நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்தே சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுடன் சேர்த்து, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை.
அரவக்குறிச்சி தொகுதி இது கரூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தொகுதியில் நின்று செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கும்படி சுயேட்சை வேட்பாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருக்கிறது. அதனால்தான் அங்கு இடைத்தேர்தல் நடக்கவில்லை. செந்தில்பாலாஜி தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அது காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடிக்குட்பட்டது. அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் அங்கு வெற்றிபெற்றிருந்தார். அவர் அரசு ஒப்பந்ததாரர் என்பதை மறைத்து தேர்தலில் நின்றிருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார் என புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார். அதை எதிர்த்து சுந்தர்ராஜ் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சுந்தர்ராஜின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது. சுந்தர்ராஜ் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதி காலியானது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் நின்ற ஏ.கே. போஸ் வெற்றிபெற்றார். அந்த தேர்தலின்போது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம், வேட்புமனுவில் கைரேகை பெற்று தேர்தல் ஆணையத்தில் அளித்தார் போஸ். கைரேகை பெற்றபோது ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை, அதனால் அந்த ஒப்புதல் செல்லாது எனவும், இரட்டை இலையில் அவர் வென்றது செல்லாது எனவும், திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. தற்போது போஸ் இறந்ததால் அது காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.