Skip to main content

முடிவுக்கு வந்த பங்களாதேஷ் மாணவர் போராட்டம்! - வன்முறைக்குத் திருப்பியது யார்?

Published on 09/08/2018 | Edited on 09/08/2018

பங்களாதேஷில் மேம்பட்ட சாலைப் பாதுகாப்புச் சட்டம் கேட்டு, 
பத்து தினங்களாக நடைபெற்று வந்த மாணவர் போராட்டம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
 

Bangladesh

 

 

 

ஜூலை 29-ஆம் தேதி டாக்காவின் பிரதான விமான நிலைய சாலையில் நடந்த ஒரு சாலை விபத்துதான், நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த ஒரு போராட்டத்தின் தொடக்கம். பயணிகளை ஏற்றுவதற்காக ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரு பேருந்துகளுக்கு இடையிலான போட்டியில் மாணவன் ஒருவனும் மாணவி ஒருத்தியும் பலியாக, பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தில் இருந்துதான் போராட்ட நெருப்புக்கான பொறி பிறந்தது.
 

 

 

சாலைவிபத்தில் இரண்டு பேர் இறப்பது என்பதென்ன அத்தனை பெரிய சம்பவமா? அப்படி வேறெங்குமே நடப்பதில்லையா என கேட்கலாம். உலக வங்கி அமைப்பு பங்களாதேஷில் ஆண்டுக்கு 4,000 பேர் சாலைவிபத்தில் இறப்பதாகக் கூறுகிறது. 2017-ஆம் ஆண்டில் மட்டும் சாலைவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,397 பேர். உலகத்திலேயே சாலைவிபத்துக்கு பேர்போன மோசமான நாடுகளில் ஒன்றாக பங்களாதேஷ் கருதப்படுகிறது.
 

ஆக, இதற்குமுன்பும் சாலைவிபத்தில் மாணவர்களும், பொதுமக்களும் இறந்துபோயிருப்பதுதான் மாணவர்களைச் சீண்டியது. சாலைவிபத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும் எனக்கேட்டும், போக்குவரத்து, சாலைவிபத்து தொடர்பான சட்டங்களில் திருத்தம் வேண்டுமெனவும் கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்டுபவர்கள் முறையான உரிமம் வைத்திருக்கிறார்களா என சோதனையிடும் அளவுக்குச் சென்றனர் மாணவர்கள்.
 

Bangladesh

 

வெகுவேகமாக நாடு முழுவதும் பரவிய இந்தப் போராட்டம் விரைவிலேயே வன்முறையை நோக்கித் திரும்பியது. கடைசி மூன்று நாட்களில் முகத்தில் ஹெல்மெட் அணிந்திருந்த போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், போராட்டத்தில் பங்கேற்றோரை தாக்கத் தொடங்கினர். இந்நிலையில் காவல்துறையும் கண்ணீர்ப் புகைக்குண்டு, லத்தி சார்ஜில் இறங்கியது.
 

 

 

இதுவரை நடந்த மோதல்களில் மாணவர்களும் பொதுமக்களும் பத்திரிகையாளர்களுமாக 150 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலை ஐ.நா.வும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கின்றனர். ஆளுங்கட்சியின் கட்சி அலுவலகத்தில் நான்கு மாணவிகளை பிணையக் கைதிகளாக காவல்துறை பிடித்துவைத்திருப்பதாக, பங்களாதேஷ் நடிகை நவ்ஷபா அகமத் வதந்தி பரப்பியதாக, போலீஸ் கைதுசெய்துள்ளது. போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கவந்த பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களை மூன்று தினங்களுக்குள் கைதுசெய்யவேண்டுமென அரசுக்கு கெடுவிதித்துள்ளன ஊடக அமைப்புகள். 
 

போராட்டம் முடிவுக்குவருவதை விரும்பாத இடதுசாரி சார்புள்ள மாணவர் இயக்கங்கள், மாணவர்கள்மீதான தாக்குதலைக் கண்டித்து போராட வரும்படி அழைப்புவிடுத்துள்ளதாக அரசு ஆதரவாளர்கள் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர். தலைநகரில் வாரக்கணக்கில் நடக்கும் போராட்டத்தால் ஆளுங்கட்சியின் இமேஜுக்கு பாதிப்பு என இணையத் தொடர்பை துண்டித்துவிட்டு, மாணவர்களின் மீது தாக்குதலில் இறங்கியது ஆளுங்கட்சிதான் என எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது. 

 

Bangladesh


 

 

போக்குவரத்து விதிகளை தெரிந்தே மீறி விபத்துக்கு காரணமாகும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும்படி சட்டத்திருத்தம் செய்யப்படும் என உறுதியளித்து பங்களாதேஷ் பிரதமர் ஹஸீனா போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
 

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எந்த நாட்டவரானாலும் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்றுதான். அமைதியாகப் போய்க்கொண்டிருக்கும் போராட்டத்தை, வன்முறையாக மாற்றும் வித்தை அரசியல் கட்சிகளுக்கு கைவந்த கலை என்பதை நினைவில் வைத்துக்கொண்டே போராட்டத்தை நடத்துவதுதான் அது.

 

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'தொப்பூர் கணவாய்' - கொலைகார சாலைக்கு என்னதான் தீர்வு?

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
 'Toppur Pass' - What is the solution to the killer road?

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு முன்பே இதேபோல தொப்பூர் பகுதியில் கணவாயில் எண்ணிலடங்கா மிகப் பெரும் விபத்துக்கள் நிகழ்ந்திருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் இன்று (28/02/2024) காலை அங்கு ஏற்பட்ட  விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது லாரி மோதியதில் கார்கள் உட்பட ஐந்து வாகனங்கள் தொடர்ச்சியாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சேலத்தில் இருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் இந்த விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

n

சில நாட்களுக்கு முன்பு தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதனை மிகவும் கண்டித்து 'நடந்தது விபத்து அல்ல மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த கொலை' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருத்தார். அதில், 'சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தொப்பூர் சாலையின் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதவில்லை. அந்த வகையில் பார்த்தால் தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல... மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொடூர படுகொலை என்று தான் கூற வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் நடக்காமல் தடுக்க ரூ.775 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்க கடந்த மாதம் மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தொப்பூர் பகுதியில் விபத்து நடக்காது என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில் தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. தொப்பூர் கொலைகாரச் சாலையில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

மத்திய அரசால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள தொப்பூர் உயர்மட்டச் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது மட்டும் தான் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை உணர்ந்து தொப்பூர் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை உடனடியாக இறுதி செய்து பணிகளைத் தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

அதேநேரம் அங்கு நிகழும் விபத்துகளுக்கு பிற்போக்குத்தனமாக அமானுஷ்யங்களே காரணம் என உள்ளூர் வாசிகள் சிலரால் நம்பப்படுகிறது. ஆம்புலன்ஸ் சத்தங்கள் அந்தப்பகுதி மக்களுக்கு சாதாரணம் என்ற அளவிற்கு விபத்துகள் சாதாரணமாகிவிட்ட நிலையில், தொப்பூர் கணவாய் விபத்துகளுக்கு தீர்வு வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது.