‘காவல் துறையின் இறுதி அறிக்கையில் (Cr.No.49/2022) குறிப்பிட்டுள்ள காரணங்கள் இந்த நீதிமன்றத்துக்கு திருப்திகரமாக இல்லை. விசாரணை அதிகாரி சுட்டிக்காட்டிய இரண்டு காரணங்களும் முரண்பாடானவை. நீதிமன்றத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. உயிரிழந்த மாணவன் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் 5 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இயந்திரத்தனமாக உள்ளது. இந்த நீதிமன்றம் புலனாய்வு அதிகாரியால் தரப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை கோப்பை ஏற்க விரும்பவில்லை. இந்த வழக்கை மேலும் விசாரித்து ஆறு மாதங்களுக்குள் தகுந்த இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும்படி புலனாய்வு அதிகாரிக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.’ - கடந்த 2022 ஜூன் 6ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம்.2 நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலைய ஆய்வாளருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
என்ன வழக்கு இது?
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த விஜயவிநாயகத்துக்கும் சுரேகாவுக்கும் திருமணம் நடந்து 8 ஆண்டுகள் கழித்து பிறந்தான் சிவபிரசாத். ஒரே மகன் என்பதால் பாசத்தைப் பொழிந்து வளர்த்து வந்தனர். 7-ஆம் வகுப்பு மாணவனான சிவபிரசாத் பள்ளியில் முதல் மாணவனாகத் திகழ்ந்தான். கார் போன்ற வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பெரிதும் ஆர்வம் காட்டினான். நண்பன் நித்திஷுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து சைக்கிள், பைக், கார் சம்பந்தப்பட்ட பதிவுகளை வெளியிட்டு வந்தான்.
கடந்த 2022 ஜனவரி 22-ஆம் தேதி காலை 9:20 மணி வரையிலும் தந்தை விஜயவிநாயகத்துடன் விளையாடினான். அவர் உப்புமா ஊட்டிவிட்டதைச் சாப்பிட்டான். அதன்பிறகு அவர் அலுவலகம் சென்றுவிட்டார். சிவபிரசாத் பெட்ரூமில் உட்கார்ந்து ஹிந்தி ஆன்லைன் பரீட்சையை அட்டென்ட் பண்ணினான். காலை 10:45 மணியளவில் வாஷிங் மெஷினிலிருந்த துணிகளை, வீட்டின் இரண்டாவது மாடியில் காயப்போடுவதற்கு சுரேகா எடுத்துச்சென்றபோது, "அம்மா.. இரண்டு கையிலும் வாளி வைத்திருக்கிறாய். பார்த்துப் படியேறு...'' என்று அக்கறையுடன் சொன்னவன், பூட்டு போடாமல் கிரில் கேட்டை மூடிவிட்டு, மீண்டும் ஆன்லைன் பரீட்சை அட்டென்ட் பண்ண பெட்ரூம் சென்றான். 15 நிமிடங்களில் துணியைக் காயப்போட்டுவிட்டு படியிறங்கிய சுரேகா “சிவா.. சிவா..” என்று மகனை அழைத் தார். மகன் வராத நிலையில் அவரே கிரில் கேட்டை திறந்து, பின் வாசல்வரை போய்த் தேடினார். எதேச்சையாக திரும்பிப் பார்த்தபோது, பெட்ரூம் வெளிவாசலில் போட்டோ மாட்டும் சிறிய ஸ்க்ரூ வடிவிலான ஆணியில், நூல் கயிறை கழுத்தில் மாட்டியவாறு, தரையில் நின்ற நிலையில் இருந்தான். அதிர்ச்சியில் சுரேகா சத்தம்போட்டு கதறி அழ, எதிர்வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து கயிறை அவிழ்த்தனர்.
சிவபிரசாத்தை முதலில் தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். தகவல் கிடைத்து தந்தை விஜயவிநாயகமும் வந்து விட்டார். அங்கிருந்த மருத்துவர் அறிவுறுத்தியபடி, சிவபிரசாத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பணியிலிருந்த அரசு மருத்துவர், “கழுத்திலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. உயிர் பிரிந்து விட்டது” என்று தெரிவித்தார். அப்போது, அவனுடைய இடுப்பின் பின்புறத்திலும், வயிற்றிலும் வலுவான கயிற்றுத் தடம் இருந்தது.
சிவபிரசாத்தின் அம்மா சுரேகா, ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல்நிலையத்தில் புகாரளித்தார். நடந்தது கொலைதான் என்ற சந்தேகத்தையும், முன்பகையுள்ள ராமசாமி, அவருக்கு உடந்தையாக முத்துகருப்பன், பாண்டி போன்றோர் இருந்திருக்கலாம் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். காவல்துறையினர் இந்த வழக்கில் பெரிதும் அலட்சியம் காட்டியதால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் சுரேகா. 23-4-2022 வரையிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்காத ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம், உயர் நீதிமன்ற விசாரணையின்போது விசாரணை முடிந்து கைவிடப்பட்டதாகத் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம். 2 நீதிமன்றம், ஆவணங்கள் சமர்ப்பித்ததில் காவல்நிலையம் ஏற்படுத்திய தாமதத்தை அறிந்து, காவல்துறையினரின் அறிக்கையைப் புறந்தள்ளியதோடு, முறையான மறுவிசாரணைக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில் நம்மைச் சந்தித்த சிவபிரசாத்தின் தந்தை விஜயவிநாயகம், “ஆரம்பத்துல இருந்தே இந்த வழக்குல காவல்துறை முறையா விசாரணை நடத்தல. கொலைகூட நடந்திருக்கலாம்கிற கோணத்துல இந்த வழக்கை அணுகல. மோப்பநாயையும் கூட்டிட்டு வரல. வீட்டுக்கு வந்த போலீஸ்கிட்ட, ‘இங்க பாருங்க.. கதவு தாழ்ப்பாள் உடைஞ்சிருக்கு’ன்னு சொன்னேன். அத அவங்க பெரிசா எடுத்துக்கல. மரணம் நிகழ்ந்த நேரத்துல அந்த ஏரியாவுக்குள்ள வந்தவங்க போனவங்கள அடையாளம் தெரிஞ்சிக்கிறதுக்காக, ஒரு வீட்ல இருந்த சி.சி.டி.வி. ஃபுட்டேஜைக்கூட நான்தான் எடுத்து போலீஸ்கிட்ட கொடுத்தேன். மற்றபடி உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கணும்கிற எண்ணம் துளிகூட போலீசுக்கு இல்ல. ஏன்னா.. இந்த வழக்கை தற்கொலை வழக்கா முடிக்கணும்கிற ஒரே நோக்கம்தான் போலீசுக்கு இருக்கு. உங்க பையன் வெப்சைட்ல ஹேங்கிங் சம்பந்தமா கூகுள்ல தேடிருக்கான்னு போலீஸ் சொன்னுச்சே ஒழிய, அவன் தேடுன விபரத்த என்கிட்ட சரியா காட்டல. ரெண்டு கோர்ட்லயும் அந்த எவிடன்ஸ காட்டவே இல்ல. என் மகன் உபயோகப்படுத்துன செல்போன் இப்ப எங்கே இருக்குன்னே தெரியல.
அந்த ராமசாமி ரிட்டயர்ட் ஹெட் மாஸ்டர். ஆனா.. குழந்தைகளையோ, சிறுவர்களையோ அறவே பிடிக்காத மனுஷன். சிவபிரசாத் சைக்கிள் ஓட்டிக்கிட்டு அவரு வீட்டு வழியா போறது பிடிக்காது. திட்டுவாரு. தனிமைல இருக்குறதுனால இரக்கமே இல்லாம எல்லாருகிட்டயும் நடந்துக்குவாரு. சிவபிரசாத் விஷயத்துல அவருக்கும் எங்களுக்கும் முன்பகை இருக்கு. அதனால, அவரு மேல எனக்கு இருக்கிற சந்தேகத்தையும், என் மகன் இறந்த நாள்லயும், அதுக்கு முந்துன வாரத்துலயும் ராமசாமி, அவருக்கு வேண்டிய பாண்டி, முத்துகருப்பன்கிட்ட செல்போன்ல பேசுன விபரங்களயும் எடுக்கச் சொல்லி போலீஸ்கிட்ட சொன்னேன். நான் சொன்னத போலீஸ் காதுல வாங்கிக்கல. காவல்துறையின் பொதுவான நடைமுறையான செல்போன் டவர் ஆய்வையும் பண்ணல. இப்பவும்கூட, ராமசாமிதான் என் மகன கொலை பண்ணிருப்பாருன்னு நான் உறுதியா சொல்லல. என் சந்தேகத்தைத்தான் முன்வைக்கிறேன். விசாரணை பண்ணுனா போலீஸ் என்ன பண்ணிருக்கணும், உன் மகன் இன்ன காரணத்துலதான் இறந்தான்கிற உண்மைய எங்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தா நாங்க எதுக்கு கோர்ட்டுக்கு போகப் போறோம். நான் சந்தேகப்பட்ட மூணு பேரையும் போலீஸ் முறையா விசாரிச்ச மாதிரி தெரியல. கோர்ட்டுல ஒருபக்கம் வழக்கு நடந்தாலும், முதலமைச்சர் தனிப் பிரிவுக்கும் மனு போட்டேன். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் இப்ப என்ன பண்ணுதுன்னா.. அந்த மனுவை முடிக்கிறதுலதான் குறியா இருக்கு” என்றார்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராம சாமியை தொடர்புகொண்டோம். “எனக்கு 78 வயசு ஆகுது. குடும்பத்துல எல்லாரும் கைவிட்டதுல இப்ப தனியா வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கும் அந்த குடும்பத்துக்கும் அப்படி ஒண்ணும் பெரிசா பிரச்சினை இல்ல. சின்ன பசங்க என் வீட்டு முன்னால நின்னு சைக்கிள்ல பெல் அடிச்சிட்டே இருப்பாங்க. இத ஒருதடவை அந்தப் பையன் வீட்ல சொன்னேன். அன்னைக்கு எப்பவும்போல டீ கடைல நின்னு டீ குடிச்சிட்டிருந்தப்ப அந்த பையன் இப்படி பண்ணிட்டான்னு சொன்னாங்க. அப்பத்தான் இது நடந்ததே எனக்கு தெரியும். போலீஸ்கூட வந்து விசாரிச்சாங்க. கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டு வர்றத நான் ரெகுலரா பண்ணுவேன். அப்படி நான் வெளிய போறதுதான் சி.சி.டி.வி.ல இருந்திருக்கும். மற்றபடி எனக்கும் அந்தப் பையன் சாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்றார் தழுதழுத்த குரலில்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர்கண்ணனிடம் பேசினோம். “ஏற்கனவே சிவபிரசாத் கேஸை விசாரிச்சிருக்காங்க. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாத்தயும் வச்சுத்தான் போனதடவை, நடவடிக்கைய கை விட்ருக்காங்க. கோர்ட்ல மறுவிசாரணை பண்ணச் சொல்லிருக்காங்க. போலீஸ் இப்ப மறுவிசாரணை பண்ண ஆரம்பிச்சிருச்சு. சிவபிரசாத் அம்மாவும், அப்பாவும் குழந்தை ஏக்கத்துல இருக்காங்க. மகனோட இறப்பை அவங்களால தாங்கிக்க முடியல. போன் எல்லாம் கோர்ட்ல இருக்கு. அந்த செல் போன்ல சிவபிரசாத் கூகுள்ல என்ன தேடுனாங்கிறத அவன் அப்பாகிட்ட அப்ப இருந்த போலீஸ் அதிகாரி தெளிவா காட்டிருக்கணும். நான் இப்ப புதுசா வந்திருக்கேன். இதுக்கு முன்னாடி கீதாங்கிற இன்ஸ்பெக்டர் இருந்தார். அப்ப டி.எஸ்.பியா சபரிநாதன் சார் இருந்தார். பத்தே நிமிஷத்துல சிவபிரசாத் இறந்தது நடந்திருக்கு. சி.சி.டி.வி.யே அந்த ஏரியாவுல இல்ல. அந்த ராமசாமி வயசானவர். அடுத்த தெருவுல குடியிருக்காரு. அந்த தெருவுல இருந்து சிவபிரசாத் வீட்டுக்கு வர்றதுக்கே பதினஞ்சு நிமிஷம் ஆயிரும். சிவபிரசாத் விளையாண்டதுக்கு ராமசாமி சத்தம் போட்ருப்பாரு போல. அத ஒரு மோடிவா இவங்க சொல்றாங்க. இன்னும் முழுசா விசாரிக்கல. விசாரிச்ச பிறகுதான் உண்மைக் காரணம் தெரியும்” என்றார்.
சிவபிரசாத் ஏன் இறந்தான்? எப்படி இறந்தான்? கொலையா? தற்கொலையா? என்பதை காவல்துறை கண்டுபிடித்து கடமையாற்றாத நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களாக மகன் இறந்ததற்கான காரணம் தெரியாத மன உளைச்சலில் பரிதவிக்கிறார்கள் அவனது பெற்றோர்.