காலத்தால் செய்த உதவி..!
- மாணவியின் கண்ணீர்ப் பதிவு
நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். அவர்கள் எல்லோரிடத்தும் நாம் அறிமுகம் ஆகிக் கொள்வதில்லை. ஏதோ ஒரு சூழலில், யாரோ ஒருவரின் உதவிக்காக காத்திருக்கும் நமக்கு, யாரென்றே தெரியாத ஒருவர் நம் சூழலை உணர்ந்து உதவினால் எப்படி இருக்கும்? அப்படியொன்றுதான் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த எல்லா ஜோனெஸ்ஸன் எனும் கல்லூரி மாணவி, தனது பொருளாதார நிலை குறித்து அழுது புலம்பியதைக் கண்ட யாரோ ஒருவர், அந்த மாணவிக்குத் தெரியாமல் அவருக்கான உதவியைச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் எல்லா, ‘கடந்த ஜனவரி 27ஆம் தேதி லண்டன் கிங்க்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து லீட்ஸ் நோக்கி செல்லும் ரயிலில் ஏறினேன். பீட்டர்பரவுக் அடைந்தபோது எனக்கு அமர இருக்கை கிடைத்தது. அமர்ந்தபடி என் அம்மாவிற்கு தொடர்புகொண்டு, என் பொருளாதார நிலை குறித்து துவண்டு போயிருப்பதையும், வங்கிப் பரிவர்த்தனை மூலமாக அனுப்பிவிடுவதாக சொல்லியிருந்த 35 யூரோ பணம் என்னவானது என்றும் நான் புலம்பி அழுதேன். கண்களில் நீர் வழிய தொடர்ந்த அந்த உரையாடலைத் தொடர்ந்து நான் கண்ணசந்து விட்டேன்.
அரை மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தில் இருந்து நான் கண்விழித்தபோது, என் மடியில் ஒரு துணிக்கடியில் நூறு யூரோ மதிப்பிலான பணம் இருந்தது. அதைப் பார்த்த பின் யாரோ ஒருவரின் அந்த மிகப்பெரிய உதவியை எண்ணி கண்ணீர் விட்டு அழுதேன். என் தந்தையைப் பிரிந்து இருக்கும் இந்த 18 மாதங்களில், அவரது பெற்றோர் இந்த உலகில் இரக்க குணம் கொண்ட, நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எனக்கு இந்த உதவியைச் செய்த நபருக்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். அவர் யாரென்று தெரியாத நிலையில், அவரது பார்வைக்கு இந்தப் பதிவு செல்லும் என்று நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
தனது பொருளாதார சூழலை எண்ணி வருந்திக் கொண்டிருந்த அந்த மாணவிக்கு, சரியான நேரத்தில் யாரோ ஒருவர் ‘காலத்தால் செய்த உதவி’ மனதார பாராட்டப்பட வேண்டியது. எந்த நன்றியையும் தமதாக்கிக் கொள்ளாத அவரது இதயத்தை இந்த உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
- ச.ப.மதிவாணன்