்சம் எங்கே?' எனக் கேட்டபடி தன் கையிலிருந்த வரவேற்பு பதாகையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர் போலீசார். அவருக்கு பா.ஜ.க.வினரிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. இதனிடையே, தமிழகத்தின் நிதி தேவையை நிறைவேற்றாத பா.ஜ.க அரசைக் கண்டித்து, GoBackAmitShah என்ற ஹேஷ்டாக்கும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.


-கீரன்


 

Next Story

ஒன்றியம் பிரித்து, புதிய ஒன்றியச் செயலாளர் நியமிக்க முயற்சி.. அ.தி.மு.க.வினர் அதிருப்தி!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

admk inter politics

 

சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை அந்தப் பதவியில் இருந்து எடுத்துவிட்டு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அந்தப் பதவியில் நியமித்துள்ளார்கள் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்கள்.


தமிழகம் முழுவதும் கழக வளர்ச்சிக்காக மாவட்டங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என வாய்ப்புக்கு தகுந்தார்போல் பிரிக்கப்பட்டு புதிய புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டங்கள் மட்டும்மல்லாமல் ஒன்றியங்களையும் பிரிக்க மாவட்டச் செயலாளர்களிடம் பட்டியல் கேட்டுள்ளது. அதன்படி தண்டராம்பட்டு ஒன்றியம் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளது. தற்போது தண்டராம்பட்டு ஒன்றியச் செயலாளராக உள்ள ராஜாவை, கிழக்கு ஒன்றியச் செயலாளராக மாற்றிவிட்டு, மேற்கு ஒன்றியத்தின் செயலாளராக ஜானகிராமன் என்பவரை நியமனம் செய்ய, மாவட்டச் செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்துள்ளார்.


இதனை அறிந்து தண்டராம்பட்டு மேற்கு பகுதியைச் சேர்ந்த கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பிவருகின்றனர். இதுப்பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வினர், இதற்கு முன்பு ஒன்றியச் செயலாளராக ஜானகிராமன் இருந்தார். 2011– 2016 வரை தண்டராம்பட்டு ஒன்றியக் குழு தலைவராக இருந்தார். இந்த ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு வர தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக் கொண்டார். தனி மெஜாரிட்டியில் தி.மு.க. வெற்றி பெற்று சேர்மன் பதவியில் உட்காரும் நிலையில் இருந்தது. ஆனால் தி.மு.க.வின் மாவட்ட மேலிடத்தில் பேசி தி.மு.க. கவுன்சிலர்களை அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட வைத்து சேர்மன் பதவியில் அமர்ந்தார். துணை சேர்மன் பதவியில் தி.மு.க.வை சேர்ந்தவர் வெற்றி பெற்றார். சேர்மன் பதவியைத் தனக்கு விட்டுத் தந்ததற்காக ஜானகிராமன் தி.மு.க.வுக்கு விசுவாசமாகவே இருந்தார். இதனை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பார்வைக்கு கொண்டுசெல்ல அப்போது, ஒன்றியச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. 

அவர் மறைவுக்குப் பின்பு, ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்ட பலருக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளைத் தந்துவருகிறார்கள். அப்படித் தான் தரவேண்டியவர்களுக்கு லம்பாக தந்து மீண்டும் ஒன்றியச் செயலாளராக ஜானகிராமன் முயற்சி செய்கிறார். ஜானகிராமன், மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. அவர் இருப்பது தண்டராம்பட்டில். ஆனால் தானிப்பாடி, மேல்மலமஞ்சனூர், மோத்தக்கல், போந்தை எனத் தெற்கு பகுதிக்கே சம்மந்தமில்லாத நபரைக் கொண்டு வந்து மேற்கு ஒன்றியச் செயலாளர் எனச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது எனக் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் முறையிட்டால் திட்டுகிறார். இதுபற்றி ஒருங்கிணைப்பாளர்களான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் முதல்வர் பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம், எங்களுக்கு அதுபற்றி நியாயம் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் வேறுமாதிரியான முடிவுகளை எடுப்போம் என்கிற முடிவில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.