சினிமாவிலிருந்து சந்தை வரை - வகைவகையான வட்டி!

வெளியில் வண்ணமயமாக இருக்கும் சினிமாவுலகிலும் சரி, வறண்டிருக்கும் நிஜவுலகிலும் சரி கந்துவட்டி கொடுமைகள் இருக்கின்றன. வட்டிக்குமேல் வட்டி வாங்கி, வறுமையின் விளிம்பில் இருப்பவர்களை, வாழ்க்கையின் விளிம்பிற்கு தள்ளி விடுவதுதான் கந்துவட்டி முதலான வட்டி முறைகள். இது ஒரு குடும்பத்தை கொளுத்திக் கொள்ளவும் செய்யும், கழுத்தை இறுக்கிக் கொள்ளவும் செய்யும் என்பதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன. கந்து வட்டி முதலான பிறவகை அதீத வட்டி முறைகள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளன. நிஜ உலகத்தில் தடைசெய்யப்பட்ட பலவும், நிழல் உலகத்தில் பிரகாசமாக இருப்பதும் நமக்கு தெரிந்ததே. அவ்வாறு நிழல் உலகத்தில் பிரகாசமாக இருந்து சாதாரண மக்களின் வாழ்க்கையை இருட்டாக்கும் வட்டிகளின் வகைகளை காண்போம்.
1. நாள் வட்டி:
இது வியாபாரிகள் மூலப்பொருட்கள் வாங்க மற்றும் மற்ற தேவைகளுக்காக வாங்குவதால் இது அவர்களிடையே பிரபலம். ரூ.1000 கடன் வாங்கினால் அதை மாலையில் ரூ.1100 ஆக திருப்பி தரவேண்டும்.
2. ராக்கெட் வட்டி:
நாள் வட்டியில் பணத்தை திருப்பி தர முடியாத ஏழை மக்கள், வியாபாரிகளுக்காக அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் இது. ரூ.1000 கடன் வாங்கினால் தினமும் ரூ.100 வட்டி செலுத்தி பத்தாம் நாள் முடிவில் ரூ.1000 அசலை திருப்பி தருவதே இது. ஆக பத்தாம் நாள் முடிவில் நாம் செலுத்திய மொத்தத்தொகை ரூ.2000. நல்ல திட்டம்தானே.

3.வார வட்டி:
கேட்கும் கடன் தொகையில் 15 சதவீதத்தை பிடித்தம் செய்துவிட்டுதான் கையில் கொடுப்பார்கள். (ரூ.10,000 வாங்கினால் ரூ.8,500 மட்டுமே கைக்கு கிடைக்கும்) வாராவாரம் ரூ.1000 வீதம் பத்து வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்.
4.கம்ப்யூட்டர் வட்டி:
ரூ.10,000 வாங்கினால் ரூ.8,000 மட்டுமே கிடைக்கும். ஒரு வாரத்திற்குள் அதை ரூ.10,000 மாக திருப்பி தரவேண்டும். வாங்கிய கடனை ஒரு வாரத்திற்குள் அடைத்தே ஆகவேண்டும்.
5. மீட்டர் வட்டி:
ரூ.1,00,000 கடன் கேட்டால் 8,50,00 மட்டுமே வழங்கப்படும். அதை வாரம் ரூ.10,000 வீதம் பத்து வாரங்களுக்குள் செலுத்தவேண்டும். தவறினால் வட்டி கூடிக்கொண்டேபோகும். இது திடீர் தேவைகளில் சிக்கித்தவிக்கும் நடுத்தர மக்களிடையே பிரபலம்.
6.ரன் வட்டி:
இது உண்மையிலேயே கடன் வாங்கியவர்களை ஓடத்தான் வைக்கும். ரூ.10,000 கடன் வாங்கினால் ரூ.8,500 தான் கொடுக்கப்படும். நான்கு மணிநேரத்தில் அதை 15 சதவீத வட்டியுடன் திருப்பி தரவேண்டும். நேரம் அதிகமாக, அதிகமாக அடுப்பில் வைத்த மீட்டர் போல வட்டி கூடிக்கொண்டே போகும்.
7.ஹவர் வட்டி:
ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கும் வட்டி. 12 மணிநேரத்திற்குள் திருப்பி தரவேண்டும்.
8.மாத வட்டி:
சொத்தை அடமானமாக வைத்து வாங்கப்படும் கடனுக்கு போடப்படும் வட்டிதான் இது. நீண்டகால அடிப்படையில் கடன் பெறுபவர்களின் தேர்வு இது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாதம்,மாதம் வட்டி செலுத்தவேண்டும். சொத்தையே இழக்கும் அபாயம் உண்டு.

இதை போன்ற வட்டி கட்ட வேண்டாம் என்றுதான் அரசு வங்கிகளில் கடன் கொடுக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது என சிலர் கூறலாம். ஆனால் சாகப்போறேன் தண்ணி குடுங்கடானு கேட்டா, செத்ததுக்கப்பறம் வந்து பால் ஊத்தும் நிலையில்தான் வங்கிக்கடன் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். விதிமுறை, வழிமுறைகளை பின்பற்றிதான் ஆகவேண்டும். ஆனால் அலட்சியமாய் இருக்கும் அதிகாரிகளால்தான் அதிகளவில் தாமதம் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லை, சட்டத்தில் உள்ளபடி கடன் வாங்கினாலும், சட்டத்தில் தடை செய்யப்பட்டபடி கடன் வாங்கினாலும் கடனை திருப்பி கேட்க வருபவர்கள் என்னவோ அடியாட்கள்தான்.
கமல் குமார்