இந்திய அரசியல் சாசனத்தின் தளகர்த்தர் பாரத ரத்னா அம்பேத்கருக்கு இன்றைக்குப் பிறந்த தினம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அவருக்கு வாலிபக் காலம் அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை. பள்ளிக்குச் சாக்குப் பையை எடுத்துக்கொண்டு அதில் அமர்ந்து பாடம் கற்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். சாதி ஏற்றத்தாழ்வுகள் அவரை அனலாய் எறித்தது. ஆனால் பனிமலையாய் அவற்றை எதிர்த்து போரிட்டார். பல போராட்டங்களுக்குப் பிறகு, பல பட்டங்களையும், ஆய்வு கட்டுரைகளையும் சமர்பித்து டாக்டர் பட்டம் பெற்ற அவர், பரோட மன்னரின் ஆட்சியில் ராணுவச் செயலாளராகப் பணியில் சேர்ந்தார். பணியில் இருந்த அவருக்கு ஒரு நாள் தாகம் ஏற்படவே அங்கிருந்தவர்களைத் தண்ணீர் கேட்டுள்ளார். யாரும் தண்ணீர் தர முன்வரவில்லை. மீண்டும் கேட்டார் யாரும் அசையக்கூட வில்லை. என்ன காரணம் என்று அவருக்கு உடனடியாகப் புரியவில்லை.
15 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில், தான் சாக்குப் பையில் அமர்ந்த நினைவலைகள் அவருக்கு வந்து சென்றது. நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் நமக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று உணர்ந்தார். அங்கீகாரம் கிடைக்காது, நாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த நொடி முடிவெடுத்தார். பதவியை ராஜினாமா செய்தார். படிப்புக்காக முதன்முதலில் அமெரிக்கா சென்ற அவருக்கே இந்திய அரசியலமைப்பை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் அந்த வாய்ப்பு அவருக்கு எளிதாகக் கிடைத்து விடவில்லை. போராட்டம், போராட்டம் தொடர்ந்து பேராட்டம். இந்த வார்த்தைகள் யாருக்கு பொருத்துகிறதோ இல்லையோ அம்பேத்கருக்கு நூறு சதவீதம் பொருந்தும். தீண்டாமை இருளை விரட்ட தொடர்ந்து பேசினார், எழுதினார். அதிகார வர்க்கத்தோடு மோதினார், உயர் பதவிகளை தூக்கி எறிந்தார். அம்பேத்கருக்கு வாழும் வரை கருணையின்றி தொல்லை கொடுத்த இந்தச் சமூக கட்டமைப்பு இறப்புக்கு பிறகும் உடனடியாக அவருக்கான மரியாதையைச் செய்யவில்லை. இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. சிலருக்கு விருதுகள் பெருமை சேர்க்கும். சிலர் விருதுகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்பேத்கருக்கு இரண்டாவதாகச் சொல்லப்பட்டது நூறு சதவீதம் பொருந்தும்!