காவிரியில் தமிழகத்திற்கு 264 டி.எம்.சி. நீர் கேட்ட நிலையில் 177.25 டி.எம்.சி. நீர் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியது:-
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 264 டி.எம்.சி. நீர் கேட்ட நிலையில், 2007ஆம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் கொண்டு வந்தார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
இந்த சூழ்நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். 14.75 டி.எம்.சி. நீர்
தமிழகத்திற்கு குறைக்கப்பட்டிருக்கிறது. இதனை குறைவு என்று பார்க்காதீர்கள். ஏற்கனவே அங்கு தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதுவும் இதில் சேர்ந்ததுதான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் தமிழகத்திற்கு நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், விவசாயிகளின் நலன் காக்கும் பொருட்டும் முழுமையான தண்ணீர் கிடைப்பதற்கு நீதி வேண்டும் என்று தமிழக அரசு நினைக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் மேல்முறையீடு செய்ய முடியாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாரியம் அமைந்த பிறது இரு மாநிலங்களும் அதில் முறையிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் பொருட்டு கூடுதலாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக, நியாகத்திற்காக தமிழக அரசு போராடும். இவ்வாறு கூறினார்.