பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினத்தில் பெரியார் தற்போது சமூக நீதியில் எவ்வாறாகக் கலந்துள்ளார், அவர் பிறந்த தினத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்பது குறித்து வழக்கறிஞர் பாலு அவர்கள் கூறியதாவது, " சிலருக்கு எப்படி புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் புனித மாதமாகக் கொண்டாடுவார்களோ, அப்படி இந்த செப்டம்பர் மாதம் மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பெரியார் பிறந்த தினத்தைச் சமூகநீதி நாளாகக் கொண்டாடி வருகிறோம். இத்தகைய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ள இந்த அரசுக்கு வரவேற்பையும், பாராட்டையும் தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெரியார் என்று சொன்னாலே வேப்பங்காயை தின்றது போல் மாறுகின்ற முகங்களைப் பார்க்கின்ற போது, என்னுடைய வயதிற்குக் கூட நான் பெரியாரை அதிகம் அறிந்துகொள்ளவில்லை என்று அவமானப்படுகின்ற அளவிற்கு, கூனிக்குறுகிப் போய் இருந்த நிலையில், பெரியார் பற்றிப் பேச வைத்த, அவரை ஈவேரா என்று பெயர் சொல்லி அழைத்தவர்கள் வரை அனைவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டிய தருணமாக இதைப் பார்க்கிறேன்.
காரணம் அவர்கள் பெரியாரைப் பற்றிப் பேசாவிட்டால், நாம் அவரை பற்றிப் பேசுவதும், தேடுவது, படிப்பது, கூறுகளை ஆராய்வது குறைந்து போய் இருக்கும். அந்த வகையில் அவர்கள் நம்மை அடுத்த கட்டத்திற்குப் பெரியார் நோக்கி அழைத்துச் செல்கிறார்கள். எனவே இந்த நாளுக்காக நான் எல்லோருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இன்றைக்கு இரண்டு அறிவிப்புக்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒன்று அரசுப் பணிகளில் நாற்பது சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. இன்று அமெரிக்காவில் ஒரு பெண் அதிபராக வருவதற்கு பல்வேறு தடைகள் இருந்து வருகிறது. இந்த கால கட்டத்தில் கூட துணை அதிபராகத்தான் ஒரு பெண் வர முடிகிறது. அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக உயர்ந்திருக்கின்ற பல நாடுகள் கூட, பெண்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்ல அனுமதிக்காத நிலையில், அதில் இன்றைக்கு வெற்றிபெற்றுள்ளோம் என்றால் அதற்கு முழு காரணம் தந்தை பெரியார்தான்.
பெரியார் கடவுள் மறுப்பு கொள்கை பேசிக்கொண்டிருந்தார் என்பதைக் காரணமாகக் காட்டி, ஒரு நிகழ்ச்சியில் வந்து கொண்டிருக்கின்ற வைதீக பெரியவர், பெரியாரா யார் அவர்? எனக்குத் தெரியாது என்கிறார். இந்த ஆணவமும், நக்கலும் இருக்கின்ற வரையில் பெரியார் கொள்கை பேசுகின்ற பெரியாரின் பேரன்கள் அதனை எதிர்க்க வருவார்கள் என்பது மட்டும் உறுதி. பல பேர் ஈவேரா, ஈவேரா, ஈவேரா என்று கூறினால் அவரை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்த வார்த்தைகள் எல்லாம் அவரை சரியாக நினைவில் வைத்துக்கொள்ளாதவர்களுக்கு உள்ளத்தில் விதைக்கின்ற விதையாகத்தான் நான் பார்க்கிறேன். அப்படி விதைக்கப்பட்ட விதைகளில் மரமாக வளர்ந்தவர்கள் தான் அவரை பற்றிப் பேசுவார்கள். எனவே அவரை, பெயர் சொல்லி அழைப்பதனால் அவர் அவமானப்படுத்தப்படுவார் என்று நினைப்பதெல்லாம் அவர்களின் அறியாமையை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.