பருத்திவீரன், கொம்பன், கடைக்குட்டி சிங்கம் படங்களுக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் மற்றொரு கிராமத்து கமர்ஷியல் திரைப்படம் விருமன். கொம்பன் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அவருடைய அக்மார்க் ஃபார்முலாவில் உருவாகி ரிலீசாகியுள்ள இப்படம் இவரின் முந்தைய படங்கள் பெற்ற வரவேற்பை பெற்றதா...?
தாசில்தார் பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளுக்கு நான்கு மகன்கள். அதில் நான்காவது மகன் கார்த்தி. கார்த்தி அப்பாவை காட்டிலும் அம்மா மேல் மிகுந்த பாசத்துடன் இருக்கிறார். இதற்கிடையே பிரகாஷ்ராஜ் தன் வீட்டு வேலைக்கார பெண்மணியுடன் முறையற்ற தொடர்பில் இருப்பதை மனைவி சரண்யா பொன்வண்ணன் பார்த்துவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார். தன் அம்மாவின் சாவுக்கு காரணமான அப்பா பிரகாஷ்ராஜை திருத்தி பழிவாங்க துடிக்கிறார் கார்த்தி. எலியும், பூனையுமாக இருக்கும் பிரகாஷ்ராஜ், கார்த்தி பகை இறுதியில் என்னவானது? தந்தை பிரகாஷ்ராஜை கார்த்தி பழிவாங்கினாரா, இல்லையா? என்பதே விருமன் படத்தின் மீதி கதை.
தன்னுடைய ட்ரேட்மார்க் விஷயங்களான ஊர் பெருமை, குடும்ப பெருமை, பெண்களின் பெருமை, உறவுகளின் பெருமை, புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகளில், காதல் சென்டிமென்ட் என தனக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் இறக்கி ஒரு பக்காவான ஹிட் பார்முலாவில் உருவான கிராமத்து ஆக்ஷன் கமர்ஷியல் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. ஒரு மாஸ் ஹீரோவுக்கான காட்சி அமைப்பிற்கு என்னவெல்லாம் தேவையோ அதை சரியான அளவில் சரியான இடத்தில் பொருத்தி படத்தை ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர். அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும்படியான திரைக்கதையாகவே இருந்தாலும், சரியான விதத்தில் கோர்வையான காட்சிகள் அடுத்தடுத்து வந்து அயர்ச்சியை தவிர்க்கிறது. வித்தியாசமாக எதுவும் செய்யாமல் தனக்கு என்ன தெரியுமோ, தனக்கு என்ன வருமோ அதை சிறப்பான முறையில் செய்து கமர்சியல் ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் இயக்குநர் முத்தையா. முத்தையா படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்திலும் அதுபோலவே ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்து படத்திற்கு மிகப் பெரிய பக்கபலமாக மாறியுள்ளன. ஆக்சன் காட்சிகளுக்கு இணையாக செண்டிமெண்ட் காட்சிகளும், நக்கல் நய்யாண்டி காட்சிகளும் சரியான கலவையில் சிறப்பாக அமைந்து தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளது.
ஒவ்வொரு படத்துக்கும் தன் நடிப்பை அழகாக மெருகேற்றி வரும் கார்த்தி, இந்த படத்தில் விருமன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் மிகவும் கம்பீரமான, துடுக்கான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி தியேட்டரில் மீண்டுமொருமுறை கைதட்டல் பெற்றுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். அதேபோல் அட்ராசிட்டி செய்யும் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் எதார்த்தமான நடிப்பை ஜஸ்ட் லைக் தட் வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளார். இவருக்கும் பிரகாஷ்ராஜுக்குமான காட்சிகள் ஜனரஞ்சகமாக அமைந்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் பழைய நாஸ்டால்ஜியா பிரகாஷ்ராஜை நினைவுபடுத்தும் வகையில் கலாட்டாவான நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார்.
படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் தனக்கு கிடைத்த குறைந்த ஸ்பேசில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு அறிமுக நடிகை என்ற உணர்வை தர மறுக்கிறார். கார்த்திக்கு டஃப் கொடுத்து நடித்து நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி உள்ளார். கார்த்தியின் நண்பராக வரும் சூரி கிடைக்கின்ற சின்ன சின்ன கேப்பில் கிடா வெட்டி சிரிக்க வைத்துள்ளார். இவர் ஆங்காங்கே அடிக்கும் ஒரு சில பஞ்ச் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. குஸ்தி வாத்தியாராக வரும் ராஜ்கிரண், அவரின் தம்பியாக நடித்திருக்கும் கருணாஸ், இந்துஜா ரோபோ சங்கர், மைனா நந்தினி ஆகியோர் அவரவருக்கான ஸ்பேசில் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை நிறைவாகச் செய்துள்ளனர். இவர்களைப் போலவே ஆர்கே சுரேஷ், சிங்கம்புலி, வடிவுக்கரசி, ஜி.எம் குமார், இளவரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் தங்களுக்கான வேலையை நிறைவாக செய்துள்ளனர்.
இந்தப்படம் இவ்வளவு பிரம்மாண்டமாக வருவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது ஒளிப்பதிவும், இசையும். கதையில் உள்ள பிரம்மாண்டங்களையும், லொக்கேஷன்களின் பிரமாண்டங்களையும் சிறப்பாக படம்பிடித்து காட்டியுள்ளது செல்வகுமாரின் கேமரா. பெரும்பாலான கிராமத்து அழகை வைடு ஆங்கிள் ஷாட்கள் மூலம் சிறப்பாக காட்சிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அதேபோல் படத்திற்கு இன்னொரு நாயகனாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அமைந்துள்ளது. இவரின் 'கஞ்சா பூ' பாடல் ஏற்கனவே ஹிட்டடித்த நிலையில் மற்ற பாடல்களும் தாளம் போட வைக்கின்றன. அதே போல் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிடும் பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களுக்கு கூஸ்பம்ப் மொமன்ட்ஸ்களை ஏற்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
படத்தின் கதையும், கதைக் களமும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய சில படங்களை ஞாபகப்படுத்துகிறதும், படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் குணமும், தன்மையும் ஏற்கனவே பார்த்தது போல் இருப்பதும், படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதும், அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பதும் மைனஸாக இருந்தாலும், திரைக்கதையின் வேகமும், காட்சிக்கு காட்சி இருக்கும் விறுவிறுப்பும், நல்ல செண்டிமெண்ட்டும் கடைசிவரை ஒர்க் அவுட் ஆகியிருப்பதால் இப்படத்தை கட்டாயம் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.
விருமன் - கிராமத்து கமர்ஷியல் திருவிழா!