Skip to main content

மாணவர்களின் போராட்டத்துக்கு அஞ்சி அதை திசை திருப்புகிறார்கள் - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

Published on 05/02/2020 | Edited on 06/02/2020

மாணவர்கள் அமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் மத்திய அரசை கண்டித்து கடுமையாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது,  பல்கலைக்கழகத்தின் அரங்குகளில் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் இன்று வெளியே அரங்கு பிடித்து நடத்துகின்ற சூழ்நிலைகளில் நாம் இருக்கின்றோம். இதே வலதுசாரி அமைப்புக்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு இத்தகைய பிரச்சனைகள் வருவதில்லை. அத்தகைய அமைப்புகள் ஐஐடி முதல் சாதாரண கல்லூரி வரை அவர்களுக்கு பிடித்தவர்களை  அழைத்து வந்து கூட்டம் நடத்த முடிகின்றது. அதில் சுப்பரமணியன் சுவாமி முதல் ஹெச்.ராஜா வரை யாரை வேண்டுமானாலும் அழைத்து கூட்டம் நடத்தலாம் என்ற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது. நம்மை போன்ற ஜனநாய சக்திகள் நிகழ்ச்சி நடத்த போனால் கலவரம் செய்து அதனை தடுக்கப் பார்க்கிறார்கள். அப்படிபட்ட வளாகங்களாக அதனை மாற்றிவிட்டார்கள். இந்த நிலையில் பல்கலைகழங்களுக்கு வெளியேதான் நிகழ்ச்சி நடத்த வேண்டிய சூழ்நிலைகளுக்கு நம்முடைய மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து எத்தனையோ சட்டதிருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். அதனை எல்லாம் எவ்வித எதிர்ப்புக்களும் இல்லாமல் நிறைவேற்றியும் இருக்கிறார்கள். ஆனால் அதை போன்று ஏன் குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. முத்தலாக், காஷ்மீர் விவகாரத்தை போல் ஏன் இதை கடந்து செல்ல முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் முகமூடிகளை தற்போது மக்கள் அறிய துவங்கிவிட்டார்கள்.
 

fgh



வரலாற்றில் முதல் முறையாக தாங்கள் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து முதல்முறையாக பிரதமர் முதல் பாஜகவின் கடைமட்ட தலைவர்கள் வரை கூட்டங்களில் பேசுகிறார்கள், துண்டறிக்கை கொடுக்கிறார்கள், பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்கள். தாங்கள் கொண்டுவந்த சட்டத்தை ஆதரித்தே ஏன் போராடி கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் இந்த சட்டத்தை எதிர்த்து வெகுமக்கள் போராடினார்கள். குறிப்பாக முன் எப்போதும் இல்லாமல் மாணவர்கள் போராடினார்கள். மாணவர்கள் போராட்டத்துக்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது, அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது. அதற்கு மோடி அரசு அஞ்சுகின்றது. இரும்பு மனிதர் என்று சொல்லப்படுகின்ற அமித்ஷா மாணவர்களை பார்த்து பயப்படுகிறார். அதனால் தான் அந்த சட்டத்தை ஆதரித்து, ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கின்ற நிலைக்கு அவர்கள் சென்றுள்ளார்கள். அவர்கள் எப்படி பயப்பட்டால் தனியாக இயக்கம் ஆரம்பிக்கும் நிலைக்கு சென்றிருப்பார்கள். எத்தனை விளக்க கூட்டங்களை அவர்கள் நடத்துகிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை நம்ப மறுக்கிறார்கள் என்பது தற்போது அவர்களுக்கு புரிய வந்திருக்கிறது. அதனால்தான் மாணவர்கள் போராட்டத்தை சமூகவிரோதிகள் நடத்துகின்ற போராட்டம் என்று திசை திருப்புகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது. மாணவர்கள் போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை. நிச்சயம் அது அடுத்த கட்டத்துக்கு செல்லும்" என்றார்.