மனசாட்சியுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரம், தமிழகத் தேர்தல் களத்தில் பிரச்சார ஆயுதமாக இருந்தது. வாக்குப்பதிவு முடிந்து, அரசியல் கட்சிகள் ஓய்வெடுத்து வரும் நிலையில், இந்தக் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் வழக்கம்போல தனது புலனாய்வுப் பணியைத் தொடர்ந்தது.. வி.ஐ.பி. வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கோவை ஸ்டெயின்ஸ் பள்ளியில்தான் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனான பிரவீன் படித்தார். அவருடன் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மகன் விவேக்கும் படித்தார். இவர்களின் பணக்கார நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவர், திலக்முருகன்.
இந்த டீமுடன் அதே பள்ளியில் படித்த இரண்டு மாணவிகளும் இணைந்தனர். பள்ளிப் படிப்பு முடித்தவுடன் பி.எஸ்.ஜி. கல்லூரியில் இந்த டீம் அப்படியே சேர்ந்தது. கூடுதலாக ஒரு மாணவி சேர்ந்தார். கல்லூரியில் மன்மத ராஜாவாக பிரவீன் டீம் வலம் வந்தது என்கிறார் தற்பொழுது ஒரு பிரபலமான மீடியாவில் பணியாற்றும் மாலதி.பேஸ்புக், மெசெஞ்சர் போன்ற இணையதளங்கள் மூலமாக புதுப்புது நட்புகளை உருவாக்கிய இந்த டீமின் வலையில் சிக்கினார் இன்னொரு பெண்ணான சுரேகா. காரில் ஆனைமலை பண்ணை வீட்டுக்குப் போகும்வழியிலேயே ஆரம்பிக்கும் ஆட்டம், பண்ணை வீட்டில் யாருக்கு யார் ஜோடி என்ற பேதமில்லாமல் தொடரும். இந்த வகை பாலியல் தொடர்புகள் பற்றி அறிய தாய்லாந்து நாட்டிற்கு பறந்து செல்வது பிரவீனின் பழக்கம். இத்தகைய பாலியல் உறவுகளை விரும்பாத சுரேகா, ஒரு முறை காரிலிருந்து தப்ப முயன்றபோதுதான் பலியானார். பொள்ளாச்சி ஜெயராமனும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரையிலான தொடர்பினால் அது விபத்து வழக்காகப் பதிவானது.
இந்த வில்லங்கத்திற்குப் பிறகும் பிரவீன் டீமின் ஆட்டம் தொடர, கல்லூரி நிர்வாகம் விதித்த தடையால், பெங்களூருவில் உள்ள சட்ட கல்லூரிக்கு பிரவீனை மாற்றினார் பொள்ளாச்சி ஜெயராமன். பிரவீன் இல்லாவிட்டாலும் அவரது பெயரை வைத்து, பண்ணை வீட்டில் பாலியல் திருவிழாவை பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு லோக்கல் டீம் கொண்டாடி வந்தது. பெண்களை வலையில் சிக்க வைத்து, இங்கே கொண்டு வந்து விடுவார்கள். இந்த விவரம் பிரவீனுக்குத் தெரியவர, பொள்ளாச்சி கும்பலை சந்திக்க முயற்சிக்கிறார். ஆனைமலையில் காவல்துறை அதிகாரியாக இருந்த ராஜேந்திர பிரசாத் உதவ முன்வருகிறார்.
ஆனைமலை பண்ணை வீடுகளில் நடக்கும் காமக் கொடூரங்களுக்கு துணை போனதினால் மாமூல் வாழ்க்கை அதிகமாகி புத்தம் புதிய சொகுசு கார்களை வாங்கி வலம் வரும் ராஜேந்திர பிரசாத், பிரவீனின் நண்பரும் அவர் பாணியிலேயே பாலியல் விளையாட்டுகளில் ஆர்வம் உடையவ ரான அ.தி.மு.க. கவுன்சிலர் ஜிம் வசந்த் மற்றும் அமைச்சர் வேலுமணியின் வலதுகரமான பார் நாகராஜ் ஆகியோருக்கும் சிறந்த நண்பரானார். இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி நகரில் இயங்கும் அழகு நிலையங்களில் சந்தித்துக் கொள்வார்கள். பிரவீனுக்கு ஜிம் வசந்த்தும் ராஜேந்திர பிரசாத்தும் தற்போது குண்டர் சட்டத்தில் கோவை சிறையிலிருக்கும் திருநாவுக்கரசையும் சபரி (எ) ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரையும் அறிமுகப்படுத்துகிறார்கள். அதன்பின்னர், பொள்ளாச்சி இளம்பெண்கள் மீதான இவர்களின் பார்வை தீவிரமாகி, பண்ணை வீட்டில் பலிகடாவாக்கியது.
அதில் ஒரு பெண்ணான அனிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தோம். இவர்தான் அந்தப் பதற வைக்கும் வீடியோவில், "அண்ணா என்னை அடிக்காதீங்கண்ணா டிரெஸ்ஸை கழட்டிடுறேன்'' என ரிஷ்வந்த்தின் பெல்ட் அடி தாங்காமல் கதறியபடியே துடித்தவர். "எனக்கு அப்பா கிடையாது. கல்லூரிக்கு செல் லும் தம்பி இருக்கிறார். வயதான தாயார். இந்த மூன்று உயிருக்கு வயிறார சோறு வாழ்வதற்கான வீடு இவற்றிற்காக 15 வயதில் இருந்தே பல்வேறு அழகு நிலையங்களில் பணியாற்றி வருகிறேன். எனக்கு இப்போது 21 வயதாகிறது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், அவரது நண்பர்கள் போன்ற பல ஊர் வி.ஐ.பி.க்கள் எனது கஸ்டமர்கள். தனிப்பட்ட முறையிலும் வீட்டு விசேஷங்களுக்கு மேக்கப் பணிகளுக்கு செல்வேன்.
அப்படித்தான் கடந்த வருடம் ஒருநாள் ஒரு பெண்மணி தனது பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என கூப்பிட்டார். காலை நேரம் பதினொன்றரை என்பதால் நான் அவர் சொன்ன முகவரிக்கு போனேன். அது திருநாவுக்கரசு காமக் களியாட்டங்களுக்கு பயன்படுத்திய பண்ணை வீடு என்பது அப்போது தெரியாது. அந்த வீட்டில் விழா நடப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. பக்கத்து வீட்டில்தான் விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. நாம் தவறாக வந்துவிட்டோம் என விழா நடக்கும் வீட்டிற்குப் போக முயன்றேன். என்னை குண்டுகட்டாக ரிஷ்வந்த்தும் சதீஷும் தூக்கிச் சென்றார்கள். நான் அவர்களுடன் போராடினேன். எனது தலையை சுவரில் வைத்து மோதினார்கள். நான் ஆஸ்துமா மற்றும் வலிப்பு நோய் பாதிப்புள்ளவள். டிரஸ்ஸை கழட்டச் சொல்லி, ரிஷ்வந்த்தும் சதீஷும் அடித்தார்கள். மேலாடையை கழட்டியதும், லெக்கின்ஸையும் கழட்டச் சொல்லி அடிச்சாங்க. நான் துடிச்சபடியே போராடினேன். அதை வீடியோ எடுத்தார்கள். அதன்பிறகு எனக்கு வலிப்பு வந்தது. மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டேன். அவர்களது கவனம் திசை மாறியது.
அந்த சந்தர்ப்பத்தில் பக்கத்தில் இருந்த வீட்டிற்கு போய் விழுந்தேன். என் அலங்கோலத்தைப் பார்த்த அவர்கள் என்னை காரில் படுக்க வைத்த நிலையில் திருநாவுக்கரசு டீமின் கண்ணில் படாமல் காப்பாற்றினார்கள். இந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் எனது வீடியோ வெளியானது. அதில் இருப்பது நான்தான் என எனக்கு நெருக்கமானவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். பெற்றோர் மற்றும் ஐந்து வருடமாக என்னை காதலித்து வரும் முஸ்லிம் இளைஞரிடம் மட்டும் சொன்னேன். வேலைக்குப் போறதையும் நிறுத்திட்டேன்'' என கூறினார்.
அந்தப் பெண்ணின் தாயாரோ, "இவள் இந்த சம்பவத்தைப் பற்றி எங்ககிட்ட சொல்லலை. இவளது மண்டையை சுவரில் வைத்து மோதியதால் தீராத தலைவலியால் இவள் கஷ்டப்பட்டாள். நாங்களும் உடம்பு சரியில்லை என நினைத்துவிட்டோம்'' என்றார். இந்தப் பெண்ணை பண்ணை வீட்டுக்குத் தூக்க வேண்டும் என முடிவு செய்ததே அந்த அழகு நிலையத்துக்கு அடிக்கடி வரும் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன்தானாம். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி திருநாவுக்கரசு ஒரு வருடம் அனிதாவிற்கு தொல்லை கொடுக்க, இஷ்டத்துக்குப் பலியாக்கியுள்ளது அந்த டீம் என்பதும் விவரம் அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது. இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனிதாவை விசாரிக்கவில்லை. அனிதாவும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை.
ஆளுந்தரப்பில் செல்வாக்கு மிக்க மனிதரின் மகன் உள்ளிட்ட வி.ஐ.பி. குடும்பத்தினர் சம்பந்தப் பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் இப்போதும் பயத்தில் இருக்கிறார்கள். இதைத்தான் பிடிபட்ட குற்றவாளியான திருநாவுக்கரசு, பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும்கட்சி வி.ஐ.பி.க்கள் இருக்கிறார்கள் என்றான்'' என்கிறார்கள் அவனது நண்பர்கள்.பதற வைக்கும் கொடூர நிகழ்வுகளின் முழுப் பின்னணியும் காவல்துறைக்குத் தெரியும். காவல்துறையோ ஆள்பவர்களின் முழுக்கட்டுப் பாட்டில் இருக்கிறது.