Skip to main content

ஏ.சி.சண்முகத்தின் கனவை நனவாக்குவாரா எடப்பாடி?

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

 

புதிய நீதிக் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை தி.நகரில் அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 

இந்தக் கூட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கூட்டணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடருவது, புதிய நீதிக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

a c shanmugam



முன்னதாக கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் புதிய நீதிக் கட்சி சார்பாக போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் புதிய நீதி கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது. வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் வெற்றி பெறவில்லை. 


 

நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, மேயர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது மாதிரி தெரியவில்லை. இருப்பினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சின்னத்தில் நீங்கள் போட்டியிட்டீர்கள். அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறோம் என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்துங்கள். வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நமது கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளது, அது அதிமுகவுக்கு பலம்தான் என்பதை எடுத்துக் கூறுங்கள். அப்போதுதான் நமது கோரிக்கையை அவர் பரிசீலிப்பார். நமது கோரிக்கையை அதிமுக ஏற்றவுடன் வேலூர் அல்லது ஆவடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக நீங்கள் களமிறங்க வேண்டும் என்று ஏ.சி.சண்முகத்தை கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். 


 

இதையடுத்துதான் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடருவது, புதிய நீதிக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.