இந்திய வரலாற்றில் முதன்முறையாக என்று சொல்லும் அளவுக்கு எதிர்க்கட்சியை பார்த்து ஊழல் கட்சி என்று சொல்லும் முதல்வர் அதிமுக முதல்வர் எடப்பாடிதான். எதிர்க்கட்சியை ஊழல் கட்சி என்று குற்றம்சாட்டும் முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் ஆதாரங்களோடு எதிர்க்கட்சித் தலைவர் மீதோ, அவருடைய கட்சி நிர்வாகிகள் மீதோ வழக்குப்போட்டிருக்க வேண்டாமா என்று அரசியல் பார்வையாளர்கள் கேட்கிறார்கள்.
திமுக ஆட்சியில்தான் ஜெயலலிதா மீதும் அவருடைய அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குத் தொடரப்பட்டு, மரணத்தின்போதுகூட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது.
அப்படிப்பட்ட திமுகவை ஊழல் கட்சி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வாய்ப்பிருந்தால் ஜெயலலிதா விட்டு வைத்திருப்பாரா? இப்போது ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்குக்கூட காரணமாக திமுகதான் இருக்கிறது. அந்த கடுப்பிலாவது ஏதேனும் ஆதாரங்களை வைத்து திமுகவினர் மீது ஏன் எடப்பாடியால் வழக்கு தொடரமுடியவில்லை என்று சாமானியர்கள்கூட வினா எழுப்புகிறார்கள்.
இந்நிலையில்தான், ஜெயலலிதாவால் கடுமையாக எதிர்க்கப்பட்ட, விமர்சனம் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 2009 ஆம் ஆண்டு முடிந்த இலங்கை சண்டையை திமுகவும் காங்கிரஸும் தடுத்து நிறுத்த தவறியது ஏன் என்று 10 ஆண்டுகள் கழித்து திடீர் “யானோதயம்” பெற்று, அதாங்க ஞானோதயம் பெற்று இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
சில நாட்களுக்கு முன் ஊழல் அதிமுக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்தியது. சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடந்ததைப் பார்த்த எடப்பாடி, அதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்ட வேறு ஏற்பாடு பண்ணிருக்கலாம்… தேவையில்லாம அவருடைய அம்மா ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பு நிலைப்பாடுகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார். அப்படியானால், ஜெயலலிதா பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என்று சொன்னப்போ, இதே எடப்பாடி உள்ளிட்டோர் அவருடைய நிலையை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்கிறது…
இதோ, ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவும் அதிமுகவும் கடந்த காலத்தில் மேற்கொண்டிருந்த நிலைப்பாடுகளையும், கருத்துகளையும் மக்கள் பார்வைக்காக தொகுத்துத் தருகிறோம்…
1990 முதல் 2008 வரை தமிழகத்தில் வாக்கு வாங்குவதற்காக ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள்…
"ராஜீவ் கொலையாளிகளுக்கு நான்தான் தூக்குத் தண்டனை வாங்கி தந்தேன்.."
"உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், ஏன் ராஜிவ் கொலையாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றப்படவில்லை"
"கருணாநிதி போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து தீவிரவாதத்தை வளர்க்கிறார்"..
"ஈழப் போராளிகளின் தீவிரவாத இயக்கத்தை நான்தான் தடை செய்தேன்.."..
"திமுக அரசு கொண்டுவந்த போர் நிறுத்த தீர்மானம், புலிகளுக்கு ஆதரவான தீர்மானம்"..
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்..”
"தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொல்லவில்லை, தமிழர்களை பிணைகைதிகளாய் பிடித்து கொல்வதே விடுதலைபுலிகள்தான்"..
"பிரபாகரன் சர்வதேச குற்றவாளி, விடுதலைபுலிகள் தீவிரவாத கும்பல், பிரபாகரனை இந்தியாவுக்கு இழுத்து வந்து தூக்கில் இட வேண்டும்"..
“நளினிக்கு தூக்குத் தண்டனையைக் குறைத்து சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார்"
"திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் புலிகள் தமிழகத்தில் நிம்மதியாக உலவுகிறார்கள்.”
"திமுக ஆட்சியில் விடுதலை புலிகள் மீண்டும் தலையெடுத்து விட்டார்கள். எனவே பொடா சட்டம் மூலம் வைகோ, சுபவீ, நெடுமாறன் போன்றோரை ஆண்டு கணக்கில் சிறையில் தள்ளினேன்"
2009 முதல் 2016 வரை தமிழக வாக்காளர்களிடம் வாங்க ஜெயலலிதா உதிர்த்த வாசகங்கள்….
"அதிமுகவுக்கு வாக்களித்தால் ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன்"
"ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வேன்"
இவை தவிர, ஈழத்தில் போர் உச்சத்தில் இருக்கும்போது, அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா வெளியிட்ட ஒரு அறிக்கையில் இப்படி கூறியிருந்தார்..
போரை நிறுத்தும் அதிகாரம் இந்தியாவுக்கு கிடையாது என்று ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்…
“திமுக தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சராக இருக்கும் கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது.
இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.”
- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் நாளேடு., 16.10.2008)
இதுபோக, ஈழப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு இப்படி பதில் கூறியிருந்தார்…
கேள்வி: ஈழத்தில் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?
ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
- ஜெ.ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் நாளேடு, 18.1.2009)