உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி தன்னுடைய கருத்துக்களை ஆண்டாள் பிரியதர்ஷினி எடுத்துரைக்கிறார்
தம்பி உதயநிதி பேசியது முற்றிலும் சரி. சனாதனத்தை அழிக்கவே முடியாது என்று அவர்கள் சொல்கிறார்கள். பிறகு எதற்காக உதயநிதியின் பேச்சுக்கு பயப்படுகிறார்கள்? அவர்களே அவர்களுடைய கருத்துக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள். டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டியது சனாதனம் என்றார் உதயநிதி. போலியோ ஒழிப்பில் நாம் வெற்றிகரமாக ஈடுபட்டோம். மனதில் நோயை உருவாக்குவது சனாதனம். கொடுமையான ஒரு நோய் அது. அதற்கான மருந்து நம்முடைய திராவிட தர்மம் தான். அதை உதயநிதி மிகச்சரியாகவே பேசியிருக்கிறார்.
உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்கிறோம். அவருடைய பேச்சை எதிர்ப்பவர்கள் யாருக்கும் சனாதனம் என்றால் என்னவென்று புரியவில்லை. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்று உலக நாடுகள் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டன. தங்களுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பை மறைப்பதற்காகத்தான் திசைதிருப்பும் வேலைகளை பாஜகவினர் செய்துவருகின்றனர். சனாதனத்துக்கு ஆதரவாக தமிழிசை பேசுகிறார். திராவிட சித்தாந்தம் இங்கு இல்லையென்றால் தமிழிசை பள்ளிக்கு சென்றிருக்க முடியாது.
தமிழுக்காக தொண்டு செய்தவர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு உண்டு என்று கலைஞர் கொண்டுவந்த திட்டத்தால் தான் தமிழிசைக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது. இது உண்மையல்ல என்று தமிழிசை சொல்லட்டும். சனாதனிகள் யாரையும் படிக்க விடவில்லை. கலைஞர் பள்ளிகள் கட்டி, கல்லூரிகள் கட்டி, இடஒதுக்கீடு வழங்கி அனைவரையும் படிக்க வைத்தார். தமிழிசை, அண்ணாமலை உள்ளிட்டோர் எல்லாம் திராவிட திட்டங்களால் பயன்பெற்றவர்கள். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரையே இவர்கள் அழைக்கவில்லை. அதையும் தீட்டு என இவர்கள் நினைத்தனர்.
வாக்கு வங்கிக்காக பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு எப்போதுமே இல்லை. இந்த நாட்டில் பெண்கள் மார்பை மறைக்கும் உரிமையைக் கூட போராடித்தான் பெற முடிந்தது. தேவதாசி என்கிற முறையை வைத்து பெண்களை அடிமைப்படுத்தினார்கள். கணவனோடு சேர்ந்து மனைவியும் இறக்க வேண்டும் என்றனர். முத்துலெட்சுமி ரெட்டி படிக்கக்கூடாது என்று போராடினார்கள். இதெல்லாம் தான் ஒழுக்கமான வாழ்வியல் முறையா? இவர்களுடைய கொள்கைகள் அனைத்தும் மனுதர்மத்தில் இருக்கிறது. இளைய தலைமுறையின் தலைவராக உதயநிதி இன்று உருவாகி நிற்கிறார். அந்த அச்சம் தான் பாஜகவுக்கு அதிகம் இருக்கிறது.