Skip to main content

நீங்கள் என்னைப் பிடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்!: இராணுவவீரரிடம் சொன்ன தீவிரவாதி!

Published on 04/08/2017 | Edited on 04/08/2017
நீங்கள் என்னைப் பிடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்!: இராணுவவீரரிடம் சொன்ன தீவிரவாதி!

தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள், இராணுவ வீரரிடம் சிக்கிக்கொண்ட தீவிரவாதி சரணடைய மறுத்துள்ளார். வேறுவழியின்றி அவரை சுட்டுக்கொன்ற இராணுவவீரரின் டெலிபோனிக் ஆடியோ பதிவுகளில், அவர்கள் இருவருக்கும் இடையேயான நீண்ட உரையாடல் பதிவாகியுள்ளது.



லஷ்கர்-இ-தொய்பா எனும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அபு துஜானா என்பவரை, இராணுவ அதிகாரி ஒருவரின் தலைமையிலான தனிப்படை சுற்றிவளைத்துள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல் இதோ..

அபு: நான் எதற்காக சரணடைய வேண்டும்? நான் வீரமரணம் அடையத்தான் வீட்டைவிட்டு வந்தேன். நான் இன்றோ நாளையோ சாகப்போகிறவன். 

அதிகாரி: உன் பெற்றோர், மனைவிக்காகவாவது நீ சரணடைந்துவிடு. உனக்கு மறுவாழ்வு கிடைக்க நாங்கள் வழிசெய்வோம்.

அபு: நான் திருமணமாகாதவன். திருமணம் செய்யக்கூடாது என்பது எங்கள் விதிமுறை. நான் வீட்டைவிட்டு வெளியேறிய நாளில் என்னை நினைத்து வருந்தியே என் பெற்றோர் இறந்துவிட்டனர்.

அதிகாரி: நீ ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். காஷ்மீரில் நடப்பது ஒரு அரசியல் விளையாட்டு. உன்னை வைத்து அதில் விளையாடுகிறார்கள்.

அபு: அரசியல் சிஸ்டம் பற்றி எனக்குத் தெரியும். எனக்கு எல்லாவற்றையும் பற்றி தெரியும். இந்த விளையாட்டை நடத்தவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்; நான் என்ன செய்ய முடியும்? நான் என் பாதையை அடைய வேண்டும்.

அதிகாரி: நான் உன்னைப்பிடிக்க நீண்ட தூரம் வந்திருக்கிறேன்; கடினமான பாதைகளைக் கடந்து..



அபு: (சிரிக்கிறார்)நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள். நீங்கள் பேசுவது போன்ற நல்ல வார்த்தைகளைக் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. 

ஒவ்வொரு நாளும் இந்த ஆட்டம் நடக்கும்போதும், நாங்கள் தப்பித்துவிட்டோம். இன்று என்னை நீங்கள் பிடித்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்.

அதிகாரி: நான் என் கடமையைச் செய்யவேண்டி வந்திருக்கிறேன்.

அபு: நானும் என் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

அதிகாரி: யாரும் யாரையும் கொல்லவேண்டிய அவசியம் இல்லை. சரணடைந்துவிடு.

அபு: நான் சரணடைய விரும்பவில்லை. உங்களுக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்; நான் என்னுடைய வேலைகளைச் செய்கிறேன். என் விதியை கடவுள் தீர்மானித்துக்கொள்வார்!

அதிகாரி: நீ ஜிகாத் அல்ல. நீ சரணடைந்து காஷ்மீர் மக்களுடன் பேசவேண்டும். அங்கு நடக்கும் இரத்தக் கலவரங்கள் முடிவுக்கு வரவேண்டும். 

அபு: கலவரங்களுக்கு நாங்கள் மட்டும்தான் காரணமா? மக்களுக்குத் தெரியும். நீங்கள் வந்த வேலையைப் பாருங்கள்.

அதிகாரி: மக்கள் உன் குரலைக் கேட்கவேண்டும் (அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது)



இறுதியில் அபு துஜானா மற்றும் உடனிருந்த உதவியாளர் இருவரையும் இராணுவப்படையினர் சுட்டுக்கொன்றனர். அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை.

இந்தத் தாக்குதலை இராணுவ பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்திய காவல்படையினர் இணைந்து நன்கு திட்டமிட்டு நடத்தியுள்ளனர். அபு துஜானாவிற்கு 20 வயது இருக்கும் என தகவல் தெரிவிக்கப்படுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்