Skip to main content

உங்களுக்கு எதிராக நடக்கிறதே தவிர என்னை எதிர்த்து அல்ல... அமித்ஷா மீது கோபமான கெஜ்ரிவால்... உளவுத்துறை ரிப்போர்ட்!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் வன்முறையும் சர்வதேச அளவில் அதிர்ச்சிகளை எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிலிருந்து சென்ற பிறகே, கலவரம் குறித்து தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துவிட்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் அவசர ஆலோசனையை நடத்தினார் பிரதமர் மோடி. "வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரவும், வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறியவும் நேரடி களத்தில் நீங்கள் இறங்குங்கள்'' என மோடி உத்தரவிட்டதையடுத்து, கலவர பூமியாக மாறிப்போன டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளை பார்வையிட்டார் தோவல். பா.ஜ.க.வினரின் வெறுப்பு பிரச்சாரமே கலவரத்துக்கு காரணம் என தோவலிடம் ஆவேசப்பட்டார்கள் மக்கள்.
 

bjp



இதனையடுத்து, டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட காவல்துறை உயரதிகாரிகளுடன் 2 மணிநேரம் விவாதித்தார் தோவல். அந்த ஆலோசனையில், சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் டெல்லி அரசு தோல்வியடைந்திருக்கிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் கெஜ்ரிவால் சீரியஸ் காட்டவேண்டும் என அஜீத் தோவல் அறிவுறுத்திய போது, பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் கெஜ்ரிவால்.

குறிப்பாக, "ஷாஹின்பாக்கில் நடக்கும் அமைதிவழிப் போராட்டம் டெல்லியின் வட கிழக்கிலும் பரவுவதை உங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் ஜீரணிக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே அரசியல் ரீதியாகவே சி.ஏ.ஏ.வை அணுகுகிறார் அமித்ஷா. அவரது கட்டுப்பாட்டிலுள்ள உள்துறைக்கும் உளவுத்துறைக்கும் சில உத்தரவுகள் போயிருக்கிறது. உடனே, டெல்லிக்கு வெளியே இருந்து சமூக விரோதிகள் பலர் உளவுத்துறையால் வரவழைக்கப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு மத்தியில் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

bjp



பா.ஜ.க. பிரமுகர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ்சர்மா மூவரும் உள்துறையால் தூண்டப்பட்டார்கள். அவர்களுடைய வெறுப்புப் பிரச்சாரம் போராட்டக்காரர்களோடு கலந்திருந்த சமூக விரோதிகளை கொந்தளிக்க வைத்தது. இதை எதிர்பார்த்திருந்த பா.ஜ.க. பிரமுகர்களின் கும்பல்கள் கற்களை வீச, சமூக விரோதிகளும் எதிர்தாக்குதல் நடத்த கலவரம் வெடித்தது. காவல்துறையின் கைகளையும் உள்துறை கட்டிப்போட்டிருந்ததால் தடுக்க வேண்டிய அவர்கள் வேடிக்கை பார்த்ததோடு, உணர்வுபூர்வமாக போராடிய மக்களை தேடித்தேடிப் பிடித்து தாக்கினர். அவர்களுக்கு இணையாக சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவான இளைஞர்களும் களமிறங்க, கட்டுக்கடங்காமல் போனது கலவரம். கட்டிடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

வீடியோ பதிவுகளைப் பாருங்கள். போராட்டக்காரர்களுடனும் அவர்களை எதிர்க்கும் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுடனும் கலந்து விட்ட சமூக விரோதிகள்தான்ங்கிறது புரியும். இந்த பிரச்சனையின் சூத்திரதாரி அமித்ஷாதான்.

மக்கள் விரும்பாத ஒரு சட்டத்தை அவர்கள் மீது திணிக்கிற போது அதனை அவர்கள் எதிர்க்கிற சூழலில் அவர்களது அச்சத்தை தீர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. அந்த வகையில், போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களது பயத்தை போக்கியிருக்க வேண்டும். அந்த பொறுப்புணர்ச்சி மத்திய அரசுக்கு இல்லை. போராட்டம் நீடிப்பதும் அதில் கலவரம் உருவாவதும் உங்களுக்கு லாபம் என கருதியதுதான் வன்முறை வெடிக்க காரணம்'' என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி சீறியிருக்கிறார் கெஜ்ரிவால்.


அதனை மறுத்துப்பேசிய காவல்துறை ஆணையர்கள், "சமூக விரோதிகள் யாரும் உள்ளே வரவில்லை. சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டங்களை ஒடுக்க எதிர்ப்பாளர்கள் உருவாக்கிய சதி இது. ஷாருக் என்ற ஒரு நபர் துப்பாக்கி நீட்டி போலீசாரை மிரட்டுகிறான். அந்த நபர் போராட்டக்காரர்கள் பக்கமிருந்து சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் பகுதியில் நின்ற போலீஸ்காரரை நோக்கி சுடுவதாக மிரட்டுகிறான். அப்படியானால் வன்முறை எங்கிருந்து துவங்கியது என்பதை முதல்வர் (கெஜ்ரிவால்) புரிந்துகொள்ள வேண்டும் என ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.

அப்போது அஜீத் தோவல், பல புகைப் படங்களை காட்டி விவரித்ததோடு, "முதல்வர்ங்கிற முறையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் முயற்சித்திருக்க வேண் டும்'' என கெஜ்ரிவால் மீது குற்றம்சாட்ட, "அமித்ஷாவின் சட்டத்தை எதிர்த்துதான் போராட்டம் நடக்கிறதே தவிர என்னை எதிர்த்து அல்ல'' என்றிருக்கிறார் கெஜ்ரிவால்.


இதனையடுத்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் விவாதித்து விட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 26-ந்தேதி இரவு சந்தித்தார் அஜீத் தோவல். நள்ளிரவைத் தாண்டியும் ஆலோசனை நீடித்தது. உளவுத்துறையிடமிருந்து சேகரித்த ஆதாரங்களை மோடியிடம் கொடுத்திருக்கிறார் தோவல். அவை அனைத்துமே போராட்டக் காரர்களுக்கு எதிரானவைகள் என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.