தமிழ் சினிமாவில் இது அரசியல் காலம். சமீப காலமாக அரசியல் படங்களும் படங்களுக்குள் அரசியலும் அதிகரித்து வருகின்றன. தமிழ்ப்படம் 2 தொடங்கி சர்கார், எல்.கே.ஜி, என்.ஜி.கே என் தொடரும் அந்த வரிசையில், ஆனால் இன்னும் அதிக தைரியத்தோடு இறங்கி அடித்திருக்கிறார் இந்த தர்மபிரபு.
ராதாரவி தன் எமன் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதையடுத்து அந்தப் பதவியை தன் மகன் யோகி பாபுவிற்கு வழங்குகிறார். வாரிசு அரசியலை வெறுக்கும் சித்ரகுப்தன் ரமேஷ் திலக் சூழ்ச்சி செய்து யோகிபாபுவை பதவியில் இருந்து இறக்கி தான் எமனாக ஆசைப்படுகிறார். அதன்படி சாகப்போகும் ஒரு குழந்தையை யோகிபாபுவை வைத்து காப்பாற்றுகிறார் ரமேஷ் திலக். உயிர்களை கொள்ளவேண்டிய எமனே உயிரை காப்பாற்றியதால் கடும் கோபமடைந்த சிவன் மொட்டை ராஜேந்திரன் 7 நாட்களுக்குள் செய்த தவறை எமன் சரி செய்யவில்லை என்றால் எமலோகத்தையே அழித்து விடுவதாக சொல்ல, பிறகு எமன் யோகிபாபு எப்படி இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார், குழந்தையின் உயிருக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதே தர்மபிரபு படத்தின் கதை.
வெள்ளத்தின்போது திரண்ட இளைஞர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவை தவிர்த்து தற்போது உள்ள தமிழ்நாட்டின் சூழலை எமலோகத்தோடு தொடர்புபடுத்தி நையாண்டி செய்து காட்சிப்படுத்தியுள்ளது இயக்குனர் முத்துக்குமரன் அன் கோ. அது பல இடங்களில் சிரிப்பையும், கை தட்டல்களையும் வரவைத்துள்ளது. இது யதார்த்த அரசியல் படமில்லை. ஆனால், யதார்த்தத்தில் மக்கள் நம்பும் களமான எமலோகம், எமன், சித்திரகுப்தன் கதையில் யதார்த்த அரசியலை நக்கல் செய்திருக்கிறார்கள்.
எமலோகத்தில் வாரிசு அரசியல், சொர்க்கத்தில் கலைஞர் - ஜெயலலிதா, தலைவனை காலில் விழுந்து கும்பிடுவது, பதினைந்து லட்சம் ரூபாய்க்கு கோட் சூட், யோகிபாபு பதவியேற்கும்போது கண்ணீர் சிந்துதல் என லேடி முதல் மோடி வரை விட்டுவைக்கவில்லை தர்மபிரபு. இன்னொரு புறம், ஒருவர், “விவேகத்துடன் செயல்படு” என்று சொல்ல உடனே யோகிபாபு, “இல்லை நான் விஸ்வாசத்துடன் செயல்படுவேன்” என்று கூற சினிமா டைமிங்கும் சிறப்பு. பதவியேற்றவுடன் கர்னாடக இசையை அனுப்பிவிட்டு ’தப்பிசை மக்களிசை... இதுதாண்டா நம் இசை’ என்று சமூகத்தையும் பேசுகிறார் இயக்குனர். என்னதான் நல்ல விசயங்கள் என்றாலும் தினம் தினம் நாம் பார்க்கும் செய்திகளையே வரிசையாகக் காட்சிகளாகப் பார்ப்பது ஒரு கட்டத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. மறந்த தலைவர்கள் கதைக்குள் வருவதும் செயற்கை.
யோகிபாபு, டைமிங்க் காமெடி வசனங்கள், சென்னை ஸ்லாங்க் மற்றும் குறிப்பாக அவரை திரையில் பார்த்தாலே ரசிகர்கள் கொடுக்கும் ஆரவாரம் என திரையரங்கையே ஆரம்பத்தில் குதூகலமாக வைத்துள்ளார். இவர் கூடவே பயணிக்கும் சித்ரகுப்தன் ரமேஷ் திலக் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். இவர்களை தவிர்த்து பூமியில் அரசியல்வாதியாக வரும் அழகம் பெருமாள், ராதாரவி, ரேகா, மேக்னா நாயுடு, பாஸ்கி ஆகியோர் கவனம் பெறுகின்றனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் எமலோகத்திலேயே நடைபெறுவதால் ட்ராமா பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பூமியில் நடக்கும் காட்சிகளில் அழுத்தம் இல்லாததால் மனதில் பதியாமல் இருப்பதே இதற்கு காரணம். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் காம்பேக்ட் எமலோகம் பளிச்சிடுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை ஓகே.
தர்ம பிரபு யோகிபாபு ரசிகர்களுக்கும், நாடக ரசிகர்களுக்கும் நல்ல விருந்து கொடுத்திருக்கிறார்.