Skip to main content

’ஒரு சாமானியன் துணிந்தால்...?’ - ‘எண்ணித்துணிக’ விமர்சனம் 

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

yenni thuniga

 

இப்போதெல்லாம் வாரத்துக்கு ஒரு திரில்லர் படமாவது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் அந்த திரில்லர் கோட்டாவில் வெளியாகியுள்ளது எண்ணித்துணிக திரைப்படம். ஜெய், அதுல்யா ரவி நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கிறது?

 

வெளிநாட்டில் இருந்து 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை ஏலத்தில் எடுத்து தன்னுடைய நகைக் கடையில் யாருக்கும் தெரியாமல் பதுங்கி வைக்கிறார் ஒரு தமிழக அமைச்சர். இதை எப்படியாவது அமைச்சரிடம் இருந்து கைப்பற்ற வம்சி தலைமையிலான கொள்ளை கும்பல் முயற்சிக்கிறது. அந்த சமயம் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் காதலர்களான ஜெய், அதுல்யா ஆகியோர் அந்த நகை கடைக்கு சென்று திருமணத்திற்காக நகை வாங்குகின்றனர். அந்த நேரம் கடைக்குள் புகுந்த வம்சி தலைமையிலான கொள்ளை கும்பல் வைரங்களையும் சேர்த்து மொத்த நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு அதுல்யா உள்ளிட்ட சிலரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிடுகின்றனர். இதையடுத்து வம்சியிடமிருந்தும் அந்த வைரங்கள் காணாமல் போய்விடுகிறது. இதையடுத்து தன் காதலியை கொலை செய்த கொள்ளையர்களை தேடி பழிவாங்க ஜெய் கிளம்புகிறார். இன்னொரு பக்கம் தன் வைரங்களையும், அந்த கொள்ளையர்களையும் கண்டுபிடிக்க அமைச்சர் முயற்சிக்கிறார். மற்றொரு பக்கம் வம்சியிடமிருந்து அந்த வைரங்களை யார் கொள்ளையடித்தது என்று கொள்ளை கும்பல் தேடுகிறது. இப்படி மூவரின் தேடல்கள் ஒரே நேர்கோட்டில் வந்து இணைவதே படத்தின் மீதி கதை.

 

இப்படி ஒரு குழப்பம் மிகுந்த கதையை மிக தெளிவான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக கொடுக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் வெற்றி செல்வன். படம் ஆரம்பித்து கொஞ்ச நேரம் மெதுவாக சென்று பிறகு வேகம் எடுத்து ஆங்காங்கே சில ஸ்பீடு பிரேக்கர்களை கடந்து கடைசியில் நிறைவாக முடிந்து ரசிகர்களை ஓரளவு ரசிக்க வைத்துள்ளது. பாடல்களும், க்ளிக்ஷேவான  காட்சிகளும் ஆங்காங்கே அயர்ச்சியை கொடுத்தாலும் திரில்லிங்கான திரைக்கதையும், ஆங்காங்கே வரும் கிரிப்பிங் ஆன காட்சியமைப்பும் படத்தை கரை சேர்த்துள்ளன.

 

ஒரு விறுவிறுப்பான கதையை தேர்ந்தெடுத்த நடிகர் ஜெய் அந்த கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் ஜெய்க்கு அதிகமான வேலை இல்லாமல் இருந்தாலும் தனக்கு கிடைத்த ஸ்பேசில் புகுந்து விளையாடி இருக்கிறார். வழக்கமான நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். அமைச்சரின் காதலியாக வரும் வித்யா பிரதீப் சில காட்சிகளில் கவனம் பெற்றுள்ளார். ஜெய் தந்தையாக நடித்திருக்கும் மாரிமுத்து அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கொள்ளை கும்பல் தலைவனாக வரும் வம்சி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அமைச்சராக நடித்திருக்கும் வைபவ் அண்ணன் சுனில் ரெட்டி நக்கல் நையாண்டி உடனான மிரட்டல் நடிப்பால் ரசிக்கவைத்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் கவனம் ஈர்த்துள்ளார் நடிகை அஞ்சலி நாயர். 

 

தினேஷ் குமாரின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது. சாம் சி எஸ் இன் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்து படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

 

ஒரு டீசன்டான திரில்லர் படம் பார்க்கும் ஐடியாவில் இருக்கும் ரசிகர்கள் துணிந்து செல்லலாம். 

 

எண்ணித்துணிக  - தைரியமானவன் 

 

 

சார்ந்த செய்திகள்