- தெ.சு.கவுதமன்
உலக நாடுகள், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், இரும்புத்திரை நாடான சீனாவில் அபாயகரமாக அதிகரித்து வரும் கரோனா தொற்று, அனைத்து கொண்டாட்டங்களுக்கும் ஆப்பு வைக்குமென்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஜிரோ கோவிட் பாலிசி என்ற பெயரில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தீவிர லாக்டௌன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த கட்டுப்பாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்ததால், லக்டௌனில் பல்வேறு தளர்வுகளை சீனா கொண்டு வந்தது. ஆனால் அத்தகைய தளர்வுகளுக்குப்பின் கரோனா பரவல் அபரிமிதமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சீனாவில் லாக்டௌன் கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில், கரோனா தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு எதுவுமே ஏற்படுத்தப்படவில்லை. எனவே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், உருமாறிய BF.7 கரோனா வெகு தீவிரமாக பரவி வருகிறது. கடந்த மாதம்வரை பெரிதும் நெருக்கடியில்லாமல் இருந்த சீன மருத்துவமனைகளில், தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக, ஐ.சி.யூ. அறைகள் முழுவதும் நிரம்பிவழிகின்றனவாம்.
இதன் காரணமாக, மருத்துவமனைகளுக்கு வெளிப்புறத்திலும், வரவேற்பறைகளிலும் ஆங்காங்கே படுக்கைகளைப் போட்டும், வீல் சேர்களில் அமர்ந்தபடியும் கரோனா சிகிச்சையெடுக்கும் மோசமான சூழலை சீனா சந்தித்து வருகிறது. கரோனா சிகிச்சைக்காக வரும் பலரும், கொரோனாவுக்கான சிகிச்சை தொடங்குமுன்பே உயிரிழக்கும் சூழலும் நிலவுகிறது. அதேபோல், சிகிச்சைக்கான மருத்துவமனைகள் கிடைக்காமல் பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அலைந்து திரியும் நிலையும் ஏற்பட்டுள்ளதாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாம்.
ஐ.சி.யூ.வில் பரிசோதனைக்காக வரும் நோயாளிகள், ஓரிரு நாட்களில் சற்று சரியாகவும், ஜெனரல் வார்டுகளுக்கு மாற்றப்படுவது தான் வழக்கம். ஆனால் தற்போது கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்பவர்கள், சரியாக பல நாட்களாவதால், ஐ.சி.யூ.விலேயே தொடர்ந்து இருக்கிறார்கள். எனவே அடுத்தடுத்து நோயாளிகள் வரும்போது இருக்கைக்கான பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக, மருத்துவமனையின் அனைத்துத் தளங்களிலும் நோயாளிகள் கூட்டம் எகிறுவதாக அங்குள்ள மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சீன மக்கள், தடுப்பூசிக்கு மாற்றாக வேறு மருத்துகளை எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும், அப்படி எடுப்பதால் கரோனா குறைவதேயில்லையென்றும் கூறப்படுகிறது. எனவே, கரோனா பரவல் வேகம் மிகவும் அபாயகரமாக இருக்கிறது. நம் நாட்டில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்தபோது மருத்துவமனையில் இடமில்லாமல் பொதுமக்கள் அல்லல்பட்டது போன்ற சூழல் தற்போது சீனாவில் நிலவுகிறதாம். ஒரு நாளைக்கே 3 கோடி பேர்வரை கரோனாவால் பாதிக்கப்படும் அளவுக்கு அதிதீவிரமாக கரோனா பரவுவதாகக் குறிப்பிடுகிறார்கள். கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உயிரிழப்பவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்கும் நிறைய பிணங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். இரண்டு மணி நேரத்தில் 40 பேரின் உடல்களை அடுத்தடுத்தும், மொத்தமாகவும் எரியூட்டக்கூடிய அவசர நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில், சீனாவுடனான விமானப் போக்குவரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று இந்திய மருத்துவ வட்டாரத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்து பரிசீலிக்காத அரசு, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்தில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படுவதை கட்டாயமாக்க வேண்டுமென்று மட்டும் மாநில அரசுகளை வற்புறுத்தியுள்ளது. இதில் அசட்டையாக இருந்தால், கரோனா பரவலின் தொடக்க காலத்தைப்போல் இப்போதும் விமானப்பயணிகள் வழியாக கரோனா பரவல் அதிகரிக்குமே என்று மருத்துவர்கள் கவலைப்படுகிறார்கள். நமக்கு கரோனா பாதிப்பு வந்தால் நம்மைக் காக்கும் கடவுள்களாக மருத்துவர்களே இருக்கிறார்கள். எனவே அந்த கடவுள்களின் கோரிக்கையை நாம் ஏற்றாக வேண்டும். இல்லையேல் மீண்டும் மிக நீண்ட லாக்டௌன் கொடுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.