நாம் பார்த்த, கேட்ட எல்லாவற்றையும் செய்தியாக்கிவிட முடியாது. ஆனாலும், ‘இதை எழுதியிருக்கலாமே!’ என்று ஏதாவது ஒரு விஷயம் உள்ளுக்குள் உறுத்தியபடியே இருக்கும். அப்படி சில நாட்களாக, நம் மனதில் ஊறிக்கொண்டிருந்த ஒரு உழைப்பாளிதான் நாகேஷ்!
போலீஸூக்கு அழகும் கம்பீரமுமே, அந்தக் காக்கி உடுப்புதான். அணிந்திருக்கும் உடுப்பு பிடிப்பா.. ஃபிட்டா இருந்தால்தான் ஒரு ‘லுக்’ கிடைக்கும். அந்தத் துணிதான் பலருக்கும் ஒரு மரியாதையை ஏற்படுத்தும். ஏதோ ஏனோதானோவென்று, யூனிபார்ம் போட்டிருந்தால், சிரிப்பு போலீஸாகவே அவர்களைப் பார்க்கத் தோன்றும்.
சென்னையில் போலீஸாருக்கான யூனிபார்ம் தைக்கும் டெய்லர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மிகச் சிலரே இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நாம் சந்தித்த நாகேஷ் டெய்லர். சென்னை மாநகர காவல் துறையின் குதிரைப்படை முகாமிற்கு (புதுப்பேட்டை) அருகில் இருக்கிறது இவரது கடை. சென்னையில் உள்ள போலீஸ் நண்பரை நாம் பார்க்கச் சென்றபோது, அவர் டெய்லர் கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அவருடன் நாமும் சென்றோம்.
முதலிலேயே நமது நண்பர் சொல்லிவிட்டார். "நினைத்த மாத்திரத்தில் துணியை எடுத்துச் சென்று, நாகேஷ் டெய்லர்கிட்ட போய் தைக்க முடியாது. மொதல்ல அவர்ட்ட போன்ல அப்பாய்ன்மென்ட் வாங்கணும். ‘சாயந்திரம் துணி கொண்டு வாங்க... ஆனா துணி தைச்சு அடுத்த மாசம் தான் தருவேன்’ என்பார். அந்த அளவுக்கு மனுசன் பிஸி. அதற்குக் காரணம் தொழில் நேர்த்தி" என்றவர், “அதே மாதிரி, தையல் கூலியும் சற்று கூடுதல்தான். இருந்தாலும் நாகேஷ் டெய்லர்ட்ட தைச்சாத்தான் நல்லாருக்கும் என்பது காவலர்கள் பலரின் கருத்து.” என்றார்.
இந்த அளவுக்கு மெச்சப்படும் நாகேஷ் டெய்லரிடம் ‘எத்தனை வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கீங்க? என்று கேட்டோம். தான் கடந்து வந்த வாழ்க்கையை, அருவி போல் வார்த்தைகளில் கொட்டினார்.
“அப்ப எனக்கு 12 வயசு. 1970-ல் அம்மா, அப்பா, 4 அண்ணன் தம்பிகளோடு, பஞ்சம் பிழைக்க ஊட்டியில் இருந்து ட்ரெயின் ஏறி சென்னை வந்தோம். சென்ட்ரல் வந்து இறங்கின உடனே எங்க போறதுன்னு தெரியல. வெளியே டாக்சிக்காரங்க எங்க வண்டியில வாங்கன்னு கூட்டிட்டு போனாங்க. சரி எங்காவது கொண்டு போய் விடுவாங்கன்னு ஏறிட்டோம் 7 பேரும். வண்டி அப்படியே சென்ட்ரல் ஜெயிலு, கூவம் நதி தாண்டி, புதுப்பேட்டை வழியா இந்த இடத்திற்கு வந்துச்சு. இங்கேயே இறங்கிக்கிறோம்னு சொல்லி இறங்கிட்டோம்.” என்று அவர் சுவாரஸ்யமாகக் கூற, கேட்பதற்கு நமக்கும் ஆர்வம் மேலோங்கியது.
“அப்பல்லாம் வெளியூர்ல இருந்து பண்ட பாத்திரங்களோடு யாராவது சென்னை வந்தாங்கன்னா.. உடனே வீடு குடுத்திருவாங்க. எங்களுக்கும் மாதம் ரூ 12 வாடகைக்கு வீடு கொடுத்தாங்க. அண்ணன் தம்பிங்க 5 பேரும் சின்னச் சின்ன வேலைகளுக்குப் போனோம்.
12 வயசுலயே, எனக்குத் தையல் தொழில் தெரிந்ததால் வீடுகளுக்குச் சென்று பழைய துணி தச்சுத் தருவேன். கூலி தரமாட்டாங்க. சாப்பாடு போடுவாங்க. அப்புறமாத்தான், புதுத் துணிகளும் தச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன். ரூ.1 அல்லது ஒன்னரை ரூபாய் கூலியா கொடுப்பாங்க. ஒரு பேண்டு சட்டைக்கு அப்பவே ரூ.15 வரை வாங்குற டெய்லர் இருந்தாங்க. இருந்தாலும் எனக்கு ஒரு ரூபாய் தான் குடுப்பாங்க. சோறு போட்ட ஊராச்சேன்னு, எதுவும் பேசாம வாங்கிக்கிருவேன்.
அப்படியே ஒரு மிஷினையும் வாங்கிக் கடை ஆரம்பிச்சேன். ஒரு மிஷின், 2 மிஷினாகி 55 மிஷின் வரை உயர்ந்து 70 லேபர வச்சு வேலை பார்க்கிற அளவுக்கு பெரிய ஆளாயிட்டேன். 1985 கால கட்டத்துல. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தும் அளவுக்கு பெரிய பேக்டரி மாதிரி நம்ம தையல் கடை ஓஹோன்னு இருந்துச்சு.” என்று நினைவுகளை அசை போட்டவர், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.
“சரவணா ஸ்டோர் சென்னையில் கால் பதிச்ச உடனே, எங்க தொழில் நலிவடைய ஆரம்பிச்சது. 50 ரூபாய்க்கு சட்டைன்னு அவங்க விற்க ஆரம்பிச்சதும் எல்லாரும் ரெடிமேடுக்கு மாறிட்டாங்க. என்னாலும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியலை. மிஷின்களோட எண்ணிக்கையும் படிப்படியாக குறைய ஆரம்பிச்சது.
1990-ல் போலீஸ்காரர் ஒருத்தர் எனக்கு யூனிபார்ம் தைச்சு கொடுங்கன்னார். நான் எனக்குத் தெரியாதுன்னு சொல்லி மறுத்தேன். அவரு விடாப்பிடியா நீங்களே தைச்சுக் கொடுங்க, நான் போட்டுக்கிறேன்னார். நானும் முதல் முறையா ஒரு யூனிபார்ம் தைச்சுக் கொடுத்தேன். அவருக்குப் பிடிச்சுப்போக, உடனே ஒரு போர்டைக் கொண்டு வந்து, என் கடை முன்னாடி வச்சிட்டுப் போனார். இங்கே யூனிபார்ம் தைக்கப்படும். ரெடிமேட் சட்டை விற்கப்படும்னு அதில் எழுதியிருந்தது. அந்த போர்டை இப்போதும் அலமாரியில் பத்திரமா வச்சிருக்கேன்.
அப்புறம், ரெடிமேட் சட்டைகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்கலை. ஆனா, போலீஸ் யூனிபார்ம் தைக்கிறதுக்கு ஆர்டர் அதிகமாக வந்துச்சு. இப்ப வரைக்கும் 6 தொழிலாளர்களை வச்சு வேலை பார்த்துகிட்டு இருக்கேன். அதுல ஒருத்தருக்கு கல்யாணம். அதான்.. எல்லோரும் போயிருக்காங்க. ஏற்கனவே தைச்ச துணிகளை வாங்க நம்ம போலீஸ் கஸ்டமர்ஸ் வருவாங்க. அதனால, நான் மட்டும் கடையைத் திறந்து வச்சிருக்கேன்.” என்றார்.
இடைஇடையே போன் அழைப்புக்கள் வர.. ‘சார்.. ஏற்கனவே வாங்கின துணிகளை இன்னும் தைக்கலை. அதனால, இப்ப துணி வாங்கலை சார்’ என்று விளக்கம் அளித்துவிட்டு நம்மிடம் பேசினார்.
“இப்ப வரைக்கும் ஆண்டவன் புண்ணியத்துல தொழில் நல்லா போகுது, கஷ்டப்பட்ட காலத்துல எனக்குச் சோறு போட்டது இந்த ஊர். நாகேந்திரன் என்ற என் பெயரை நாகேஷ்ன்னு மாத்தினதும் இந்த ஊருதான். சின்ன வயசுல நடிகர் நாகேஷ் மாதிரி கலகலன்னு பேசி வேலை பார்ப்பேன்கிறதால, இந்த ஊரு பெண்மணிகள் வைச்ச பேரு சார் அது. அதே பெயர் இப்பவும் நிலைச்சு நிற்குது.” என்று முகம் மலரச் சிரித்தார்.
நிஜங்களைத் தொலைத்துவிட்டு நிழல்களாகத் திரியும் மனிதர்கள் பலர் இருந்தாலும், நாகேஷ் போன்ற உழைப்பாளிகளையும், உயரத்தில் வைத்து அழகுபார்க்கவே செய்கிறது சென்னை!