விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகிலுள்ள புரசலூரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது, அங்குப் புதைந்திருந்த சுமார் 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்த புரசலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்குப் பள்ளம் தோண்டியபோது, புதைந்திருந்த ஒரு சிற்பம் வெளிப்பட்டுள்ளதாக அவ்வூரைச் சேர்ந்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் செ.இரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்குத் தகவல் தெரிவித்தார். இச்சிற்பத்தை ஆய்வு செய்தபின், தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது;
திருச்சுழி அருகிலுள்ள புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு வைத்த சதிக்கல் ஆகும். போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை சங்க காலம் முதல் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. அதுபோல் போரிலோ, வேறு காரணங்களினாலோ கணவன் இறந்தபின் அவனுடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு நினைவுச் சின்னங்கள் அமைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. இவற்றை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக்கிறார்கள். சதி, மாலை ஆகிய சொற்களுக்குப் பெண் என்றும் பொருள் உண்டு.
இந்நிலையில் புரசலூரில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்டது. இதில் ஆண் வலது கையையும், பெண் இடது கையையும் தொடையில் வைத்துள்ளனர். ஆண் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டும், பெண் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில் உள்ளனர். ஆண் இடது கையில் கட்டாரி எனும் குத்துவாளையும், பெண் வலது கையில் பூச்செண்டையும் ஏந்தியுள்ளனர்.
தலையிலுள்ள கொண்டை ஆணுக்கு வலப்புறமும் பெண்ணுக்கு இடப்புறமும் சரிந்துள்ளது. இருவரும் நீண்ட காதுகளுடன், கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் அணிந்து காணப்படுகின்றனர். சிற்பத்தின் மேற்பகுதி, கபோதம், கண்டம், கலசங்கள் ஆகிய பகுதிகளுடன் கோவிலின் சாலை விமானம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் காலை தொங்கவிட்டு அமர்ந்தநிலையில் ஊஞ்சலாடும் ஒரு பெண்ணின் சிறிய சிற்பம் உள்ளது.
சதிக்கல் அமைப்பைக் கொண்டு இது கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இப்பள்ளியின் வடக்குப் பகுதியில் ஏற்கனவே இரு சதிக்கற்கள் மக்கள் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு இவ்வூரில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.