கரோனா விவகாரத்தை ஒவ்வொரு மாநிலமும் கையாளுவதைக் கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் பலரைச் சமீபத்தில் நியமித்தார் பிரதமர் மோடி. அந்த வகையில், தமிழக அரசியல் விவகாரங்களை ஏற்கனவே கவனித்து வரும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ்கோயல் ஆகியோருடன் இணைந்து தமிழகத்தின் கரோனா விவாகரத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு மத்திய கனரக தொழில்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அர்ஜூன்ராம் மேக்வாலும் தமிழகத்தைக் கண்காணித்து கரோனா தொடர்பான விவகாரங்களை பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறார்.
ப்ரித்வி மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால்
இந்த நிலையில், சேலம், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தின் பயனாளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலுவைத் தொகை இந்த ஊரடங்கு காலத்தில் கிடைக்கவில்லை என அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலின் தனி உதவியாளர் ப்ரித்விக்கு தமிழகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. மோடியின் சிஷ்யரான இளைஞர் ப்ரித்வி, தமிழகத்தைச் சேர்ந்தவர்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த ப்ரித்வி, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களையும் ஆராய்ந்த போது தமிழகம் முழுவதுமே 100 நாள் வேலை திட்டத்தின் தொகை நிலுவையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே, அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் ப்ரித்வி. கரோனா தாக்கத்தால் தேசம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள இந்தச் சூழலில், 100 நாள் வேலை திட்டத்தின் நிலுவைத் தொகை பயனாளிகளுக்கு கிடைக்காமல் இருப்பது வேறுவிதமான பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து, உடனடியாக, மத்திய வேளாண்துறை மற்றும் ஊரக பஞ்சாயத்துத் துறை அமைச்சருமான நரேந்திரசிங் தோமரிடம் விவாதித்துள்ளார் அர்ஜுன்ராம் மேக்வால்.
அப்போதுதான், 100 நாள் வேலை திட்டத்தில் இந்தியா முழுவதுமுள்ள பயனாளிகளுக்கான தொகை சுமார் 7,300 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பது மத்திய அமைச்சர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு அமைச்சர்களும் உடனடியாக எடுத்த நவடிக்கையில் 7,300 கோடி ரூபாய் நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டு, உடனடியாக அது பயனாளிகளுக்குப் போய்ச்சேர்ந்துள்ளது.
சிவகங்கை, சேலம், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து புகார் தெரிவித்திருந்த பயனாளிகள், பணம் கிடைத்த நிலையில் ப்ரித்விக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி உதவிகள் இன்னும் என்னென்ன போய்ச்சேரவில்லை என்பதை ஆய்வு செய்யுமாறு தனது உதவியாளர் ப்ரித்விக்கு உத்தரவிட்டுள்ளார் அர்ஜுன்ராம் மேக்வால்.