அமெரிக்கவாழ் தமிழர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 127 வது பிறந்தநாளன்று பாரதிதாசனை நினைவுகூறும் வகையிலும், அவரைப்போற்றும் வகையிலும் விழாவில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா என பல்வேறுபோட்டிகள் நடத்தினர். இந்த விழாக்குறித்து அமெரிக்கவாழ் தமிழர் ந.க.இராஜ்குமார் நக்கீரனிடம் கூறியது.
அமெரிக்காவின் டெலவர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த (டெலவர், பிலடெல்பியா மற்றும் தென்செர்சி மாநில) தமிழ் நண்பர்கள் இணைந்து நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 127 வது பிறந்தநாள் விழா, முதல் மாநிலமாம் டெலவரில் ஏப்ரல் -25 , 2018 அன்று பிற்பகல் 1 .00 மணிமுதல் மாலை 4 .30 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவானது இனிதே தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகளுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் உருவப்படத்தை முன்னிலைப்படுத்தி ஓவியப்போட்டியும், பாவேந்தரின் வாழ்வியல் சார்ந்த வினாடி வினா போட்டியும் தமிழில் நடைப்பெற்றது. இப்போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.
அதன்பிறகு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. துரைக்கண்ணன் வரவேற்று பேசினார். அப்போது, இவ்விழாவின் முதன்மையான நோக்கம் எளிமையான போட்டிகளின் மூலம், புரட்டிக்கவிஞர் பாரதிதாசனின் உருவத்தையும், அவர் யார் என்பதையும் புலம் பெயர்ந்த தமிழ்க் குழந்தைகள் மனதில் பதிய வைப்பதும், குழந்தைகளுக்கு பயிற்சி தந்து போட்டிகளுக்கு ஆயத்தப்படுத்துவதின் மூலமாக பெற்றோர்களும் அக்கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டனர் என்பதும் இவ்விழாவில் நிறைவேறிவிட்டது என்பதற்கு குழந்தைகளிடமிருந்து வெளிப்பட்ட திறமையே சான்று என்றும் கூறினார்.
இவ்வினிய விழாவில் பாரதிதாசனின் “சங்கே முழங்கு” பாடலை இசையோடு திருமிகு. ரமா ஆறுமுகம் அவர்கள் தன் இனிமையான குரலில் பாடி அரங்கத்தில் உள்ளவர்களை ஆச்சிரியப்படுத்தினார். "பாரதிதாசனும் பெண்ணுரிமையும்" என்ற தலைப்பில் திருமிகு. நெல்லிக்கனி அவர்கள் கனியைப் போல தமிழ்ச்சுவை தந்தார். "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பில் ந.க.இராஜ்குமார் புரட்சியுரை ஆற்றினார்.
நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் திருமிகு. செந்தில்நாதன் முத்துசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாரதிதாசன் குறித்து செந்தமிழ்ப் பேருரையாற்றினார். நிகழ்வின் மற்றொரு சிறப்புவிருந்தினரான மூத்தறிஞர் செம்மல் முனைவர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் அன்புமகள் திருமிகு.தென்றல் அழகப்பன் அவர்கள் “பாரதிதாசன் ஒரு தமிழ்ப்போராளி” என்ற தலைப்பில் பேசி, புரட்சிக்கவிஞரின் வாழ்க்கைச் சுவடுகளைப் படம்பிடித்துக் காட்டியதும், அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளை மட்டுமல்லாது, ஒரு கவிஞனாய், போராளியாய் ஆற்றிய பணிகளை அழகுற உரைத்ததும் அரங்கில் இருந்த ஒவ்வொருவர் நெஞ்சத்திலும் பசுமையாய் பதிந்தது.
அதைத் தொடர்ந்து பேசிய திருமிகு. பிரசாத் பாண்டியன் அவர்கள், பாரதிதாசன் எப்படியெல்லாம் தன் எழுச்சிமிகு கவிதைகள் மூலமாக சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கப் போராடினார் என அழகுற விளக்கிப் பேசினார்.
போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் தம் கையால் ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கி ஊக்கப்படுத்தினர்.