Skip to main content

"ஓபிஎஸ் யூகிக்க முடியாத மர்மமான மனிதர்... அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரே.." - ஓபிஎஸ் பற்றி அஸ்பியர் சுவாமிநாதன்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

dfhg


அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு அதன் முதல் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகாலம் அதில் முதன்மையாகப் பணியாற்றிவந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், தற்போது அதிமுகவில் நடைபெற்றுவரும் பிரச்சனைகளை பற்றி என்ன நினைக்கிறார் என்று அறிந்துகொள்ளும் பொருட்டு அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

சமீபத்தில் சசிகலா விவகாரம் தொடர்பாக பேசிய ஓ. பன்னீர்செல்வம், "சசிகலாவை இணைப்பது என்பது கட்சி நிர்வாகிகள் இணைந்து எடுக்க வேண்டிய முடிவு, தலைமை அது தொடர்பாக முடிவெடுக்கும்" என்றார். பன்னீர்செல்வத்தின் இந்தப் பேச்சுக்கு கட்சியிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் சற்று கடுமையாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள், பன்னீர்செல்வத்தின் மனதில் என்ன இருக்கிறது? 

 

ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு என்ன என்பது அவர் ஒருவருக்கு மட்டும்தான் தெரியும். அவரைக் கணிக்க யாராலும் முடியாது. அவருடன் நெருங்கி பயணித்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன், அவர் என்ன நினைக்கிறார் என்பது அவர் சொல்லும்வரை யாருக்கும் தெரியாது, புரியாது என்பதே என்னுடைய கணிப்பு. அவர் ஒரு யூகிக்க முடியாத, மர்மமான மனிதராகத்தான் இருந்துவருகிறார். சசிகலா பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டபோது கூட அவர் இதே பதிலைத்தான் கூறினார். நான் கூட, “அண்ணே தலைமை என்றால் நீங்கள்தானே” என்று கேட்டேன். அவர், “இல்லை தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் தன்னுடைய முடிவில் மாறுபட்டு பேசுவதில்லை, தொடர்ந்து ஒரே நிலையில் அவர் இருந்துவருகிறார். ஆனால் நமக்கு அவர் எந்த தெளிவான பதிலும் கூறமாட்டார். நாம் இதுவா இருக்குமோ, இல்லை அதுவா இருக்குமோ என்று குழம்பிப்போய் இருக்க வேண்டியதுதான்.

 

அதிமுக, ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்தது, இரட்டை தலைமையில் தற்போது எப்படி செயல்படுகிறது? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

 

ஜெயலலிதா இருந்தபோது மிகவும் கட்டுப்பாட்டோடு, கட்சியினர் பொறுப்புடன் செயல்பட்டுவந்தனர். ஆனால் தற்போது கட்சி அப்படி செயல்படவில்லை. ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன். ஜெயலலிதா இருந்தபோது கட்சித் தலைமை ஒரு கூட்டத்தை அறிவித்தால் சில தினங்களில் மாவட்டச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட நபரை தொலைப்பேசியில் அழைத்து, எப்போது வருகிறீர்கள், எதில் வருகிறீர்கள் என அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். ஆனால் தற்போது, இவர்கள் கூட்டத்தை அறிவிக்கிறார்கள். இவர்கள் கூறிய இடத்தில் போராட்டம் நடந்ததா இல்லையா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. எனக்கே அந்த மாதிரியான இக்கட்டான நிகழ்வு நடைபெற்றுள்ளது. மாயவரத்தில் கூட்டம் என்று சென்றுவிட்டேன், ஆனால் என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை. நானே கூட்டம் நடைபெறும் இடத்திற்கும் சென்றேன், யாரும் இல்லை. வந்தது வந்துவிட்டோம் என்று வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தேன். தற்போது போராட்டத்தை அறிவித்துவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். அதைப்பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. கட்சியினரும் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. 

 

தற்போது புகழேந்தி என்ற ஒருவரைக் கட்சியைவிட்டு நீக்கியுள்ளீர்கள். அவரை என்ன காரணத்திற்காக நீக்கியுள்ளனர் என்று யாருக்காவது தெரியுமா? பாமகவை பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டார் என்ற காரணத்திற்காக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதிமுகவில் தற்போது யாரும் தலைமைக்கு எதிராகப் பேசவில்லையா? அன்வர் ராஜாவில் ஆரம்பித்து ஆளுக்கொரு கருத்தை தெரிவித்துவருகிறார்கள். அவர்களை எல்லாம் நீக்க வேண்டியதுதானே, ஏன் நீக்கப் பயப்படுகிறீர்கள். பன்னீர்செல்வத்தை பலரும் விமர்சனம் செய்கின்றனர், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்பவர்கள் அடுத்த நொடியே நீக்கப்படுகிறார்கள் என்றால் கட்சியில் எந்த மாதிரியான, யாருக்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது புரியவரும். புகழேந்திக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பது எந்த வகையிலும் சரியாக இருக்காது. எனவே காலம் இவர்கள் அனைவருக்கு தகுந்த பாடத்தை எடுக்கும்" என்றார்.