ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்த பாஜக அரசு அங்கு மக்களை கடுமையான நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. கடந்த 2019 ஆகஸ்ட் 6 ஆம் தேதியிலிருந்து கடந்த நான்கு மாதங்களாக வெளியுலக தொடர்பு இல்லாமல், அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலை நீடிக்கிறது. சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய பாஜக அரசு, காஷ்மீரில் இனி எல்லோரும் நிலம் வாங்கலாம், காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம் என்றெல்லாம் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும் போலீஸாரையும் தெருக்களில் நிறுத்த வேண்டிய நிலையில் பாஜக அரசு மீது உலக நாடுகள் கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றன.
சமீபத்தில் ஐரோப்பிய யூனியனிலும் காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்கும்போது அந்த மாநில மக்களின் விருப்பத்தை கணக்கில் கொள்ள வேண்டும். அவர்களுடயை எதிர்காலத்தை முடிவு செய்வதில் அவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கருத்துக் கூறியிருந்தது. ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்திருந்தன. அதுமட்டுமின்றி, ஜம்மு பகுதி மக்கள் குழுக்கள், தங்களுடைய நிலம் மற்றும் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் குறித்து வெளிப்படையாகவே அச்சம் தெரிவித்திருந்தன. தொடக்கத்தில் லடாக் பகுதி மக்கள் மத்திய அரசின் முடிவை வரவேற்றனர். ஆனால், இப்போது, தங்களுடைய கலாச்சாரத்துக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் அரசியல் சட்டத்தின் 371 ஆவது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்த்தை பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஸ்டிரா, குஜராத், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், கோவா, ஆந்திர பிரதேஷ், சிக்கிம், அருணாச்சல பிரதேஷ், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த பிரிவின் கீழ், தங்களுடைய பொருளாதாரம் மற்றும் தனித்துவமான கலாச்சார அடையாளங்களை பாதுகாக்க இந்த பிரிவு உதவியாக இருக்கிறது.இந்த பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரையும் லடாக்கையும் கொண்டுவர பேச்சு நடப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த யோசனைகள் உத்தேச அளவில்தான் இருக்கின்றன. ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரிதேசங்களின் கருத்தை அறிய காத்திருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். 370 நீக்கிவிட்டு, 371ஐ கொடுக்கலாமா என்ற யோசனைக்கு மத்திய அரசு இறங்கி வந்திருப்பதே தோல்விதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதே காஷ்மீரில் நிலம் வாங்கவும் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்வும் மட்டுமே என்பதுபோல பேசிய பாஜக தலைவர்கள் இனி என்ன சொல்வார்களோ என்று அவர்கள் கேட்கிறார்கள்.