காஷ்மீர் விககாரம் தொடர்பாக நேற்று டெல்லியில் திமுக பெரிய அளவில் போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்திற்கு 13 கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இந்த சம்பவம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்திற்காக திமுக இந்த மாதிரியான போராட்டங்களை முன் எடுத்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக வசிக கட்சியை சேர்ந்த ஆளூர் ஷாநாவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள்.தேச விரோத செயல்களில் திமுக ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிற நிலையில், ஈழத்துக்காக எந்த போராட்டத்தையும் தில்லியில் மேற்கொள்ளாத திமுக தற்போது போராடுவதில் உள்ள நோக்கம் என்ன?
காஷ்மீர் பிரச்சனையில் யார் கைது செய்யப்பட்டுள்ளார்கள்? பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வீட்டில் முடக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. நீங்கள் கூறுவது போன்று புதிதாக ஈழப்பிரச்சனையை பற்றி பேச வேண்டியதில்லை. அது ஏற்கனவே இந்தயா முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. டெசோ எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா? அகில இந்திய தலைவர்களை எல்லாம் சென்னையில் கூப்பிட்டு போராட்டம் நடத்தப்பட்டதா இல்லையா? அதில் பரூக் அப்பதுல்லா கலந்து கொண்டு நமக்காக பேசினார். அவருக்கும், ஈழத்துக்கும் என்ன சம்பந்தம். நமக்காக தமிழகம் வந்து போராடினார். ஈழப்போராட்டம் நடந்த போது போராடவில்லையே என்று சில பேர் கேட்பது வியப்பாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் மனிதச் சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதைப் பற்றி யாரும் பேசவில்லை. தங்களுக்கு தேவையானதை மட்டுமே பலர் பேர் எடுத்து பேசுகிறார்கள். ஈழப்பிரச்சனையை சந்து, பொந்துகளில் மட்டுமே பேசுபவர்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் நேற்று அதிரடியாக வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை. அமித்ஷா வீட்டில் இந்த மாதிரி ஏறிக் குதித்து கைது செய்யப்முடியுமா? இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அதில் முன்பிணை வேண்டி நீதிமன்றத்திற்கு சிதம்பரம் செல்கிறார். இந்த பிணை தொடர்பான கோரிக்கையை வழக்கை நடத்தும் நீதிமன்றம் விசாரிக்கவில்லை. தில்லி உயர்நீதிமன்றம் விசாரித்து அவருக்கு பிணையை ரத்து செய்தது. அதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார். அந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது. ஆனால், அதற்குள் அவரை சுவர் ஏறிக் குதித்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது. அவருக்கு எதற்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தார்கள். அவர் என்ன மல்லையாவா அல்லது நீரவ் மோடியா நாட்டை விட்டு தப்பித்து வெளிநாட்டிற்கு செல்வதற்கு? இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பாஜக செய்து வருகிறது. நீதிமன்றம் ஒருத்தருடைய பிணையை மறுத்து விட்டதாலேயே அவரை குற்றவாளியாக கருத வேண்டிய அவசியமில்லை.

நோட்டீஸ் கொடுத்து அவர் ஆஜர் ஆகாததால் தானே அவரை இப்படி கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது?
அவர் இதுவரை ஆஜர் ஆனதே இல்லையா? பல முறை இந்த வழக்கிற்காக ஆஜர் ஆகியுள்ளார். இந்த வழக்கில் அவர் என்ன ஏ1, ஏ2 குற்றவாளியா? அவர் பெயரே வழக்கில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவரை சுவர் ஏறிக் குதித்து கைது செய்கிறார்கள். தமிழகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆதாரத்துடன் கூடிய புகார் இருந்தும் அவர் மீது காவல்துறையினர் சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றம் தன்னுடை கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதே குற்றச்சாட்டு அமைச்சர் விஜய பாஸ்கருக்கும் பொருந்தும். அவர் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் விஜய பாஸ்கருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப வேண்டியதானே? அதிகாரம் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு வேற சட்டமா? சட்டத்தின் படி அனைவரும் சரி என்கிற போது இதனை எப்படி பார்ப்பது.