இந்தியாவில் சிலை என்பது மிக முக்கிய குறியீடு. நாடு முழுவதும் கடவுள்களுக்கு சிலை உண்டு. கடவுள் மறுப்பு பேசியவர்களுக்கும் சிலை உண்டு. இரண்டும் ஒன்றல்ல. இருக்கிறதா இல்லையா என்று உறுதியற்ற ஒரு விஷயத்தை நிலை நிறுத்த முதல் வகை சிலைகள். கண் முன்னே இருக்கும் மக்கள் தான் முக்கியம் என்று பேசி, வாழ்ந்தவர்களின் சித்தாந்தங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் சிலைகள் இரண்டாவது வகை. இருவகை சிலைகளுக்கும் இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் உண்டு. சமீப காலமாக சிலை அரசியல் உச்சத்தில் இருக்கிறது. திரிபுரா தேர்தலில் வென்ற பாஜக லெனின் சிலைகளை அகற்றியது. அதைத் தொடர்ந்து ஹெச்.ராஜா பெரியார் சிலை குறித்து வெளியிட்ட கருத்து தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் பல ஆண்டுகள் முன்பிருந்தே தமிழகத்தில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளன. சமூக விடுதலைக்கு பேசிய இவர்களே சிறை வைக்கப்பட்டது நம் சாதனை.
இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர்.பீமா ராவ் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று. இந்தியாவில் இவரது சிலைகளின் நிலை இப்படியிருக்க உலகம் முழுவதும் அம்பேத்கர் எப்படி போற்றப்படுகிறார் என்று பார்ப்போம். இந்திய சட்டத்தை வகுத்த அம்பேத்கரை உலகம் முழுவதும் சட்ட மேதையாக போற்றி அவரின் சிலைகள் பல நாடுகளின் பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் நிறுவியுள்ளனர்.
120 கோடி மக்களை பெருமைப்படுத்திய கனடா
கனடாவில் கடந்த 2015ஆம் ஆண்டு யார்க் பல்கலைக்கழகத்தில் டாக்டர்.அம்பேத்கரின் சிலை திறந்துவைக்கப்பட்டது. அவரது வெண்கல சிலையை திறந்து வைத்த கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரி விஷ்ணு பிரகாஷ், "டாக்டர்.அம்பேத்கர் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர். இந்திய நாட்டின் தலை சிறந்த குடிமகன் அவர். யார்க் பல்கலைக்கழகம் அம்பேத்கரை மட்டும் பெருமைப்படுத்தவில்லை, 120 கோடி இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளது" என்று கூறினார். உண்மைதான், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து அந்த தேசத்தின் மொத்த மக்களுக்குமான சட்டத்தை வகுக்குமளவுக்கு உயர்ந்து நின்றது இந்திய மக்களின் பெருமைதானே?
தன் பெருமைக்குரிய மாணவனுக்கு அமெரிக்கா செய்தது
அமெரிக்காவில் உள்ள ப்ரேன்டீஸ் பல்கலைக்கழத்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அவரது வெண்கல சிலை நிறுவப்பட்டது. இது அமெரிக்காவில் நிறுவப்பட்ட இரண்டாவது சிலை. முதலில் நிறுவப்பட்டது, அம்பேத்கர் தன் வாழ்வின் முக்கிய பங்காகக் கருதும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான். அங்குள்ள லெஹ்மன் நூலகத்தில் 1995ஆம் ஆண்டு, தன் பெருமைக்குரிய மாணவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தது கொலம்பியா பல்கலைக்கழகம். "என் வாழ்வின் சிறந்த நண்பர்களையும் சிறந்த ஆசிரியர்களையும் இங்குதான் பெற்றேன்" என்று அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் துண்டு
கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்துக்கு அதன் விருப்பத்திற்காக அம்பேத்கரின் சிலையை பரிசளித்தது இந்திய வெளியுறவுத்துறை. அப்பொழுது பேசிய இந்திய தூதரக அதிகாரி, "இங்கு இந்த சிலை வழியாக இந்தியாவின் ஒரு துண்டு இங்கிருக்கிறது" என்று கூறினார். இந்தியாவின் முக்கியமான துண்டு அது.
லண்டனில் அம்பேத்கர்
லண்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்சில் 1973ஆம் ஆண்டு முதன் முதலாக லண்டன் கிளெமெண்ட் ஹவுசில் அவரின் புகைப்படம் வைக்கப்பட்டது. அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு அங்குள்ள ஆர்ட் கேலரியில் டாக்டர்.அம்பத்கரின் வெண்கல சிலை வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்சில் பொருளாதாரத்தில் தனது பட்டய படிப்பை முடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு லண்டனில் அம்பேத்கர் நினைவகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
உலகம் முழுவதும் போற்றப்படும் இந்த மேதையின் சிலைகள், இங்கு காவி வண்ணம் பூசப்படுகின்றன, கூண்டுக்குள் வைக்கப்படுகின்றன. அம்பேத்கர் மட்டுமல்ல, இந்தியாவின் தலைவர்கள் பலரும் மறைந்த பின் நம்மிடம் சிக்கிக் கொண்டு படாத பாடுபடுகிறார்கள்.