Skip to main content

தேசவிரோதிகளுடன் காங். கூட்டணி என்று அமித்ஷா புலம்புவது சரியா?

Published on 21/05/2018 | Edited on 22/05/2018

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசவிரோத சக்திளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அந்தக் கட்சி தோற்றுவிட்டது. கடந்த தேர்தலில் 122 இடங்களில் வெற்றிபெற்ற கட்சி 78 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது. தோற்ற கட்சி கொண்டாடலாமா? என்றும் கேட்கிறார்.

 

 

 

இதெல்லாம் உண்மையா? கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. அப்படி இருக்கும்போது, தேசவிரோத சக்திகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாக கூறுகிறாரே எப்படி? அந்த சக்தி யாராக இருக்கும்? ஒருவேளை, லிங்காயத்துகளை கூறுகிறாரோ? அவர்கள்தான் இந்துமதத்தில் இருந்து விலக விரும்பினார்கள். அவர்கள் கோரிக்கையை சித்தராமையா அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்து மதத்துக்கு விரோதமாக பிரிந்தவர்களை தேசவிரோதி என்கிறாரோ. இந்து மதத்துக்கு விரோதமாக பேசினாலே தேசவிரோதிகள் என்று பேசியே கூறுபோடுவதை எப்போது பாஜக நிறுத்தப்போகிறதோ?
 

amit shah


அடுத்து, 122 இடத்தை வென்ற காங்கிரஸ் 78 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது இதை எப்படிக் கொண்டாடலாம் என்று கேட்கிறார். அமித்ஷா கூறுவது சரி என்றால், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. 43 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது சட்டமன்ற இடங்களில் 136 தொகுதிகளுக்கு சமம். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களைப் பெற்று, வெறும் 36 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அதுமட்டுமின்றி 34 தொகுதிகளில் பாஜக டெபாசிட்டை இழந்திருக்கிறது. அதிலும் 12 இடங்களில் வெறும் 5 ஆயிரம் வாக்குகளுக்கு கீழ் பெற்றிருக்கிறது இதைப் போய் பாஜக வெற்றிபெற்றிருப்பதாக அமித்ஷா கூறுகிறார் என்றால் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்.
 

Rahul-Gandhi

 


அதேசமயம், காங்கிரஸ் கட்சி 38 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றாலும் எந்த தொகுதியிலும் அது டெபாசிட்டை இழக்கவில்லை. இதைவைத்தே பெரும்பான்மையாக மக்கள் எந்தக் கட்சியை ஆதரித்திருக்கிறார்கள் என்பதை சிறு குழந்தைகள்கூட புரிந்துகொள்ளும். ஆனால், தோல்வியை திசைமாற்றவும், நீதிமன்றத்தில் வாங்கிய அடிகளால் ஏற்பட்ட அவமானத்தை மறைக்கவுமே அமித்ஷா இப்போது புலம்புகிறார்.

 

பாவம், அவர் புலம்பித்தானே ஆகவேண்டும். 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றுவேறு சொல்லியிருக்கிறார். நிச்சயமாக 2 தொகுதிகள் பாஜகவுக்கு உண்டு என்கிறார்கள் கர்நாடகா மக்கள்.