மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான "வாழ்வுரிமை மாநாடு" பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது.
மாநாட்டில் பேசிய தமிமுன் அன்சாரி, அசாமில் என்.ஆர்.சி. அமல்படுத்தியக் காரணத்தினால் 19 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள் என்பது பலருக்கும் தெரியவில்லை. எனவே அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த போராட்டத்தை நடத்துகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரின் குடியுரிமையை பறித்திருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி குடும்பத்திற்கே இதுதான் நிலை! எனவேதான் அசாமில் மிகப்பெரிய சமூக சீர்குலைவை ஏற்படுத்திய என்.ஆர்.சி.யை நாடு முழுவதும் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறோம்.
இப்போது எதிர்ப்பு காரணமாக என்.பி.ஆர். சட்டத்தை அமல்படுத்துவோம் என்கிறார்கள். அதில் தந்திரமாக என்.ஆர்.சி.யில் உள்ள ஆறு கேள்விகளை என்.பி.ஆரில் சேர்த்து கொள்ளைப்புறம் வழியாக என்.ஆர்.சி.யை திணிக்க முயல்கிறார்கள். எனவேதான் என்.பி.ஆரையும் எதிர்க்கின்றோம்.
வாஜ்பாய் காலத்தில், மன்மோகன் சிங் காலத்தில் வடிவமைக்கப்பட்ட என்.பி.ஆரை நாங்கள் எதிர்க்கவில்லை. இன்றைய மத்திய அரசு, கூடுதலாக ஆறு கேள்விகளுடன் கொண்டுவரக்கூடிய என்.பி.ஆரைத்தான் எதிர்க்கிறோம். வழக்கமாக எடுக்கக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பையும், சாதிவாரி
மக்கள் தொகை கணக்கெடுப்பையும் எடுங்கள், அதில் தவறில்லை என்று வாதிடுகிறோம்.
நாங்கள் நடத்தக்கூடிய போராட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும், பன்முக கலாச்சாரத்திற்கும், அரசியல் சாசன சட்டத்தின் கொள்கைகளை நிலைநாட்டுவதற்குமானது. எனவே இதில் சமரசம் செய்ய மாட்டோம். சமாதானமும் ஆகமாட்டோம்.
ஜனநாயக சக்திகள் எல்லோரையுமே களத்தில் ஒருங்கிணைப்போம். எங்களது போராட்டம் அமைதி வழியில் தொடரும். தேவைப்பட்டால் பாஜக ஆட்சி இருக்கும் 2024 மே வரை தொடரும். இப்பொழுதே நாட்டின் ஜனநாயகத்தை பல வழிகளிலும் அவர்கள் நாசப்படுத்த துவங்கிவிட்டார்கள்.
உதாரணத்திற்கு நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. டெல்லி கலவரத்தை கண்டித்து எப்.ஐ.ஆர். போட சொன்ன நீதிபதி முரளிதர் இரவோடு இரவாக மாற்றம் செய்யப்படுகிறார். எவ்வளவு பெரிய அநீதி இது. ஒரு நீதிபதியால் நீதியை பேச முடியவில்லை. பழிவாங்கப்படுகிறார்.
டெல்லி கலவரத்தில் ஒரு காவலர் சுட்டுக்கொல்லப்படுகிறார். அந்த காவலர் உடலில் இருந்த குண்டு டெல்லி காவல்துறைக்கு சொந்தமானது என பிரேத அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அவரை சுட்டுக்கொன்றது யார்? இந்த சம்பவம் மராட்டிய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே மர்மமாக கொல்லப்பட்ட சம்பவத்துடன் ஒத்துப்போகிறது. எனவேதான் இதில் மத்திய புலனாய்வு விசாரணையை கேட்கிறோம்.
எங்களது போராட்டத்தில் இந்துக்களும், கிருத்துவர்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும், தலித்துக்களும் இணைந்திருத்திருக்கிறார்கள். தொடர்ந்து இணைந்தே குரல் கொடுப்போம். மக்களை பிரிக்க அனுமதிக்க மாட்டோம். துடிப்பு மிக்க இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்றார்.
மாநாட்டில் பேசிய இ.கம்யூ. டி.ராஜா, தென்னிந்தியாவிலேயே நான் பார்த்த மிகப்பெரிய கூட்டம் இந்தக் கூட்டம்தான் என்றார். கூட்டத்தில் சரிபாதி பெண்கள் பங்கேற்றிருந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர் இந்தியா சார்பில் முழக்கங்களை எழுப்பியபோது, பெண்கள் ஆவேசத்துடன் குரல் எழுப்பியது உணர்ச்சிவசமாக இருந்தது. இந்த மாநாட்டில் உத்திரப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தலைவர்கள் வருகை தந்தனர்.
மேலும் அலிகார் பல்கலைகழக மாணவர் பேரவை ஹுசைவா அமீர் ரஷாதி, JNU மாணவர் பேரவை சதீஷ் யாதவ், AMU மாணவர் பேரவை கௌதம், குலிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் முக்தார் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களை இந்த மாநாட்டில் தவிர்த்துவிட்டார்கள். பிரபலம் இல்லாதவர்களை அழைத்து வந்து, பிரபலங்களே கூறாத கருத்துக்களை கூறவைத்து, மிகப்பெரிய மக்கள் எழுச்சியை அணி திரள செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரியிடம் கேட்டபோது, யாராவது தமிழக பிரபலங்களை அழைத்திருந்தால் அவர்களுக்காக கூட்டம் கூடியிருக்கும் என்று பேசப்பட்டிருக்கும். இது முழுக்க முழுக்க எங்களுக்காக வந்த கூட்டம் என்பதனை காட்டுவதற்காகவே நாங்கள் தமிழக பிரபலங்களை தவிர்த்துவிட்டு, வட இந்தியாவில் இருந்து களத்தில் போராடும் ஆளுமைகளை அழைத்து வந்தோம் என்றார். தனது ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தில் மக்கள் எழுச்சியை காட்டியிருக்கிறது மனிதநேய ஜனநாயக கட்சி.