இந்தியாவில் முதல் முதலாக லாஜிஸ்டிக் அறிமுகப்படுத்தியவரும், விஜயானந்த் ரோடு லைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான கர்நாடகத்தைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியாகி உள்ள கன்னட உலகின் முதல் பயோபிக் திரைப்படமான விஜயானந்த் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவு ஈர்த்துள்ளது?
ஆரம்ப காலங்களில் தச்சு தொழிலில் ஈடுபட்டு வரும் விஜய் சங்கேஸ்வரர் அந்த தொழிலை விட்டுவிட்டு லாஜிஸ்டிக் டிரான்ஸ்போர்ட் பிசினஸில் களம் இறங்குகிறார். ஆரம்பத்தில் அவரது தந்தை உட்பட பலரிடமும் இந்த தொழிலுக்கு போதிய வரவேற்பு கிடைக்காதது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் போகப்போக தன்னம்பிக்கையை விடாமல் முயற்சி செய்து எப்படி லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலிலும், அதே சமயம் தினசரி பத்திரிகை தொழிலிலும் முன்னேறி இன்றைய இளைஞர்களுக்கு முன் உதாரணமாக விஜய் சங்கேஸ்வரர் திகழ்கிறார் என்பதை விஜயானந்த் திரைப்படம் விவரிக்கிறது.
ஏற்கனவே ஹிட்டடித்த கே ஜி எஃப், காந்தாரா திரைப்பட வரிசையில் இடம்பெறும் நோக்கில் வெளியாகி இருக்கும் இந்த விஜயானந்த் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காத வகையில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீப காலங்களாக கண்டன்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஃபிலிம் மேக்கிங் மற்றும் திரைக்கதை அமைப்பில் மிகுந்த கவனம் செலுத்தி அதில் அசுர வெற்றி கண்டு வரும் கன்னட சினிமா இந்த படத்திலும் அதே உத்வேகத்துடனும் பயணித்து மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
ஒரு பயோபிக் திரைப்படத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அதை எல்லாம் சிறப்பாக செய்து தேவையில்லாத விஷயங்களை தவிர்த்து விட்டு ஒரு திரைக்கதைக்கு எந்தெந்த அம்சங்கள் தேவையோ அவை அத்தனையும் தரமாக அமைக்கப்பட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்துள்ளது. கதையாக பார்க்கும் பொழுது மிகவும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தாலும் திரைக்கதையாக பார்க்கும்பொழுது இது ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்ல வைக்காமலும் அதே சமயம் எந்த வகையிலும் ரசிக்க வைக்க முடியாத படம் என்றும் சொல்ல வைக்காமல் ஒரே நேர்கோட்டில் படம் பயணித்து டீசன்ட் ஹிட் படமாக அமைந்துள்ளது.
இன்னொரு பக்கம் திரைக்கதை காட்சி அமைப்புகளை தாண்டி நாயகனாக நடித்திருக்கும் நடிகர் நிஹால் விஜய்யானந்த் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப உடல் அமைப்பு, முகத்தோற்றம், பாடி லாங்குவேஜ் என அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார் போல் முதிர்ச்சியான நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி தேர்ந்த நடிகராக திகழ்ந்திருக்கிறார். இவருக்கு நன்றாக ஈடு கொடுக்கும் வகையில் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரிஷிகா சர்மா. இவரது துல்லியமான திரைக்கதை அமைப்பும் அதற்கு ஏற்றவாறான காட்சி அமைப்பும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருப்பது மேக்கிங் மற்றும் அதில் நடித்த நடிகர்களின் பங்களிப்பு ஆகும். அக்காலம் தொட்டு இக்காலம் வரை விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கையில் நடந்த உத்வேகம் அளிக்கக் கூடிய விஷயங்களை டீசன்ட் பயோபிக் படமாக கொடுத்து ஒரு இயக்குனராக கவனம் பெற்று இருக்கிறார்.
படத்தின் நாயகியாக வரும் ஸ்ரீபிரகலாத் வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். இவருக்கு நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் நிறைவாக செய்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ஆனந்த் நாக், நாயகனுடன் நடித்திருக்கும் வினயா பிரசாத், பாரத் போபண்ணா, அர்ச்சனா கொட்டிகே ஆகியோர் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்து படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றனர்.
கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகள் சிறப்பாக காட்சி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 1980 களில் வரும் காட்சிகள் தத்ரூபமாக அமைந்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. இவருக்கு உறுதுணையாக கலை இயக்குனரின் பங்கு சிறப்பாக அமைந்து படத்தை சிறப்பாக அமைய உதவி செய்துள்ளது. அதேபோல் கோபி சுந்தர் இசையில் மெலடி பாடல்கள் தரமாகவும் பின்னணி இசை படத்தை ஹாலிவுட் லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
மணிரத்னத்தின் குரு படமும் கிட்டத்தட்ட இதே படத்தை போன்று ஒரு பயோபிக் படம் என்றாலும் அப்படத்தில் இருந்த விறுவிறுப்பும், ஒரு பிரெஷ்னசும் இப்படத்தில் சற்றே மிஸ் ஆவது மட்டும் படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் படத்தின் மேக்கிங்கும் அதில் நடித்த கதாபாத்திரங்களின் அழுத்தமான நடிப்பும் படத்தை ஒரு டீசன்ட் பயோபிக் படமாக மாற்றி இருக்கிறது.
விஜயானந்த் - உத்வேகம்!