![audi car](http://image.nakkheeran.in/cdn/farfuture/CELlRUTjCuwqWhNlwWCwlSLsd3zzlwGGCMTBBjTTF9k/1533347612/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-01_at_1.11.26_pm_1.jpeg)
![audi car](http://image.nakkheeran.in/cdn/farfuture/OqkBWopM5nubqbiGqQmfqxoLMMF2xY9vBqL19MYuH2Q/1533347612/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-01_at_1.11.26_pm.jpeg)
![audi car](http://image.nakkheeran.in/cdn/farfuture/6-aeo4z9DDyJfV2vwgJOkOOkPjfhbMhamibS2bztun4/1533347612/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-01_at_1.11.26_pm_3.jpeg)
![audi car](http://image.nakkheeran.in/cdn/farfuture/86nOzGH7_7Qe-xiJbC2PnyfnHrt0v_mRW62soae9fx8/1533347612/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-01_at_1.11.26_pm_4.jpeg)
![audi car](http://image.nakkheeran.in/cdn/farfuture/TwKd2w-YhuFJ1ZDkOprRuVgXI9nAZbKFdtoA_FBVxDU/1533347612/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-01_at_1.11.26_pm_5.jpeg)
![audi car](http://image.nakkheeran.in/cdn/farfuture/xIS5KGNnCDtCdnfHd7TUCI8ZvXv-H_ucJX4TukCp_Ms/1533347612/sites/default/files/2018-08/whatsapp_image_2018-08-01_at_1.11.26_pm_6.jpeg)
![audi car](http://image.nakkheeran.in/cdn/farfuture/B743Tc550kKhFH6VSF6H4j1K1uJW1124aIV7Et92MBA/1533347610/sites/default/files/2018-08/903.jpg)
![audi car](http://image.nakkheeran.in/cdn/farfuture/2IFPgrcrq23a_bNm22hxvASCxLZ5KsoJx_y_5B_rMC0/1533347610/sites/default/files/2018-08/900.jpg)
கோவையில் பேருந்துக்காக காந்திருந்த பயணிகள் மீது ஆடி கார் சீறிப்பாய்ந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆடி காரை ஓட்டி வந்த ஜெகதீஷ் என்பவர், மது அருந்தியது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
போலீஸ் கமிஷனர் பெரியய்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது, கார் டிரைவர் ஜெகதீசன் குடிபோதையில் இருந்ததை டாக்டர் முன்னிலையில் ஒப்புக்கொண்டு உள்ளார். இதுகுறித்து டாக்டர்கள் ஒப்புதல் சான்றிதழ் வழங்கி உள்ளனர். ரத்த மாதிரி எடுத்தும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஜெகதீசன் மீது ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 304(2) உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி மரணம் விளைவித்தல், 337 (உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கவனக்குறைவாக செயல்படுதல்), 338(கடும் காயத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல்), 279 (அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டுதல்) ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குடிபோதையில் காரை ஓட்டிச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 183(அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்), 184(அபாயகரமாக ஓட்டுதல்), 185 (குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது) ஆகிய மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. கைதான டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 304 (2) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் குறைந்த பட்சம் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.
![balu](http://image.nakkheeran.in/cdn/farfuture/JB0JZ7ZFQZJKKVe9KuAVGUo38viUT7Cu68lss7_QOQU/1533347654/sites/default/files/inline-images/k.balu%20450.jpg)
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சமூக நீதி பேரவையின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான கே.பாலு,
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு டாஸ்மாக் கடை முன்பு கிட்டதட்ட 200 இருசக்கர வாகனங்கள் நிற்கின்றன, மாலையில் மட்டும். குடித்துவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு போகும்போது காவல் காக்கிறது, காவல்துறை. பின் சிறிது தூரம் தள்ளி நின்று நானும் சோதனை செய்கிறேன் என சோதனையில் ஈடுபடுகின்றனர்.
அரசாங்கம் தெரிந்தே செய்கிறது. மதுக்கடைகளுக்கு முன் நிற்கும் வண்டிகளெல்லாம் குடித்துவிட்டு வருபவர்களுடையது, கடை அரசாங்கத்தினுடையது. அதனால் அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. இந்த விஷயத்தை மிக கவனமாக பார்க்கவேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டவன் அப்பாவி அவன் ஒரு பாவமும் செய்யாதவன். இவன் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி ஏற்படும் விபத்தை எதைவைத்தும் ஈடுசெய்ய முடியாது.
அதிவேகமாகவோ, கவனக்குறைவாகவோ வாகனம் ஓட்டி ஒரு விபத்து நடக்கிறதென்றால் அதற்கு இழப்பீடு, காப்பீடு ஆகியவற்றை தரலாம். ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அதனால் ஏற்படும் விபத்திற்கு இழப்பீடோ, காப்பீடோ வழங்கவேண்டுமென சட்டத்தில் சொல்லப்படவில்லை. யார் விபத்திற்கு காரணமோ அவர்தான் வழங்கவேண்டும் என சொல்கிறது. இது அனைத்து இடங்களிலும் சாத்தியமாகாது.
அதனால் மதுக்கடைகளை நடத்தும் அரசாங்கம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்படும் விபத்துகளுக்கான நிதி என ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கவேண்டும். இந்த மாதிரியான விபத்துகள் நடக்கும்போது அவரது உரிமம் உடனடியாகப் பறிக்கப்படுவதையும் தாண்டி அந்த வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் அதுகுறித்த பயம் வரும். இவையனைத்தையும் தாண்டி இப்படியான விபத்துகளுக்கு அரசாங்கம்தான் காரணம். முழுக்க, முழுக்க அரசாங்கம் மட்டும்தான் காரணம். ஏனென்றால் மது விற்பது அரசாங்கம்தான், மதுக்கடைகளின் முன் நிற்கும் வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிப்பதும் அரசாங்கம்தான் அதனால்தான் இதற்கு முழு காரணமும் அரசாங்கம் என கூறுகிறேன் என்றார் உறுதியாக.